பூதாதிகாசம்
ஓரங்க நாடகம்
இன்னம்பூரான்
28 02 2014
இடம்: கரும்புலியூர் ஆஸ்தானம்.
நேரம்: சாயும் காலம்.
பொருள்: அதுவும் இதுவும்.
ஏவல்: ஜரிகா புத்ரன் என்ற ....
பாத்திரங்கள்: பூதாதிகாசத்தனார் (தலை மாந்தர்)
மாத்ருதீபனார் ( அவருடைய மைத்துனர்)
ஏழுமலை ( எடுபிடி)
அபய குசலாம்பிகை ( தலைவி)
(திரை விலகுகிறது)
வீட்டு முகப்பு: அபயகுசலாம்பிகை விலாசம். ஹால். சோஃபா இத்யாதி.
ஏழுமலை தூசி தட்டுகிறான். பூதாதிகாசத்தனார் சுருட்டுப் பிடிக்கிறார். சாம்பல் ரத்னகம்பளத்தில் விழுகிறது. மாத்ருதீபனார் மோட்டுவளையை பார்த்துக்கொண்டபடியே அளவளாவுகிறார். அபய குசலாம்பிகை பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டு, அதை பத்து மடங்கு அதிகப்படுத்துகிறான், மாடிப்படியிலிருந்து குதித்து ஆரவாரம் செய்து கொண்டு இறங்கின ஜரிகா புத்ரன். பூதாதிகாசத்தனாரின் சுருட்டை பிடுங்கி ஊதுகிறான். புகை மண்டலம். அவன் தான் ரெஸிடெண்ட் குட்டிச்சாத்தான்.
அ (அபய குசாலாம்பிகை): [தனி மொழி] ‘எங்க அப்பா மஞ்சக்காணியாக கொடுத்த மாளிகை இது. ரத்னகம்பளத்தில் சாம்பல் போடுகிறார். ஒரு பிடி பிடிக்கிறேன் பாரு.’
[கட கடா என்று பாத்திரம் உருளல். குமுறலோ! கூப்பாடோ ! யான் அறியேன். ]
அ: (குரல் எழுப்பி.) ஏழுமலை. ஐயாவை ஒரு நிமிடம் உள்ளே வரச்சொல்லு. காப்பித்தண்ணி ஆறிப்போவுது.
ஏ: அவரு எங்கே வரப்போறாரு. போத்தல் கேட்டாக. மச்சின பிள்ளையும் ஒரு கோப்பை வேணும்னாக.
ஜரிகா புத்ரன் மெனக்கட்டு வந்து காப்பியை குடித்து விட்டு, எஜமானியம்மாவின் மூக்குக்கண்ணாடியை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறான். அமைதிக்குரல் கொடுத்து, ஏழுமலை அதை மீட்டு பாகசாலையில் கொடுக்கும் போது ஜரிகா புத்ரன் இருந்த விஸ்கியை குடித்து விடுகிறான்.
அவனை தவிர, எல்லாரும் எரிச்சலோடு. அவனோ நிச்சலத்தத்துவன். மாத்ருதீபனாரோ சஞ்சலபுத்தி மனிதன். பூதாதிகாசத்தனாரோ ‘லொக்கு’ லொக்கு’ இருமல். காசநோய் உச்சக்கட்டத்தில். அவர் செத்தால் சொத்து நம் கையில் என்கிறான், ‘சூழ்ச்சி’ மாத்ருதீபம். அவனை அடக்கி வைத்திருப்பது, ஏழுமலை. அவன் தான் சீட்டாட அவனுக்கு கந்து வட்டியில் கடன் கொடுப்பவன். ஏகபுத்திரியாக ஏகபோகமாக வளர்ந்த அபய குசாலாம்பிகைக்கு ஏமாற்றம் தான் மிச்சம். குஞ்சு குளவான் இல்லை. சொத்து என்னமோ கரைந்து வருகிறது. அப்பன் வீட்டு சொத்து. ஆயிரம் பொய் சொல்லில்லே அவுக (அதான் பூதாதிகாசத்தனாருடைய அப்பன்காரரு) பொண்ணெடுத்தார். பையனுக்கு வேலை பர்மாவுலே இன்னாரு. அப்றம் தான் தெரிஞ்சது, அவரு பர்மா பஜாரை சொல்றாருன்னு. அதுக்குள்ளே விரைசா தாலிக்கட்டிப்பிட்டானே.
