Saturday, September 13, 2014

என்னத்தைச் சொல்ல ! ~4


என்னத்தைச் சொல்ல! – 4
  1. Friday, September 12, 2014, 5:38

–இன்னம்பூரான்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=50443



ைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்  (10.09.2014) கல்லையும் கரைக்கும் உருக்கமான நிகழ்வு பற்றிய செய்தி: கும்முடிப்பூண்டி பகுதியில் மழை பெய்து தெருவில் நீர் தேக்கம். அதினுள் ஒரு உயிரோட்டமுள்ள மின்கம்பி. கடக்க முயன்றவர்களை பிள்ளைத்தாய்ச்சி நாய் ஒன்று பலமாக குரைத்து எச்சரித்ததை அந்த மாந்தர்கள் மதிக்கவில்லை. மனிதாபிமானத்துடன், அந்த மிருகம் தானே குதித்து ஆத்மதியாகம் செய்து, அவர்களை காப்பாற்றியது.  நன்றியுணர்வுடன், அந்த பேட்டை மக்கள் அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் அநாதையாக விட்டுச்சென்ற நாய்குட்டிகளை தத்து எடுத்துக்கொண்டார்கள். இங்கு ‘இட்டார் பெரியோர்’ என்று பார்த்தால், அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் தான் உயர் சாதி.  மெளலிவாக்கம் மாடிக்கட்டிடம் வீழ்ந்ததற்குக் காரணம், மனித நேயமற்ற மானிட மனப்பான்மை. புலன் பெயர்ந்து வந்த கூலிகளின் உற்ற தோழர்களாக வாழ்ந்த இரு தெரு நாய்களின் உத்தமபுருஷ தகுதியை சொல்லி மாளாது. போலீஸ் மோப்பநாய்கள் உண்மை ஊழியர்கள். இங்கிலாந்தில் ராணுவ மோப்பநாய்களுக்கு அபரிமித மரியாதை. இது நிற்க.
ஊடகங்கள் கேட்க மறந்த சில கேள்விகள்:
  1. உயிரோட்டமுள்ள மின்கம்பி அறுந்தது மின்சார துறைக்கு ஏன் தெரியவில்லை?
  2. அல்லது, தெரிந்தும் வாளாவிருந்தனரா?
  3. நாய் அபாயத்தைக் குறிக்கும்போது குரைக்கும் விதமே அலாதி. புத்தியுள்ள மாந்தருக்கு அது தெரியும். அப்படியானால், கடக்க விழைந்த மனித தெய்வங்களுக்கு புத்தியில்லையா?
  4. மின்கம்பி விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதா?
  5. அப்படியானால் என்ன முடிவு?
  6. இல்லையென்றால், ஏன்?
  7. நாய்க்குட்டிகளுக்கு அரசு மான்யம் கிடைக்குமா?
  8. ஆம் என்றால், அதை கண்காணிப்பார்களா?
  9. இல்லை என்றால், மனிதனுக்கு ஒரு விதியா? விலங்குகளுக்கு வேறு நடுவுநிலைமை ஒழிந்த சால்ஜாப்பு எப்படி நியாயப்படுத்தப்படும்?
என்னத்தைச் சொல்ல?

-#-


இன்னம்பூரான்
10 09  2014
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்

www.olitamizh.com

Monday, September 8, 2014

என்னத்தைச் சொல்ல! 3

என்னத்தைச் சொல்ல! 3

இன்னம்பூரான்
06 09  2014
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்:http://www.vallamai.com/?p=50274
பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம். சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது. 
செய்தித்துகள் கூட்டம்:
 ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்... சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது...கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது... தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன... பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.
இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்? 
இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg