அன்றொரு நாள்: ஜனவரி:11
காந்தி வந்தாலும் வந்தார்!
மஹாத்மா காந்தி வந்தால், போலீஸ் அடுத்து வரும். மக்கள் பெரும்திரளாக ஓடோடி வருவார்கள். விடுதலை பற்று தொற்றிக்கொள்ளும்; பரவும். வாய்மை செழிக்கும். இராட்டை சுற்றும். யாகத்தில் வேள்வித்தீ கொழுந்து விட்டு எரிவது போல, ஒரு அமைதி புரட்சி பிறக்கும். தியாகம் கண்கூடு. அதிகாரம் அரியணையிலிருந்து இறங்கும், காலம் தாழ்ந்தாலும்.
காந்தி~இர்வின் ஒப்பந்தம் சென்னை சேத்துப்பட்டு பாலத்துடன் நின்று விட்டதோ! கலோனிய அரசு ஒப்பந்தத்தை மீறியது. அதை கண்டிப்பதற்காக, ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்ட காந்திஜி ஜனவரி 4, 1932 அன்று கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது. மக்கள் வெகுண்டு எழுந்தனர். நாடு முழுதும் போரோட்டங்கள். அவற்றில் ஒன்று ஒரு சிற்றூரில் நடந்தது. அங்கு, ஜனவரி 10, 1932 அன்று தேசபந்து வாலிபர் சங்கத்தின் ஊர்வலம், சத்தியாக்ரகம்: கலந்தவர்களில், இனபேதம், சாதி பேதம், மாநில பேதம் எல்லாம் கடந்து ஒரு மஹாராஷ்டிரர், ஒரு குஜராத்தி, செட்டிக்கு தத்துப்போன ஐயங்கார் ஒருவர், ஏழை நெசவாளி ஒருவர். ஜாம்நகரின் பிரபல குடும்பத்தில் பிறந்த பத்மாவதி; தென்னகத்தைத் தாயகமாக அமைத்துக்கொண்ட அவரது கணவர் பி.டி.ஆஷர். பிரபலமானவர்கள், செல்வந்தர்கள்; அவர்களை ஊர்வலத்தில் வைத்து அடித்தால், பிரச்னைகள் எழலாம். அதனால், அவர்கள் இருவரையும் முன்கூட்டியே கைது செய்து விட்டார்கள். பர்மாவில் இராட்டை சுழற்றி, கதர் புரட்சி செய்த லக்ஷ்மி அம்மாளிடமிருந்து காந்திஜியினால் வலுக்கட்டாயமாக தத்து எடுத்துக் கொண்டப்பட்ட பி.எஸ்.சுந்தரம், குமரன்,ராமன் நாயர், விஸ்வநாத நாயர்,நாச்சிமுத்துக்கவுண்டர்,சுப்பராயன், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி, நாரயணன் என்ற நவரத்னங்கள் சட்டத்தை மீறி ஊர்வலம் சென்றனர். தலைமை தாங்கிய பி.எஸ்.சுந்தரம் அவர்களின் தலைமை உரையிலிருந்து ஒரு பகுதி:
‘...இன்று சட்டமறுப்புச் செய்யும் நாம் நிச்சயமாக மரணத்துடன் விளையாட நேரிடும்...ஒன்று மட்டும் நிச்சயம். நம்மைச் சிரமமின்றிப் போலிஸ் கைது செய்யாது. இன்று ஊர்வலத்தில் செல்லும் நாம் அனைவரும் உயிருடன் திரும்பமாட்டோம் என்ற முடிவுடன் செல்லவேண்டும்...’.
எந்த வேளையில் இப்படி அவர் அச்சான்யமாகச் சொன்னாரோ! குமரன் தலையில் காந்திக்குல்லாய் அணிந்து கையில் மூவ்ர்ணக்கொடியை ஏந்தி, ஊர்வலத்தின் முதல் தொண்டனாகக் கம்பீரமாகச் சென்றான். கண்மூடித்தனமான, மூர்க்கத்தனமான தடியடி போலீஸ் ஸ்டேஷன் வாசலில். அடிபட்டு வீழ்ந்தவர்களை நையப்புடைத்தனர், போலீஸ். 19 எலும்பு முறிவுகளுடன் வீழ்ந்த பி.எஸ்.சுந்தரம் எப்படியோ பிழைத்து விட்டார். குமரன் மேல் வழக்குப் போடமுடியவில்லை. அவர் தான் நினைவு திரும்பாமல் அமரராகி விட்டாரே. ஜனவரி 11, 1932 அன்று. இன்று திருப்பூர் அமரனின் அஞ்சலி தினம். மேலே சொல்வதற்கு என்ன இருக்கிறது?
இன்னம்பூரான்.
11 01 2012
உசாத்துணை:
த. ஸ்டாலின் குணசேகரன்: தொகுப்பாசிரியர்: (2000) விடுதலை வேள்வியில் தமிழகம்: ஈரோடு: நிவேதிதா பதிப்பகம் - பி.ஆர்.கணேசன்: பத்மாவதி ஆஷர், பி.ராமசாமி: பி.எஸ்.சுந்தரம், அ.செ.கந்தசாமி: திருப்பூர் குமரன்:
No comments:
Post a Comment