அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 6
விந்த (தை) விஞ்ஞானம்!
புத்திரகாமேஷ்டி யாகங்களும், பாயச வினியோகமும், அமுதகலசங்களும் புராணமாயினும், விஞ்ஞான யாகங்களும் விந்தையும், வியப்புமாக, நம்மை அசத்துகின்றன. பேரனுக்கு நாமகரணம் செய்யும்போது, தன் மகனின் பெயரை அதில் பொருத்தவேண்டும் என்று பாட்டி விழைவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், பிரச்னை எழுகிறது. கதை கேளு.
திருமதி. ப்ளட், திருமணமான இரண்டு மாதங்களுக்குள், ஃபெப்ரவரி 1995ல், விதவையானார். மூளைக்காய்ச்சலினால், ஜன்னி கண்டு, நினைவிழந்து, காலமானார், திரு. ஸ்டீஃபன் ப்ளட். பலவித இன்னல்கள், எதிர்நீச்சல்கள், சண்டபிரசண்டங்கள் எல்லாவற்றையும் ஒரு பாடாக கடந்து, ஜூன் 2,1998 அன்று தான் கருவுற்றதை ஊருக்கு எடுத்துச்சொன்னார், திருமதி. ப்ளட். டிசம்பர் 11, 1998 அன்று லியாம் பிறந்தான். தாயும், சேயும் சுகம். ஜூலை 17, 2002 அன்று ஜோயல் பிறந்தான். தாயும், சேயும் சுகம். மூன்றாவது பிரசவம் வேண்டாம். உள்ளதே போதும். அதுவே எனக்கு மனநிறைவு என்றார், 36 வயதான திருமதி.ப்ளட். கனம் கோர்ட்டாரிடம், வலுவான வாதங்களை முன்வைத்து, ஃபெப்ரவரி 2003ல், தன்னுடைய நான்கு வயது மகனுக்கும், கைக்குழந்தைக்கும், எட்டு வருடம் முன்னால் மறைந்த கணவனின் பெயரை வைப்பதில் வெற்றி கண்டாள். இவருக்கு இந்த வழக்கில் உறுதுணை மாமியார். பின்னணி என்ன?
திரு. ப்ளட் இறப்பதற்கு முன் இருவரின் விருப்பத்தின் மீது அவருடைய விந்து சேகரிக்கப்பட்டு விஞ்ஞானரீதியில் பாதுகாக்கப்பட்டு, செயற்கை கர்ப்பம் அளிக்கும் முறையில், பிறந்த குழந்தைகள் இவை. ஆனால், திரு. ப்ளட் எழுத்துப்பூர்வமாக தன் சம்மதத்தை தெரிவிக்க இயலவில்லை. எனவே, 1990ம் ஆண்டு இயற்றப்பட்ட செயற்கை கர்ப்ப சட்டம் குறுக்கே நின்றது. ஃபெப்ரவரி 6, 1997 அன்று ஒரு பாடாக விடிவு காலம் எட்டிப்பார்க்கத்தொடங்கியது. இங்கிலாந்தின் உச்சநீதி மன்றம், அதுவும், உலக க்யாதி பெற்ற உல்ஃப் பிரபு அவர்களின் வாயிலாக, திருமதி.ப்ளட் கணவனின் குழந்தைகளை பெற்றுக்கொள்வது, அவரது உரிமை என்று நிலை நாட்டியது. ஆனால், பெல்ஜியத்தில் பிரசவம் வைத்துக்கொள்ளுமாறு, சட்டசிக்கல்கள். திருமதி. ப்ளட்டுக்கும், குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
கொசுறு:
அனுமதி மறுத்த சட்டநிறுவனம் நூறாயிரம் பவுண்டு சட்டம் சார்ந்த செலவுகளுக்கு ஈடு செய்ய நேரிட்டாலும், கனம் கோர்ட்டார் எடுத்துரைத்த தெளிவான தீர்வுக்கு நன்றி கூறியது. குறுக்குச்சால் ஓட்டவில்லை. இரண்டாவது கர்ப்பத்தின் போது செயற்கை கர்ப்பம் போன்ற ‘தலையீடுகள்’ எந்த அளவுடன் நிறுத்திக்கொள்ளப்படவேண்டும் என்ற பேச்சு, மருத்துவ உலகில், எழுந்தது.
மின் தமிழர்களும். தமிழ் வாசலார்களும் என்ன சொல்கிறார்கள்?
இன்னம்பூரான்
06 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment