‘வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி...!’
-பளிக்கறை புக்க காதை: 112-121: மணிமேகலை.
இன்னம்பூரான்
செப்டம்பர் 8, 2015
சென்னை மாநகரத்தின் பழம்பெருமை வாய்ந்த மருத்துவ மையம்: General Hospital,Madras & Madras Medical College. நானூறு வருடங்களுக்கு மேலான பாரம்பரியம். அங்குள்ள செரிமான வியாதிகளுக்கு அறுவை மூலம் தீர்வு காணும் துறை சுதந்திரதினம் பொருட்டு, மக்களிடையே குறுகிய காலகட்டத்துக்குள் ஒரு கட்டுரை போட்டி (500 சொற்களுக்குள்) நடத்துவதாகவும், ஜூலை 31, 2015 கெடு என்றும் அறிவித்தார்கள். நான் அறிவிப்பு வந்த அன்றே கட்டுரையை அனுப்பிவிட்டு, ஆகஸ்ட் 2 அன்று வெளியூர் சென்று விட்டேன். இதை மறந்தும் விட்டேன். ஆகஸ்ட் 14 மாலை ஒரு குறும் தகவல். உங்கள் கட்டுரைக்கான மெடலை நாளை வந்து பெற்றுக்கொள்ளவும். உம்மை சிறப்பிப்போம். [‘எல்லாரும் காத்திருப்பார்கள், உடனே வர’ என்று நினைத்திருப்பார்கள் போல!] நான் போக இயலவில்லை. என் தம்பி மூலமாக கொடுத்து அனுப்பினார்கள்.
கட்டுரை இங்கே:
‘வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி...!’
-பளிக்கறை புக்க காதை: 112-121: மணிமேகலை.
மணிமேகலை காப்பியத்தில் ‘செயல் திறனுடையவனே! கேட்பாயாக’ என்று விளித்த சொற்றொடரே, நோயற்ற வாழ்வை மக்களே அமைத்து கொள்ள முடியும் என்பதை உணர்த்த, பொருத்தமான தலைப்பு. அசகாய சூரர்கள் நமது மக்கள், துயில் கலைந்துவிட்டால்!
அன்றாட வாழ்க்கையில் நாம் தூய்மையுடன் இயங்கினால் நோய்கள் பல அணுகா. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பற்பல கிருமிகளை அண்ட விடாது. கை கால் கழுவுவதின் முக்கியத்துவத்தை செம்மல்வைஸ் 1847 லேயே நிறுவி விட்டார். இல்லம் தோறும் தங்கு தடையில்லாமல் கொழிக்கும் குப்பையையும், கூளத்தையும் அகற்றி சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. மகட்பேறு காலத்து கவனிப்பு, மழலைகளுக்கு தடுப்பூசி, வளரும் பருவத்திலிருந்து உடற்பயிற்சி, உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும் கவனம், நடை, உடை, பாவனைகளில் பண்பு, லாகிரி விலக்கு, பாவேந்தரின் ‘குடும்ப விளக்கு’ இல்லறம், முதியோர் சேவை ஆகியவற்றை கற்றுத்தரக்கூடிய விழிப்புணர்ச்சி, ‘வரப்புயர...குடி உயர்வது’ போல, வாழ்க்கைப் பயணத்தின் தரமுயர்த்தும். பட்டி, தொட்டி தோறும், மக்களை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். விழிப்புணர்ச்சி, திருமூலர் ‘உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்’ என்று அருளிய ஆலயத்தின், அடித்தளம்.
சுகாதாரத்தை பள்ளிகளில் ஆசிரியர்கள் அனுபவக்கூறாக, சுயநடத்தை மூலம், படிப்படியாக பயிற்சியுடன் கற்றுக்கொடுக்கவேண்டும். காந்தீயத்தின் அடிப்படையில் கழிவறை சுத்தம் செய்வது முதல் உறுப்பு தானம் வரை கற்பிக்கப்படவேண்டும். விடலைப்பருவம் வருமுன் மென்மையான பாலியல் பாதுகாப்புப்பாடங்களை பெற்றோர் உதவியுடன் அளிப்பது போன்ற ‘வருமுன் காப்போன்’ செயல்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். அறியாமையினாலும், அசட்டையினாலும், புற்று நோய், நீரழிவு, இதய பாதிப்புகள், இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மக்கள் மிகவும் தாமதித்து வருவதால், உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. பசுமரத்தாணி போல் மனதில் படியும் முறையில், எச்சரிக்கைகளை சித்தரித்து விளக்குவது எளிது. சான்றாக,எதிராஜ் கல்லூரியும் மதராஸ் மருத்துவ கல்லூரியும் இணைந்து, காய்ச்சிய எண்ணையில் திரும்பத்திரும்ப சமைப்பதின் அபாயத்தை நிரூபித்துள்ளன. உள்ளூர் ஆர்வலர்கள் மூலம் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து, ஆலோசனை வழங்கி, சிறுநீரகம் திறன் இழப்பத்தை தடுத்தாட் கொள்ளமுடியும் என்பதை சென்னைக்கு அருகே நிரூபித்ததை, ‘நேச்சர்’ என்ற பிரபல மருத்துவ இதழ் பாராட்டியிருக்கிறது. உடனடியாக, திறந்த மனதுடன், இத்தகைய பணிகளுக்கு அரசும் வடம் பிடித்தால், கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்; செலவு கணிசமாகக் குறையும். மக்களே நோயற்ற வாழ்வை அமைத்துக்கொள்வார்கள். வருங்கால சந்ததிகள் நீடூழி வாழ்வார்கள். மருத்துவ படிப்பில் சமுதாய நலன் பொருட்டு இயங்கும் ‘வருமுன் காப்போன்’ துறை மேலும் பிரகாசப்படுத்தப்படவேண்டும்.
