Wednesday, April 10, 2019

திணை பாயசமும், திருவிக குருகுலமும்

“மதறாஸ் வந்தால் இன்னம்பூரான் சார் வீட்டிலோ அல்லது கீதாம்மா வீட்டிலோ நிச்சயம் திணைப்பாயாசம் கொடுக்கணும்.”


~ இந்த பதிவை பார்த்த இழையில் பதில் போட கூகிளார் ஒத்துழைக்க வில்லை. இது கண்டு என் மனம் நெகிழ்ந்தது. வருபவர்களுக்கு நானும் அக்கார வடிசல் தருவேன். டாக்டர் நா. கணேசனுக்கு இரண்டு தடா. என் குருநாதரின் அன்பு கட்டளை படி எனக்கு எல்லாரும் வேண்டும். இதமாக பழக வேண்டும். இங்கிதமான உறவு நாடுபவன், நான். இந்த இழை தொடரும். காழ்ப்புணர்ச்சியை உரக்கப் பேசுபவர்களை தணிந்து பேசச்சொல்லி கோரிக்கை விடுகிறேன்.

இன்னம்பூரான்

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [1]
-இன்னம்பூரான்
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=91188
திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [1]
-இன்னம்பூரான்
சான்றோர்களைத் தற்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் போது, அவர்களின் பிறந்து, வளர்ந்து, மறைந்த கதையை விட அவர்களின் வாழ்நெறியைக் கூறுவது முக்கியம். அத்தருணம் சில நிகழ்வுகளை முன்னிறுத்தி அலசுவது தான் வாழ்க்கைப்பாடங்களை அளிக்கும் வழி. அவ்வாறு தொகுக்கும்போது அட்டவணை போட்டு, கட்டை விரல் சப்பியதில் தொடங்கி மரணாவஸ்தை வரை வரிசைப்படுத்துவது தேவையல்ல. சில சம்பவங்கள் அந்த சான்றோர்களின் பெருமைக்குக் கட்டியம் கூறும். சில அவர்களின் தர்மசங்கடங்களை பூடகமாகத் தெரிவிக்கும் – திறந்த மனதுடன் தேடினால். நான் என்னவோ என் மனம் அழைத்துச்செல்லும் ராஜபாட்டையில் தான் உங்களை அழைத்துச்செல்வேன். எனக்கு தெரிந்தது அவ்வளவு தான். பொறுத்தாள்க.
மஹாத்மா காந்தியின் ஜன்மதினம் அன்று உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். காந்திஜியை நினைவு கூர்பவர்கள் சொற்பம். அது கூட இல்லை. ‘தமிழ் காந்தி’ ‘தமிழ்தென்றல்’ திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம் அவர்களை தமிழர்கள் அறவே மறந்துவிட்டார்கள். ஏதோ விருது அளிக்கும் தினத்தில் ஒரு வரி உதட்டளவு புகழுரை. அத்துடன் சரி. அங்கும், இங்கும், எங்கும் இறைவனின் சிலாரூபத்தைப் பழிப்பவர்கள் எழுப்பிய மானிடஜன்மங்களில் சிலைகள் மலிந்த நம் நாட்டில், எனக்குத் தெரிந்து மூவருக்கு மட்டும் தான் ஆளுக்கு ஒரே ஒரு சிலை, பொது மக்களே முன் வந்து ஆர்வத்துடன் சந்தா அளித்து எழுப்பபட்டவை. அவர்களில் ஒருவர் திரு.வி.க. அவர்கள். மாஜி பி & ஸி மில் முன் நிற்கிறார், அஃறிணை ஆகி விட்ட திரு.வி.க. மற்ற இருவரை பற்றி யாராவது கேட்டால் சொல்கிறேன். இது நிற்க.

கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரிஜனல் காந்தியிடம் செல்வோம். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அந்த கனிவை ந்யூஸிலாந்தில் காண்கிறோம். அங்கு ஒரு பயங்கரவாதி பலரை சுட்டுத்தள்ளி விட்டான். அந்த நாட்டு வெள்ளையர் மக்கள் இஸ்லாமியர்களை தேடி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்களுக்கு காந்தி மஹான் அறிமுகம் இருக்கிறது. நமக்குத்தான் இல்லை.

“ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு. அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி.” -இன்னம்பூரான்.

நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ? காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து எழுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர்.
சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் – ‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.
சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்ளெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள்.
கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.
(தொடரும்)
இன்னம்பூரான்

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [2]
‘வீட்டுக்கு போய், நாளை வருக.’
மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. ஐயம் ஒன்றும் இருப்பது சாத்தியமில்லை. இன்றைய அரசியல்வாதிகளை, சமுதாய பிரமுகர்களை நடிப்பு சுதேசிகள் என்று கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பே இனம் கண்டு கொண்டு மனவருத்தத்தில் ஆழ்ந்தவர். அவருக்கு ஏப்ரல் 6, 1919 ஒர்8 சுபதினம் என்று தோன்றியதும், அவர் ஆதவனின் பொற்சுடர்களை வருணித்ததும் வியப்புக்குரியவை அல்ல. அவருடன் கோரஸ்ஸாக, அந்த திருபள்ளியெழுச்சி பாடலை பாடி மகிழ்ந்து, அன்றைய நிகழ்வுகளை காண்போமாக.
திருப்பள்ளியெழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் ோயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
பொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ
குதலை மொழிக்கிரங்காதொரு தா மகளே!பெரும் பாரதர்க்கரசே
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி/வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய்/ ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே


நண்பர்காள்! இது சென்னை. வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.க. அவர்களின் ‘தேசபக்தனின்’ சாது அச்சுக்கூடம்.அதுவே யான் கூறும் குருகுலம்). சென்னையின் பட்டாளம் பகுதியில் தான் தொழிளாலர்கள் பெரும்பாலும் வசித்தனர். திரு.வி.க. அவர்கள் ஒரு தொழிளார் சங்கத்தலைவர் என்பதை நம்மில் பலர் அறிந்ததில்லை. மற்றொரு நாள் அது பற்றி, யாராவது கேட்டால் எழுதலாம். பட்டாளத்திலிருந்து தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெரிய பட்டாளம் சாது அச்சுக்கூடத்தில் வந்து சேர்ந்தது. சத்யாக்ரஹ சிந்தனைகடலில் மூழ்கி அவர்கள் தத்தளித்தாலும், தலைவரின் ஆணையை மறக்கவில்லை. அதனால் நிம்மதியில்லாத அமைதி. அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு  அந்த பேரலை ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்கிறது.  தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.க. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார்.  அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இதை நூறாண்டுகளுக்கு பின் எழுதும் போது, அர்ஜுனனின் உடல் நடுங்கியது போல, என் நாவு உலர்ந்து விட்டது. தேகமாடுகிறது. நடை தளர்ந்து விட்டது. இது என் அனுபவம். 

படிச்சாப்போல இருக்கே என்று சிலர் சொல்றது காதில் விழறது! அதுக்காக விட்றதாவது? இது பற்றி நான் சொன்னதை ஸுபாஷிணி ஒலிபதிவு செய்த பிறகு தானே, மின் தமிழுக்கே வந்தேன்! இண்டிக் ரூட்லெ வேற போட்றுக்கேன். ஸோ வாட்? ப

இந்த கூட்டம், களிறு போல், கடற்க்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும்  அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். திலகர் திடம். புனித பூமி. தற்காலம் 'அழகு' படுத்தப்பட்டு உரம் இழந்தது. தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.க.வை கைது செய்வார்கள் என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது.
(தொடரும்) 

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [3]
இன்னம்பூரான்
ஏப்ரல் 8, 2019
பிரசுரம்: வல்லமை:
http://www.vallamai.com/?p=91473

சான்றோர்கள் வரலாறு படைக்கிறார்கள். நிகழ்வுகளும் அவர்களது வாழ்க்கையின் படிநிலைகளாக அமைந்து விடுகின்றன. திரு.வி.க. அவர்கள் காந்தி மஹானை முதல் தடவை சந்தித்து தேசபக்தர் சேலம் விஜயராகவாச்சாரியர் அவர்களின் அன்பினால் கிடைத்த அறிமுகம். காந்திஜி சென்னைக்கு வரும் ரயிலில், அரக்கோணமோ, ஜோலார்பேட்டையா என்பது நினைவில் இல்லை. அந்த ஜங்க்ஷனில், சேலம் விஜயராகவாச்சாரியார் கொடுத்தக் கடிதத்துடன், ரயில் வண்டியில் ஏறி, தயக்கத்துடன் காந்திஜியை சந்தித்து அதை கொடுக்கிறார். தன் சொற்பொழிவுகளை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்த்து அளிப்பதற்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறார். அதற்குத்தான் இந்த சிபாரிசு. காந்திஜி நேராக, சுற்றி வளைக்காமல், விஷயத்துக்கு வருபவர். அவருடைய வினாக்களுக்கு திரு.வி.க. விடையளித்தது என் தாத்தாவை எனக்கு நினைவூட்டுகிறது. தாது வருட பஞ்சத்தில் அடிப்பட்டு, தரிசாக போய்விட்ட அரந்தாங்கியை விட்டு, பிழைப்பு தேடி, செட்டி நாடு வந்த அவரை வேலைக்கு வைக்கப்போகும் செட்டியாரிடம், அவர் ‘ எனக்கு இங்கிலீஷ் தெரியாது; தமிழ் தான் நன்றாகத்தெரியும். உங்கள் வேலைகளை தரமான முறையில் செய்வேன்.’ என்றாராம். செட்டியாருக்கு இவர் வேலை செய்யும் தோரணையும், திட்டமிடுதலும், பிடித்துப்போய்விட்டதாம். கதவுகளில் வெள்ளித்தகடு அடித்த தன் சொந்தக் காரை தான் இவருக்கு அனுப்புவாராம். ஏதோ பழங்கதை. இதே மாதிரி தான், எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்யாததை முன் வைத்து, காந்திஜியின் உரைகளை உடனுக்குடன், தமிழாக்கம் செய்து அளிக்க முடியும் என்று தீர்மானமாக சொல்லி விடுகிறார். அவரும் ஏற்றுக்கொள்கிறார். பிறகு சென்னையில் அந்த ஊழியமும் காந்திஜிக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைகிறது. இவரும் 
தமிழ் காந்தியாகி வருகிறார். அந்த உருக்கமான தொடர் நிகழ்வை எழுத ஒரு தனி புத்தகம் தேவை. இது நிற்க.

இன்று ஏப்ரல் 8, 2019. நூறு ஆண்டுகளுக்கு முன் அதே தேதியில்
[ஏப்ரல் 8, 1919] நடந்ததை கவனிப்போம். அண்ணல் காந்தி நிறுவிய சத்யாக்ரஹா கமிட்டி தற்பொழுது, பத்திரிகை, படைப்புகள் ஆகியவற்றில் தனக்கு சாதகமாக இல்லாததை மட்டுறுத்துவது என்ற விதியை மட்டும் மீறப்போவதாக தீர்மானிக்கிறது. காந்திஜி எழுதிய ஹிண்ட் ஸ்வராஜ்யா இதழ்கள்,சர்வோதயா இதழ்கள், யுனிவெர்ஸல் உதயம், சத்யாக்ரஹியின் கதை, துருக்கி சீர்திருத்தவாதியும், சர்வாதிகாரியும் ஆன முஸ்தாஃபா கெமால் பாஷா அவர்களின் வாழ்க்கை, உரைகள் அடங்கிய நூல் ஆகியவை, தடை செய்யப்பட்டிருந்த்தாலும், அதை மீறி சட்ட விரோதமாக விற்கப்படுகின்றன. அதில் ஈடுபடும் தியாகிகளில், காந்திஜி, சரோஜினி நாயுடு, திரு.சோபானி, திரு லக்ஷ்மிதாஸ் டைஶ்ரீ ஆகியோர் பிரபலம், அவர்கள் துணிவுடன் தன் கையொப்பமிட்டே அவற்றையும், பல சிறிய புத்தகங்கள், போஸ்டர்களை விற்றனர். இந்த செயலை நாம் இன்று உற்று நோக்கும்போது, கருத்துத்தடை இன்றும் செயல்படுகிறது என்று புலப்படுகிறது. அதனால் தான் நான் எழுதிய திரு.வி.க. சரிதம் பிரசுரம் செய்ய முடியவில்லை. அதில் ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ என்று ஒரு அத்தியாயம் தலைப்புடன் மட்டும் நிற்கிறது.
-#-