ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: 8
‘ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்’ தொடரை யாரும் படிக்காமலே நிலைக்கு வந்து விட்டது என்று நினைத்தேன்; அமைதி காத்தேன். மவுன விரதம் அனுஷ்டித்தேன். இன்று இருவர் படிப்பதாக சொன்னார்கள். அதான் வந்து நிற்கிறேன், பெரிசு ஆறுமுகம் சேர்வை அய்யாவுடன்.
இன்னம்பூரான்
02 12 14
கனம் கோர்ட்டார் அவர்களே!….14
எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். மதம் பிடித்த யானை ஏறி, ஏறி மிதித்தாலோ, முதலையின் பல்லிடுக்கில் அகப்பட்டுக்கொண்டாலோ, என்ன ஆவது? இந்த பாரத தேசவாசிகள் அத்தகைய பேராபத்தில் சிக்கிக்கொண்ட வேளையிலும், வாதப்பிரதிவாதங்களில், பட்டிமன்றங்களிலே, அரட்டைக்கச்சேரியிலே, குடலாடி (மடலாடலில் ஒரு வகை!) மகிழும்போது, மலையை தடவிப்பார்க்கிறார்கள், ஊர்ந்த எறும்பு நகர்ந்த பின்!
என்.ஹெச்.சசிதல் என்ற அரசு ஊழியர் மீது அதீதமாக ரூ.33.44 லக்ஷம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து 27 வருடங்கள் ஆயின. அக்காலத்தில், இது ஒரு கணிசமான தொகை. அவரோ, அலுத்துப்போய், வழக்கை வாபஸ் வாங்கக் கோரியுள்ளார். தற்காலிக பதவி நீக்கம், கீர்த்தி நாசம், வாழ்வியல் பாதிப்பு எல்லாம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக, அவருடைய பிராது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற வாசகங்கள் (obiter dicta):
“லஞ்சலாவண்யம் மக்களுக்கு ஒரு மந்திரமாகிவிடுமோ என்ற கவலை…தற்காலம் நம் தேசத்தின் குடலுருவி, நீக்கமற நிறைந்துள்ளது லஞ்சம். தம்பிடியோ, தங்கக்கட்டியோ, குற்றம் குற்றமே…இப்பெல்லாம் கோடிக்கணக்கில்… பதவி துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டுவது சமூக விரோதம்; மக்களை இழிவு படுத்துவது; சட்டத்தைத் துச்சமென கடாசுவது ஆகும்…அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் ஆட்சி நன்றாக அமையாது…பதவி துஷ்பிரயோகம் பெருவாரி வியாதியாக எங்கும் பரவி விட்டது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது…லஞ்சப்பேய், ~குட்டிச்சாத்தான், கொள்ளிவாய் பிசாசு எதாக இருந்தாலும்…அந்த கூளி குழப்பம் விளைவித்து, சமுதாய முன்னேற்றத்தில் குண்டு வீசி, ரவுடிகளின் கொம்பு சீவி, மனசாட்சியை கொன்று, சமுதாய மையங்களை குலைத்து, தேசத்தின் செல்வத்தை சூறையாடி, நல்லிணக்கத்தைத் தொலைத்து, அரசாளுமையின் புற்று நோயாக அமைந்து, சர்வநாசினி என்க…கன்னாபின்னாவென்று, முறைகேடாக, சொத்து சேர்ப்பதின் முதல் பலிகடா, மக்களின் நம்பிக்கை இழப்பு…பொது வாழ்வில் யோக்கியதை இல்லையென்றால், அடி வாங்குவது, மக்கள்…இது தான் தீர்ப்பின் பின்னணி.
தீர்ப்பு: என்.ஹெச்.சசிதலின் மனு நிராகரிக்கப்படது. தாமதம் மோசம் தான். அந்த சால்ஜாப்பைச் சொல்லி, லஞ்ச வழக்குகளை வாபஸ் செய்தால், அது ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற போக்கில் கயவாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.
இதை எங்க கிராமத்துப் பெரிசு ஆறுமுகம் சேர்வையிடம் சொன்னேன். ‘இப்போ மட்டும் என்ன வாழுது?’ என்று கேட்டார். மயக்கம் வருமளவுக்கு, ஹூடாவின் ஹூடா, அப்பாவின் தாதுபுஷ்டி சப்பைக்கட்டு, நீர்மூழ்கியானாலும், பறக்கும் தட்டு ஆனாலும் ‘அடிடா கமிஷன்’ மந்திரம், மலை முழுங்கி தந்திரம், மணல் அள்ளும் யந்திரம் என்று அனுமார் வால் போல ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த அளவுக்கு ல.லா. அபகீர்த்தி துர்வாசனை அடிக்கிறது.
