அன்றொரு நாள்: ஜனவரி:25: II
‘பழி’ (J'ACCUSE ...!")
அதை கேட்போமா? அதன் தலைப்பே:
J'ACCUSE ...!"
(தொடரும்)
“ சில சமயங்களில் நம்மால் அநியாயத்தைத் தடுக்க முடிவதில்லை; அதற்காக, எதிர்க்காமல் இருப்பதா? என்ன?.”
~ எலி வைசல்: நோபல் பரிசு பெற்றவர்
ஜனவரி 26, 1950 இந்திய குடியரசு தினம். டில்லியில் விழா, வருடாவருடம். அந்த விழா ஏற்பாடுகளில், இரண்டு வருடங்கள் எனக்களிக்கப்பட்ட பொறுப்புகளை பற்றியும், நினைவலைகளை பற்றியும், ஜனாதிபதியின் உரையை பற்றியும் சம்பிரதாயமாக எழுதாமல், இந்த ‘வழக்கை’ தொடர்வதின் காரணம்: ~ ‘என் தரப்பு’ என்ற அந்த இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்த தன்னிலை விளக்கத்தில் உறையும் ஆவேசம், பரவசம், தேசாபிமானம், ஆழ்ந்த சிந்தனை, கல்வியின் தாக்கம் ஆகியவை அவை. அன்றும் தேவை; இன்றும் தேவை; என்றும் தேவை.
என் தரப்பு:
“...கோர்ட்டில் என் தரப்பைக் கூற அனுமதிக்கவில்லை...என் மேல் விதிக்கப்பட்ட பழிகள்:
- அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபட இந்தியர்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறினேன்;
- அவ்வுரிமையை நிலை நாட்ட ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முனைந்தேன்;
- பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திலிருந்து விடுபட்டால் தான் இந்தியாவுக்கு விடுதலை, என்றேன்;
- அதற்கு வன்முறையை ஆதரித்துப்பேசினேன்;
- இவ்வாறு இயங்கியபோது உலகளாவிய பொதுவுடமைவாதியாக இயங்கினேன்.
இனி சுருக்கம் & பகுதிகள் மட்டும் (பிரகடனம் முப்பது பக்கங்களுக்கு மேல்).
“...நான் வன்முறையை ஆதரிக்கக்காரணமே, அரசின் வன்முறை நாகரீகம்...ஒடுக்கப்பட்டவர்களும், நசுக்கப்பட்டவர்களும் மேலாண்மையின் தத்துவபோதனையை கேட்டு விமோசனம் அடையப்போவதில்லை...யதேச்சதிகாரத்தை ஒழிக்க வலிமை வேண்டும்...ஆங்கில ஞானி பென்தாமும், ஹ்யூமும் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள்...
- தற்கால கலோனிய ஆட்சிக்கு அரசியல் சாஸன அடித்தளம் இருக்கிறதா?
- எங்களை துன்புறுத்தும் உங்கள் சட்டத்திற்கு, மக்களின் ஆதரவு இருக்கிறதா?
- உங்கள் அரசன், இங்கு வந்து புகல் என்ன நீதி?
- இல்லை, இந்திய மக்கள் தான் ராஜவிசுவாச பிரமாணம் செய்து கொண்டார்களா? இந்தியர்கள் உமது அரசுக்கு அடி பணியவே இல்லை.
- என்னை பழி சுமத்த, உமக்கு சட்டரீதியான அதிகாரமில்லை. நாங்கள் உமக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கவில்லை. உம்மை துரத்தினால் ஒழிய, எமது மக்களுக்கு வளமை இல்லை; சுதந்திரம் இல்லை; முன்னேற்றம் இல்லை. என் மேல் சுமத்திய பழி அபாண்டம். இந்த வழக்கு மன்றமே ஒரு வன்முறைக்கூடம். பிரிட்டீஷ் அரசனுக்கு இந்தியா மீது மேலாண்மை இல்லையே. என் மேல் வழக்குத் தொடர, உமக்கு அருகதையில்லை. வரலாற்றை அலசிப்பார்க்கவும்.
- உமக்கு சாட்சி யாருமில்லை.
- நான் மேன்மேலும் பழி சுமத்துகிறேன்.
- நீங்கள் வாகை சூடக்கூட இல்லை.
