அன்றொரு நாள்: ஜனவரி:25: III
யாரோ? இவர் யாரோ?
பழி சுமந்தவரும், பழி சாற்றியவருமான இவர் தான் மிஸ்டர் பானர்ஜியா, டாக்டர் மஹ்மூதா, ஹரி சிங்கா, மிஸ்டர் டி.ஒயிட்டா, சி.மார்ட்டின்னா, டி.கார்ஷியாவா, நரேந்திர நாத் பட்டாச்சார்ஜீயா அல்லது மனபேந்திர நாத் ராய் அவர்களா? மேற்கு வங்காளத்தில் ’24 பர்காணாக்கள்’ என்ற வரலாற்றில் பதிவு பெற்ற மாவட்டத்தின் குக்கிராமம் ஆன அரபேலியாவில் சம்ஸ்க்ருத ஆசிரியரான தீனபந்து பட்டாச்சார்ஜீ அவர்களின் மைந்தன் நரேந்திர நாத், மார்ச் 21, 1887 அன்று பிறந்தவர். ‘விளையும் பயிர் முளையிலே’ என்பதற்கேற்ப, பாலபருவத்திலேயே, பங்கிம் சந்திரர், ஸ்வாமி விவேகாநந்தர் அவர்களது கருத்துக்கிணங்க, தொண்டு செய்வதில் கவனம் செலுத்தினார். ஸுரேந்திரநாத் பானர்ஜீயின் உரை கேட்க சென்றதற்காக, 1905ல் பள்ளியிலிருந்து தள்ளப்பட்டார். ஶ்ரீ அரவிந்தர் பக்கம் சாய்ந்தார். அவர் தானாகவே எல்லாம் (வெடிகுண்டு தயாரிப்பு, துப்பாக்கி பிரயோகம் உட்பட) கற்றுக்கொண்டவர்.புரட்சிக்காகக் கொள்ளையடிக்கவும் தயங்கவில்லை. புரட்சிக்கும், சூழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளை இவர் அழுத்தமாக உரைத்து வந்தாலும், 1910ல் அரசு, இவரை ஹெளரா-சிப் பூர் சூழ்ச்சி வழக்கில் உள்ளே தள்ளியது. உள்ளிருந்தபடியே, இவரும், ஜதீனும் புரட்சிக்குத் திட்டம் வகுத்தார்கள். 1914 வரை சன்யாசி வேடத்தில் சுற்றி வந்த நரேன், கிழக்காசியா, மேற்கு அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஜமா சேர்த்தார். இவருடைய வாழ்க்கை அதிசயமான திடீர் அதிர்ச்சி சம்பவங்களின் தொகுப்பு. வேறு வழியில்லாமல், மிகவும் சுருக்கி விட்டேன்.
முதல் உலகயுத்தம் தொடங்கியவுடனேயே, இவரை பார்க்க ஜெர்மனியிலிருந்து கல்கத்தாவுக்குத் தூதர் வந்தார். அதன் விளைவாக, இவரும் மார்ட்டின் என்ற புனைப்பெயரில் படேவியா (தற்கால இந்தோனேஷ்யா) சென்றார், ஆயுதம் கொணர. ஜெர்மானியர்கள் பின் வாங்கினர். இவரும், வெவ்வேறு பெயர்களில் மலேயா, இந்தோ-சைனா, கொரியா, ஜப்பான் சென்று ஆதரவு தேடினார். டோக்யோவில் ராஷ்பிஹார் போஸ் அவர்களின் உதவியுடன், நாடு கடத்தப்பட்டு இருந்த சீன அதிபர் சன் யாட் சென் அவர்களை ( இவர்கள் இருவரை பற்றியும் ஒரு நாள் எழுதவேண்டும்.) சந்தித்து, ரகசியமாக சைனா சென்றார். ஜெர்மன் தூதரை சந்தித்து, அமெரிக்கா வழியாக, ஃபிரான்ஸ் நாடு சென்று கிருத்துவ போதனை படிக்க ஃபாதர். சார்லஸ் மார்ட்டின் என்ற பெயரில் பொய் தஸ்தாவேஜுகளை பெற்றுக்கொண்டார். எல்லாம், ஆயுதங்கள், கப்பல், கப்பலாக, வாங்க. ஆனா பாருங்கோ. சான் ஃபிரான்ஸிஸ்கோ வந்தவுடன், நாளிதழ்களில் ‘அபாயகரமான ஒரு ஹிந்து புரட்சிக்காரன் வந்திருக்கிறான்’ என்ற செய்தி முழங்கியது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தலைவர் டாக்டர் ஜார்டனிடம், இவரை இழுத்துச்சென்றார், நண்பர் தனகோபால் முக்கர்ஜீ. புதிய நாம கரணம்: மனபேந்திரநாத் ராய். அதுவே எம்.என்.ராய் என்று நிலைத்து விட்டது. வாழ்க்கையிலும் திருப்புமுனைகள்.
