Wednesday, October 8, 2014

அறிவு, பார்த்துக்கொள்வது, சுடர்விட்டொளிவரும் நிலை

அறிவு, பார்த்துக்கொள்வது, சுடர்விட்டொளிவரும் நிலை


அதாவது
Knowledge, Care and Fervour

இன்னம்பூரான்
08 10 2014
வருங்காலத்தில் இந்திய சுயராஜ்யம் வல்லரசுகளுக்கும் மேலாக, பாருக்குள்ளே நல்ல நாடாக விளங்குவது சாத்தியமே. பழங்கதைகளை அறவே ஒதுக்காமல், பாரதநாட்டின் தொன்மை சாதனைகளை படிப்பினைகளாக எடுத்துக்கொள்வது நலம். முதற்கண்ணாக, நமது மக்கள் எல்லாரும் கல்விமான்களாக திகழ வேண்டும். விவேகம் பயில, அது உதவும்.  விதண்டாவாதப் பிரியர்கள் என்று அமார்த்தியா சென் அவர்களால் விருது அளிக்கப்பட்ட நமக்கு, அதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக இயங்க, இவ்வாறு பயின்ற விவேகம் உதவும். பாசம் இல்லாவிடினும், மற்ற மனிதர்களுக்கு மதிப்பு அளித்து, சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது ஒரு பாரமில்லை. இந்த செயலுக்கு பல பரிமாணங்கள் உண்டு - ஒரு ஏழைக்குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதிலிருந்து அநாதைப்பிணத்தை நல்லடக்கம் செய்வது வரை. ‘தனக்கு மட்டும்’ என்ற சுயநலம் எவருக்கும் கவசமாக பயன்பட்டதில்லை. ஆனால், அதை அறவே துறந்த மாந்தர்கள் மிகக்குறைவு.  எனினும், இந்திய சுயராஜ்யம் வருவதற்கு முன் தியாகச்சுடர்களாக விளங்கிய தேசபக்தர்கள் சுடர்விட்டொளிவரும் நிலை என்பதற்கு முன்னுதாரணமாக இருந்ததால், தற்கால/வருங்கால இந்தியர்கள் சுடரேற்றி ஒளி பரப்பி இயங்குவதை கற்றுக்கொள்வது எளிதே. நடுநிலை வரலாறு படிக்க வேண்டும். அவ்வளவு தான்.
இந்திய அரசியல் சாசனம் ஒரு மாபெரும் தவறு இழைத்து விட்டது. அடிப்படை கல்வி இலவசமாகவும் கட்டாயமாகவும் யாவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு பிறப்புரிமை. அதை சாபக்கேடாக, உரிமைகளில் சேர்க்காமல், விருப்பங்களில் பட்டியலில் இணைத்து விட்டதால், அரசும் நழுவியது; மக்களும் கை கழுவி விட்டார்கள்; கல்வித்தந்தைகளும் கொழுத்தார்கள். 60 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கல்வி சீர்திருத்தங்களும், நத்தை வேகத்தில் தான் இயங்குகின்றன. எரிய வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்று கும்பகோணத்தில் நடந்தது போல, கல்வித்துறையில் முறைகேடுகள் மலிந்து கிடக்கின்றன. கேட்பார் இல்லை. எல்லா வேலிகளும் பயிரை கபளீகரம் செய்கின்றன. இவற்றிலிருந்து நிவாரணம் பெற, அரசு இயந்திரத்திடம் போய் தொங்கவேண்டியதே இல்லை. ஓய்வு பெற்றவர்கள் கெளரவ ஆசிரியர்களாக பணி செய்தால் என்ன? ... பெற்றெடுத்த செல்வங்கள் கல்லூரிக்கு போனபின், திருமணம் புரிந்து கொண்டு புகுந்த வீட்டீல் அரசாட்சி செய்யும்போது, தாய்க்குலம் ஏன்  ஏழை பாழைகளுக்கு பாடம் எடுக்கக்கூடாது? இத்தகைய தொண்டுகள் கட்டணமின்றி இயங்கவேண்டும். தன்னடக்கமும், கனிவும் இருப்பவர்கள் தான் அச்சத்துடன் விலகி நிற்கும் ஏழை பாழைகளை கவரமுடியும். சிறு துளி பெருவெள்ளம். 
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது இயல்பு. அதில் மனநிறைவு கிடைக்கும். பேச்சளவில் நில்லாமல், ஆஸ்பத்திரிகள், சிறை ஆகியவற்றுக்கு சென்று ஆறுதல் கூறுவது நற்செயல். ஏழையே, செல்வந்தரோ, தனித்து விடப்பட்டு உபாதைகளுடன் வாழ்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். 
கல்கியின் தியாக பூமி படித்தவர்களுக்கு, சுடர்விட்டொளிவரும் நிலை புரியும். தற்கால இந்தியர்களுக்கு, மஹாத்மா பூலே முதல் ஜெயப்பிரகாஷ் நாராயண் (இன்று அவரது நினைவஞ்சலி தினம். ‘அன்றொரு நாள்’ நினைவுக்கு வருகிறது. என் செய்ய இயலும்?) வரை வரலாறு கற்பிக்கப்படவேண்டும். தாய்க்குலமும், ஓய்வாளர்களும் என்ன செய்கிறார்கள் ~ ஓயாத பேச்சு, அரட்டை, வெட்டிப்பேச்சு, அலர்.
பாருக்குள்ளே நல்ல நாடாகிய இந்தியா, தான் இழந்த சுவர்க்கத்தைத் திரும்ப பெறவேண்டுமானால், படித்த மேதைகளும், ஞானஸ்தர்களும் கல்வி அளிப்பதிலும், மற்றவர்களை பார்த்துக்கொள்வதிலும், சுடர்விட்டொளிவரும் நிலையை பரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

-#-
பின் குறிப்பு: தலைப்பில் உள்ள சொற்களுக்கு மொழிபெயர்ப்பு: அகராதிகள்.
ஆங்கில சொற்கள், பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னலிடமிருந்து இரவல்.
சித்திரத்துக்கு நன்றி:




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com