அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: II
ராஜ மரியாதை
அக்கம்பக்கத்திலே விழா எடுக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஆழ்ந்து போனதால், உள்ளூர் இலக்கிய பிதாமகனின் 200வது பிறந்த தினத்தன்று, அவரை பற்றி இரு வரியாவது எழுதவேண்டாமா? ஃபெப்ரவரி 7, 1812 அன்று இந்த ஊரில் எமது இல்லத்துக்கு அருகில் உள்ள தெருவில் உள்ள வீட்டில் சார்லஸ் டிக்கென்ஸ் பிறந்தார். புதின இலக்கியம் பிறந்த நாடு இங்கிலாந்து ~சார்லஸ் டிக்கென்ஸ், ஸர் வால்டர் ஸ்காத், சார்லஸ் கிங்ஸ்லி, ஜேன் ஆஸ்டின் இத்யாதி புதின இலக்கிய கர்த்தாக்கள்.
சின்ன வயதில் படித்தது. சார்லஸ் டிக்கென்ஸ் தான் தொடர் கதை இலக்கியத்தை துவக்கியவர். அமெரிக்காவுக்கு அந்தந்த இதழ் பிரதிகள் கப்பலில் அனுப்பபடும். துறைமுகத்தில் ரசிகர் மன்றம் முண்டியடித்துக்கொண்டு, ‘அவனுக்கு என்ன ஆச்சு’? ‘இவளுக்கு என்ன ஆயிடுத்து?’ என்று டென்ஷனோடு மாலுமிகளிடம் வினவுமாம். நடிகராக விரும்பிய சார்லஸ் டிக்கென்ஸ் பிரபல நாவலாசிரியரானார். அவை மூலம் நடித்தார் என்றால், மிகையல்ல. தன்னுடைய புதினங்களை, ஏற்றத்தாழ்வுடன் ராகம் போட்டு படிப்பதில், ஐயா ஐரோப்பாவிலும், அமெரிக்காவில் படு பாப்புலர். எப்ப பார்த்தாலும் எழுத்து. அவர் எழுதிய கடிதங்களில், 14 ஆயிரம் கிடைத்தன. எத்தனை சமாச்சாரங்கள், தன்னுடைய பிரியமான காகம் இறந்ததிலிருந்து!
அவருடைய ஒவ்வொரு நாவலை பற்றியும், அவருடைய முரணும், அவிழ்ந்த முரணுமான கரடுமுரடான வாழ்க்கையை பற்றியும், இங்குள்ள அரும் காட்சியகம் பற்றியும் எழுத நிறைய இருக்கிறது. பிறகு பார்க்கலாம்.
இன்று ராஜ மரியாதை அமோகம். ப்ரின்ஸ் சார்லஸ் லண்டனில் அவருடைய கல்லறையில் மலர் வளையம் வைத்து வணங்கினார். 1830லிருந்து இன்று வரை அவருடைய நூல்கள் மறு பிரசுரம் ஆகின்றன. உலகமெங்கும், இன்று ‘பேயரசு புரியும்’ ஏழ்மை, அதீத ஏற்றத்தாழ்வு, பேராசை முதலாளிகள், லஞ்சலாவண்ய அரசியலர் பற்றிய பிரதிபலிப்புக்களை அவருடைய நாவல்களில் அப்பட்டமாகக் காணலாம். ‘ஆலிவர் ட்விஸ்ட்’ டில் ஒரு வரி, அந்த ஆத்திரத்தின் எதிரொலி. :
“...சீ! நாற்றமடிக்கும் ஏழ்மையின் போர்வை, குப்பை, கூளம், அழுகல், அசிங்கம், இவை தான் அந்த அழுக்குக் குட்டையில் மக்கிப்போன மட்டைகள்...”
ஒரு சின்ன கேள்வி: மு.வ.வின் ‘கரித்துண்டு’ படித்து இருக்கிறீர்களோ. இல்லை, புதுமைபித்தனின் அம்மாளுவை தெரியுமோ?
இன்னம்பூரான்
07 02 2012
The Google doodle for Charles Dickens. Image 1 of 2
உசாத்துணை:
Callow. S. (2012): Charles Dickens And The Great Theatre of theWorld: Harper
Hartley.J. Ed. (2012) The Selected Letters of Charles Dickens: OUP
No comments:
Post a Comment