அவருக்கு மூச்சு வாங்கியதை சாக்காக வைத்துக்கொண்டு, விடை, மத்திய அரசு அசோக் சவான் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இருக்கிறதே என்றேன். அவர் தான் மூச்சுமுட்ட எல்லா ஊடக செய்திகளை படிச்சுட்டாரே. நான் சொன்னால், கேட்கமாட்டீர்கள். அவரே சொன்னார். கேளும், ஐயாமாரே! அம்மாமாரே!
பெரிசு ஆறுமுகம் சேர்வை:
ராஜூ! என்னமோ காலேசிலே போய் படிச்சுட்டோம், ஜனநாயகம், தேசாபிமானம், தியாகம், அரசியல் சாஸனம், தேர்தல், பிரதிநிதி, அது, இது என்று உளறிக்கொட்டி, கிளறி மூடிரீங்க. என்ன தான் இருந்தாலும், வெள்ளைக்காரன் இப்படி வயத்திலே மண்ணடிக்கல்லை. அசோக் சவான் என்ற பிரதிநிதி சாமான்ய ஆசாமி இல்லை. முதல் மந்திரியாக்கும். அவர் மேலே ஆதர்ஷ் ஊழலிலும் பிராது கொடுத்தாங்க. தேர்தலில், பணத்தை வாரி இழைத்ததாகவும், ஊடகங்களில் காசு கொடுத்து, தற்புகழ்ச்சியை செய்தியாக போட்டு, வாக்கு என்று கொக்கின் தலை மேல் வெண்ணெய் வைத்ததாகவும், தேர்தல் கமிஷனுக்கு உண்மைக்குப் புறம்பான பிரமாணம் தாக்கல் செய்ததாக பேசறாங்க. இப்போ போய் தேர்தல் கமிஷனுக்கு அது பற்றி விசாரிச்சு, அவர் பதவிக்கு லாயாக்கா, இல்லையா என்று சொல்ல உரிமை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அடிச்சுப்பேசறது. கணக்குக்கொடுக்காவிட்டால் தான் அவர்கள் தலையிடலாமாம். பொய்யும், புனைசுரட்டும் பேசினாக்க, தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று சொல்லலாமா? அந்த தகுதி தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று ராசாங்கம் சொல்லுது, அப்பா, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். இத்தனைக்கும், இந்த ‘அப்புராணை’ பிரமாணம் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்மறை. (பல வருஷங்க முன்னாலெ அப்பு.) உனக்குத்தான் தெரியுமே, ராசாங்கத்தின் “ஆடிட்டர் ஜெனெரல் ஒழிக” அப்டிங்கிற கண்ணியம்! என்று சொல்லி விட்டு, புகையிலை துண்டு ஒண்ணை வாயில் அடக்கிக்கிட்டு, கொள்ளை சிரிப்புச் சிரித்தார், யாகாவா முனிவர் மாதிரி.
ஓசை அடங்கின பின், ‘தணிக்கைத்துறை சமாச்சாரம் நிறைய இருக்கு, மாமு’ என்றதற்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு தான் பதில். முத்தாய்ப்பா, சொன்னேன், ‘மாமு! சேதி தெரியுமா? இதே அசோக் சவான் மீது அவரிடம் ‘தோத்துப்போனவர்’ ஒருவர் போட்ட வழக்கில், “ ‘ கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, அவரை பதவியிலிருந்து நீக்கணும்’ என்ற மனுவை ஜனவரியிலேயே உச்ச நீதி மன்றம் நிராகரித்து விட்டது.” என்றேன். நான் பேசியது குட்டிச்சுவருடன். அவர் எழுந்து போய்விட்டார், மாட்டுக்குத் தண்ணி காட்ட.
(தொடரும்)
இன்னம்பூரான்
டிசம்பர் 2, 2014
பி.கு: இந்த தலைப்பில் பல கட்டுரைகள் வந்துள்ளன. இது பதினாலாவது. முன்னும் பின்னும், வரப்போவதெல்லாம் படித்தால், ராம் ஜெத்மலானி, கபில் சைபால் போல வாதாடும் திறன் கூடுமாம்! ~ பெரிசு ஆறுமுகம் சேர்வை அய்யா
சித்திரத்துக்கு நன்றி
பிரசுரம் & நன்றி: வல்லமை: 22 03 2013 பதிப்பு
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com