சித்தம், யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் குறை காணத் தேவையில்லை. அவற்றின் மேன்மையை ஆய்வு மூலம் கண்டறிவது, அரசின் கடமை. எனினும்,பாமரர்களுக்கு உகந்த நிவாரணம் பற்றியும், போலி வைத்தியர்களை தவிர்க்கவும் ஆலோசனை தரும் மையங்கள் பெருகவேண்டும். உதாரணமாக, நீரழிவு நோய்க்கு பூரண நிவாரணம் எந்த முறையிலும் கிடையாது. ஆராய்ச்சி மூலம் அலோபதி அந்த வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. புற்று நோய் தீவிரமானது; உயிர் கொல்லி. இன்றே அறுவை சிகிச்சை அவசரம் என்ற நிலையில் மற்ற முறைகள் உதவா. தற்காலம், இந்த சிக்கல்களை அவிழ்க்க முடியாமல் பாமரன் திண்டாடுகிறான்; இறந்தும் போகிறான், சொத்துப்பத்துக்களை இழந்தபின். பணம் பறிக்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் பெருகி விட்டன. வைத்தியம் சம்பந்தமான காப்புரிமை திட்டங்களை தணிக்கை செய்யும் அளவுக்கு மக்கள் மன்றங்கள் உருவாக வேண்டும்.
அறுவை சிகிச்சைகள் மிகவும் முன்னேறிவிட்டன. வயறு அதிசயங்கள் நிறைந்த ஆலயம் என்றொரு மருத்துவ பழமொழி. தற்காலம், செரிமான வியாதிகள் பொருட்டு இயங்கும் அறுவை சிகிச்சைத்துறை அவற்றை விட அதிசய நிவாரணங்கள் தருகிறது. மற்ற அவயவங்கள் பொருட்டும் அத்தகைய முன்னேற்றம் காண்கிறோம். அரசு நடத்தும் ஆஸ்பத்திரிகளில் ஏழைபாழைகளுக்கு இலவசமாகவே நிவாரணம் கிடைக்கிறது. கடினமான, சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சைகள் அன்றாடம், வாகை சூடி, நிறைவேறுகின்றன. இவற்றை பன்மடங்கு பெருக்குவதும், நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் இவை எளிதில் கிடைப்பதும் அவசரத்தேவை. மக்கள் முடிந்தவரை நற்பெயர் பெற்ற அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்வது சாலத்தகும்.தொலைநோக்கில் பார்த்தால், இது தான் சிக்கனம், மக்கள் சேவை, மருத்துவ சாத்திரத்தின் இலக்கு.
முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் மருத்துவத்தின் தேவை ஏறி வருகிறது. பெற்றெடுத்த செல்வங்களும், சமுதாயமும், அரசும், முதியோர்களுக்காக, இணைந்து பயணிப்பது உசிதம். கவனத்துடன் செயல் பட்டால், குறைந்த செலவில் அதிக பயன் காண முடியும். உளவியல் இங்கு கை கொடுக்கும். அன்பு அருமருந்தாக நிவாரணம் தரும்.
இறந்தவர்களின் உறுப்புக்கள் மற்றவர்கள் உடலில் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு இறவாவரம். தமிழகத்தில் நடக்கும் உறுப்பு தானம் பற்றிய அதிசய செய்திகளே விழிப்புணர்ச்சியின் அடித்தளம். முடிவாக கூறப்போனால், உறுப்புகளுக்கு ஒரு மறுவாழ்வு திண்ணம். அதைப்பற்றி இடை விடாத பிரசாரமும், சட்டத்திருத்தங்களும் தேவை.
நோயற்ற வாழ்வை மக்களே அமைத்து கொள்ள முடியும் என்பதை விளக்க ஒரு நூலே தேவை. எனவே, இந்த கட்டுரை ரத்னசுருக்கமான ஒரு அறிமுகமே. [497]
-#-
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com