- திருடிய சொத்து, ஐயா. நூறு வருடங்களுக்கு முன்னால், மொகலாய அரசின் அடிவருடி என்று தான் சொல்லிக்கொண்டீர்கள். அப்பிடியும், இப்பிடியும், வணிகம் செய்வதாக நடித்து, மொகலாய அரசின் பதவியை பறித்துக்கொண்டீர்கள். இந்திய மக்கள், இந்த பகல் கொள்ளைக்கு சம்மதம் கொடுக்கவில்லை. பிரித்தாண்டீர்கள், மொகலாய சாம்ராஜ்யத்துக்கு கூழைக்கும்பிடு போட்டு, பிரிட்டீஷ் ராஜாங்கத்துக்கு மண்டியிட்டு தொழுது. உங்கள் வரலாற்றை புரட்டிப்பாருங்கள். உங்கள் சட்டவல்லுனர்களே இந்தியாவின் மீது உமக்கு யாதொரு உரிமை இல்லை என்பதை நிலை நாட்டியுள்ளார்கள். ராணியம்மாவின் பிரகடனத்துக்கு, இந்திய மக்களின் வழிமொழிதல் இல்லை. உங்கள் நாட்டில் ஜேம்ஸ் II என்ற அரசனை உதறி, ஒரு டச்சு ராஜகுமாரனை அரியணையில் அமர்த்திய போது, நாடாளும் மன்றத்தின் ஒப்புதல் பெற்றீர்கள். விக்டோரியா ராணியின் பிரகடனத்துக்கு யாருடைய ஒப்புதல் பெற்றீர்கள்? அடிபணிந்ததே ஒப்புதல் என்றா பேசுகிறீர்கள்? அதுவும் பொய். அடிபணிந்தது, மிரட்டலின் விளைவு. உங்களுடைய அரசியல் சாத்திரத்தின் தந்தையான பென்தாம் கூறுவதைக் கேளுங்கள்:
“...ஏதோ நாலு அடிவருடைகள் உச்சுக்கொட்டினால், அது தனிமனிதர்களும், சமுதாயமும் ஆமோதித்ததாக ஆகி விடுமா என்ன? அத்தகைய ஒப்பந்தம் எப்படி மக்கள் தொகையை கட்டுப்படுத்தும்? அதுவும், இதை பற்றி கேள்விப்படாதவர்களை? அதுவும், இதை ஆமோதியுங்கள் என்று அழைக்கப்படாதவர்களை? அதுவும், ஆமோதிக்க மறுத்தால், சொத்து, சுதந்திரம், உயிர் எல்லாம் இழக்கும் அபாயத்தை எதிர்காண்பவர்களை?”
ஆக மொத்தம், உங்கள் குருநாதர் சொல்படி பார்த்தால், மேல்தட்டு கூஜாக்களின் சம்மதம் எம்மை கட்டுப்படுத்தாது...புரட்சி என்ற புனித உரிமையை முதலில் நிலை நாட்டியது, உங்களுடைய இங்கிலாந்தில். ஒரு அரசனை சிரச்சேதம் செய்து, மற்றொருவனை இறக்கி, புரட்சி செய்த நாடு, உமது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு, எங்கள் உரிமையை மறுக்கிறீர்கள்? உமது அரசாட்சி சட்டத்தை மீறியது என்று குற்றம் சாட்டுகிறேன். அதை விரட்ட வன்முறை தேவைப்படும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் விரோதியல்ல. நான் மனித உரிமையை நாடுபவன். வித்தல்பாய் படேல் அவர்கள் சொன்னமாதிரி, ஒரு புரட்சி வந்து கொண்டிருக்கிறது.
என்னை கைது செய்ததே சட்டவிரோதம்.
நான் ஜவாபு சொல்ல இங்கு வரவில்லை.
உலகமன்றத்தின் முன், அவ்வுலகத்தின் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்ரமித்ததற்கு, எம்மை கொள்ளை அடித்ததற்கு, எம் முன்னேற்றத்தைத் தடை செய்ததற்கு, உம்மை குற்றம் சாற்ற வந்துள்ளேன்.
உமது சுரண்டலால், இந்தியாவில் வறுமை மிகுந்தது. மரபு அழிந்தது.
முடிபை கூறிவிடுகிறேன்.
உங்கள் அரசியல் தத்துவமேதை ஹ்யூம் அவர்கள் மக்களின் தற்காப்புப்புரட்சியை அடக்குவது அறிவின்மை என்கிறார். எனவே, இந்த வழக்கே அறிவின்மையின் விளைவு.
“... உப்பரிகை வாசிகளான உமது நீதிபதிகள் ஹாம்ப்டன் என்ற புரட்சிக்காரன் மீது குற்றப்பத்திரிகை வாசித்தாலும், நாடு விழித்தெழுந்தது, ஐயா. நீதிபதியின் நீட்டோலை, மக்களின் கருணையின் முன் அருகதை இழந்தது, ஐயா..”
என்றார், இங்கிலாந்தின் அரசியல் சாஸனத்தின் வரலாற்றாசிரியர், ஜான் ரஸ்ஸல் பிரபு. அவருடைய எச்சரிக்கையை உமக்கு நினைவுறுத்தி, என் தன்னிலை விளக்கத்தை முடித்துக்கொள்கிறேன்...’
(தொடரும்)
இன்னம்பூரான்
26 01 2012
பி.கு. ஜனாதிபதியின் 2012 ம் வருட உரை உறைக்கவேயில்லை. அவர் உரைக்கவும் இல்லை.
No comments:
Post a Comment