இனி நாடக மேடை:
மா (மாத்ருதீபனார்) : மாப்பிள்ளை சார்! இந்த குட்டிச்சாத்தானை கொன்னுப்போடணும். ஏழுமலை! அந்த துப்பாக்கி எடுத்துக்கிட்டு வா.
ஏ: துப்பாக்கிலெ ரவை இல்லிங்கலே. பரவாயில்லையா? ஜ.பு. அதை எடுத்து குளத்திலெ போட்டுட்டான்.
பூ (பூதாதிகாசத்தனார்): கொஞ்சம் மெதுவா பேசு மாத்ரு. உங்க அக்கா காதிலெ விளுந்தா ரணகளம் ஆயிடும். ஜ.பு. அவளுக்குத் தத்துப்பிள்ளை மாதிரி. அந்த மலையாளத்து மாந்திரீகனிடம் மந்திரிச்சுல்லெ உங்கப்பன் அவனை துணைக்கு அனுப்பினாரு.
மா: உங்கப்பன் அது, இதுன்னு பேசினா நான் பல்லை ஒடைப்பேன். உங்கப்பன் யோக்யதை தெரியாதா என்ன? அக்காவோட மஞ்சக்காணி பங்களாவுக்கு போலி பத்திரம் எளுதி வச்சவன் தானே. அந்த கணக்குப்புள்ளே அவரு கிட்டேயும் காசு வாங்கினான். எங்கிட்டேயும் வாங்கில்லெ, சொல்லிப்போட்டான். நாங்க சுதாரிச்சுக்கிணோம். அக்கா! கொஞ்சம் வாயேன்...
பூ: உனக்கு ஆயிரம் புண்ணியம் மாத்ரு. அவளை கிளப்பாதே. நான் கிளப்புக்குக் கூட்டிக்கிணு போய் உனக்கு தண்ணி ஊத்ரேன்.
அ: என்ன திட்டம் போட்றீக, மாப்பிளையும், மச்சானும். வக்கத்த புருஷன். கடங்கார தம்பி. எங்க அப்பா மட்டும் இருந்தா, உங்களை கட்டி வச்சு அடிச்சிருப்பார்.
பூ: (தனி மொழி): இங்க மட்டும் என்ன வாழ்ந்திருச்சாம். ஆட்டிப்படைக்கிறா.
ஏ: அம்மா! ஐயா வண்டிக்கட்ட சொல்றாரு. எனக்கு கொஞ்சம் காப்பி தண்ணி ஊத்தம்மா. ஓடிட்றேன்.
அ: ஹாலில் வந்து சத்தம் போடுகிறாள்: ‘என்ன நினச்சுக்கிட்டு வண்டி கட்ட சொன்னீக. நான் கோயிலுக்கு போறதா இல்லை. நேர்ந்து கொண்டிருக்கேனே, சிதற்தேங்காய் உடைக்கிறதா. உங்களுக்கு சுயமா சம்பாதிக்கிற புத்தி வரணும். நம்ம மாத்ருவுக்கு நல்ல பொண்ணா அமையணும் தான் வேண்டுதல். டேய்! ஜரிகா புத்ரா! ஐயாவுக்கு தூபம் போட்றா. கண்ணோல்லியோ.
பூதாதிகாசத்தனார் தெருவை நோக்கி ஓட்றார். மாத்ரு கொல்லை பக்கம் ஓட்றான். அங்கே தானே அக்காவிடமிருந்து திருடிய சங்கிலியை புதைத்து வைத்து இருக்கிறான். ஜரிகா புத்ரன் தோண்டி எடுத்துட்டா.
(திரை விழுகிறது)
டிஸ்கி: இது அன்றாடம் நடப்பது தான். நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சம் மாறலாம்.
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com