Wednesday, March 27, 2019

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [2]

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [2]

-இன்னம்பூரான்

பிரசுரம்:http://www.vallamai.com/?p=91227

‘வீட்டுக்கு போய், நாளை வருக.’

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. ஐயம் ஒன்றும் இருப்பது சாத்தியமில்லை. இன்றைய அரசியல்வாதிகளை, சமுதாய பிரமுகர்களை நடிப்பு சுதேசிகள் என்று கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பே இனம் கண்டு கொண்டு மனவருத்தத்தில் ஆழ்ந்தவர். அவருக்கு ஏப்ரல் 6, 1919 ஒரு சுபதினம் என்று தோன்றியதும், அவர் ஆதவனின் பொற்சுடர்களை வருணித்ததும் வியப்புக்குரியவை அல்ல. அவருடன் கோரஸ்ஸாக, அந்த திருபள்ளியெழுச்சி பாடலை பாடி மகிழ்ந்து, அன்றைய நிகழ்வுகளை காண்போமாக.

திருப்பள்ளியெழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் ோயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
பொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ
குதலை மொழிக்கிரங்காதொரு தா
மகளே!பெரும் பாரதர்க்கரசே
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய்
ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே

நண்பர்காள்! இது சென்னை.வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.க. அவர்களின் ‘தேசபக்தனின்’ சாது அச்சுக்கூடம்.அதுவே யான் கூறும் குருகுலம்). சென்னையின் பட்டாளம் பகுதியில் தான் தொழிளாளர்கள் பெரும்பாலும் வசித்தனர். திரு.வி.க. அவர்கள் ஒரு தொழிளார் சங்கத்தலைவர் என்பதை நம்மில் பலர் அறிந்ததில்லை. மற்றொரு நாள் அது பற்றி, யாராவது கேட்டால் எழுதலாம். அத்தருணம், மதுரைக்காரர்கள் கேட்டால், மதுரை சத்யாக்ரஹம் பற்றியும் எழுதலாம். 

பட்டாளத்திலிருந்து தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெரிய பட்டாளம் சாது அச்சுக்கூடத்தில் வந்து சேர்ந்தது. சத்யாக்ரஹ சிந்தனைகடலில் மூழ்கி அவர்கள் உணர்ச்சிப்பெருக்கால் தத்தளித்தாலும், தலைவரின் ஆணையை மறக்கவில்லை.அதனால் நிம்மதியில்லாத அமைதி. அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு  அந்த பேரலை ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்ந்துவிட்டது.ஒரு குளிர்; ஒரு வெயில்.

தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.க. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார்.  அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இதை நூறாண்டுகளுக்கு (20 நாட்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்.) பின் எழுதும் போது, அர்ஜுனனின் உடல் நடுங்கியது போல, என் நாவு உலர்ந்து விட்டது. தேகமாடுகிறது. நடை தளர்ந்து விட்டது. இது என் அனுபவம்.
இந்த கூட்டம், களிறு போல், கடற்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும்  அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். இது, வணிக பெருமக்கள் அரசாணையை மீறிய அருங்காட்சி. திலகர் திடம். புனித பூமி. (தற்காலம் ‘அழகு’ படுத்தப்பட்டு உரம் இழந்தது.) தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.க. அவர்கள். அவரை கைது செய்வார்கள் என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது.
(தொடரும்) 

இன்னம்பூரான்