அங்கு அறிமுகமான எவெல்வின் ட் ரெண்ட்டை மணந்தார். (பிற்காலம், அவர் விலக, வேறு திருமணம் நடந்தது.) ந்யூ யார்க் சென்று, லாலா லஜ்பத் ராயிடம் (அந்த பாஞ்சால சிங்கம் பற்றி சீக்கிரமே எழுதுகிறேன்.) அடைக்கலம் புகுந்தார். ந்யூ யார்க் நூலகத்தில், மை டியர் செல்வன், அவர் கம்யூனிசம் பயின்றார். ( அக்காலத்து அமெரிக்கா பரவாயில்லை!)
அமெரிக்கா ஜெர்மனி மேல் ஏப்ரல் 1917ல் போர் அறிவித்து, புரட்சிக்காரர்களை கைது செய்தது. இவரோ மெக்சிகோவுக்குத் தப்பி சென்று, டாக்டர்.ஜார்டனின் அறிமுகத்தால், மெக்சிகோ அதிபருடன் கை கோர்த்தார். அங்கே மிகவும் பாப்புலர். மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபனம் செய்தார். ஏழ்கடல் கடந்து, லெனினுடன் நெருக்கம் அதிகரித்தது. 1920 வருட உலகளாவிய கம்யூனிஸ்ட் காங்கிரஸ்ஸில், லெனினுடன் அபிப்ராய மோதல். ஆனால், லெனின் இவருடைய கூற்றுக்கு மிகவும் மதிப்பு கொடுத்தார். இவர் கம்யூனிசத்தின் உலகளாவிய தளத்தில் முக்கிய புள்ளி. அக்டோபர் 17, 1920 அன்று டாஷ்க்கெண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கினார். இந்த தேதி முக்யம். பிற்காலம், தமிழ்நாட்டை இணைத்துப் பேசுகிறேன். 1923ல் ஜெர்மனி சென்று, இந்திய விடுதலை போராட்டத்தை ஊக்குவிக்க, எழுதத் தொடங்கினார். இந்திய அரசாங்கமும், திரும்பத் திரும்பத் தடை விதித்த வண்ணம். இவருக்கு கம்யூனிஸ்ட் உலகில் இருந்த மதிப்பு வியக்கத்தக்க வகையில் இருந்தது. சைனாவில் உள்நாட்டு சச்சரவுகளை தீர்க்க, இவர் தான் அனுப்பபட்டார். இருந்த போதிலும் கம்யூனிசத்தை எதிர்த்த இதழ் ஒன்றில் எழுதிய குற்றத்திற்காக, கம்யூனிசத்தின் உலக ஸ்தாபனத்திலிருந்து விலக்கப்பட்டார்.
டாக்டர் மஹ்மூத் என்ற புனைப்பெயரில் 1930ல் இந்தியா வந்தடைந்த எம்.என்.ராய் கைது செய்யப்பட்டதைப் பற்றி நேற்றே படித்தோம். சிறையில் கட்டுக்கட்டாக நூல்கள் எழுதினார். அப்பீலின் மீது சிறைவாசம் ஆறு வருடங்களாகக் குறைக்கப்பட்டு, நவம்பர் 1936ல் வெளி வந்தபின் இந்திய தேசீய காங்கிரஸ்ஸில் சேர்ந்தார். நேதாஜி சுபாஷ் போஸை ஆதரித்துப்பேசினார். ஆனால், பல திருப்புமுனைகள்; பல உலகளாவிய சிந்தனைகள். அவற்றில் ஒன்று: ‘இறங்குமுகத்தில் உள்ள கலோனிய அரசியல் பாசிஸத்தை விட எவ்வளவோ மேல்.’ எனவே, இரண்டாவது உலக யுத்தத்தின் போது, இவர் ஹிட்லர்-முசோலினியை எதிர்த்தார். 1940-46 காலகட்டத்தில் இந்தியாவை பற்றியும், சமூக முன்னேற்றத்தை பற்றியும், இவர் எழுதியவை தீர்க்கதரிசனமாகத் திகழ்கின்றன. ஒரு விஷயத்தில், அவர் திண்ணமாக இருந்தார். ‘...பிரதிநித்துவ குடியாட்சி என்று ஒன்றுமில்லை. கட்சியென்று ஒன்று வேண்டாம். நாடாளும் மன்றம் வேலைக்கு ஆவாது.. ஒரு அரசியல் சாஸன சபை வேண்டும். சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்க வேண்டும். லஞ்சம் ஒழியவேண்டும்...’.
இதய நோயினால் பீடிக்கப்பட்ட எம்.என்.ராய் மறைந்த தினம், ஜனவரி 25, 1954. அவருடைய நினைவாஞ்சலியாக, இந்த தொடர் அமைந்தது.
இன்னம்பூரான்
27 01 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment