அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23
‘...வெய்ய கதிரோன் விளக்காக...’ (பொய்கையாழ்வார்)
‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.’ (சங்கீதம்: 119:120 விவிலியம்)
‘பொய்யிலிருந்து தடுத்தாட்கொண்டு, என்னை மெய்ஞானம் நோக்கி அழைத்துச் செல்க என்று தினந்தோறும் இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘Lead, kindly Light...‘என்று கார்டினல் ந்யூமென் அதைத்தான் சொல்கிறார் அல்லவா!’
~அண்ணல் காந்தி வினோபா பாவேக்கு மார்ச் 10, 1947ல் எழுதிய மடல்.
வணக்கத்துக்குரிய கார்டினல் ஜான் ஹென்றி ந்யூமென் அவர்களின் ஜன்ம தினம் ஃபெப்ரவரி 21,1801. பரலோகம் அடைந்த தினம், ஆகஸ்ட் 11, 1890. இரு நாட்கள் முன்னால் எழுதாமல், ஆகஸ்ட் வரை காத்திராமல், பொய்கையாழ்வாரின் துணை நாடி, கார்டினல் ஜான் ஹென்றி ந்யூமென் அவர்களை பற்றி இன்று ஏன் எழுதவேண்டும்? இது என்னுள் எழுந்த வினா.
நேற்றைய நன்நிமித்தம்: ‘... ஒரு அகல் விளக்கை (மெழுகுவர்த்தி) தீப ஒளியாக, இன்றைய தினம் சாயும் வேளையில் வைக்கும் சாரண இயக்கத்தின் குறிப்பு, போற்றத்தக்கது => ‘Lead, Kindly Light.’...’ என்று எழுத நேரிட்டது.
ந்யூமென், ஃபெப்ரவரி 23, 1843 அன்று,ரோமன் கத்தோலிக்க மதம் பற்றி தான் அது வரை கூறிய கடுமையான விமர்சனங்களை நிராகரித்து ஒரு அறிக்கை விட்டார். இரண்டு வருடங்கள் கழிந்த பின் அக்டோபர் 5, 1845 அன்று கத்தோலிக்க மதம் அவரை ஏற்றுக்கொண்டது. விரைவில் கார்டினல் என்ற மிக உயர்ந்த பதவி அவரை தேடி வந்தது. இவருக்கு பால்யத்தில் சமய ஆர்வம் இருக்கவில்லை. சீர்திருத்த வாதிகளின் தாக்கம் இருந்தது. 15 வயதில் சமய ஆர்வம் இவரை ஆட்கொண்டது. கால்வினிஸ்ட் மரபு இவரை ஆகர்ஷித்தது. காலப்போக்கில், சம்பிராயதமான ஆங்க்ளிகன் எனப்படும் சமயப்பிரிவில் மத போதகராகி விட்ட ந்யூமென், 23 வயதிலேயே முதல் போதனை பிரசங்கம் செய்து பிரபலமானார். 20 வருடங்களில் அவர் மதம் மாறியதை ஒரு அபூர்வமான ஆன்மீக பயணம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சராசரி கிருத்துவ மத போதகரின் கரடுமுரடான பாதை இது அன்று. இது காரணம் இரண்டு. அதனால் தான் சங்கீதம்: 119:120 விவிலியம் பாடப்பட்டது.
இவருடைய பணிகள் யாவும் உன்னதமானவை. ஆனால், இன்று டப்ளின் பல்கலைக் கழகமாக விளங்கும் அயர்லாந்தின் கத்தோலிக்க பல்கலைக்கழக ஸ்தாபனம், கல்வியை பற்றி அவர் அளித்த அருமையான அறிவுரைகள், 'Lead, Kindly Light' என்ற அமரகாவியம் ஆகிய மூன்றையும் உலகம் என்றும் மறக்காது. மேலும் ஒரு தனிச்சிறப்பு. 'Lead, Kindly Light' மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது. இது மூன்றாவது காரணம். அந்த சமரச சன்மார்க்கத்தை பற்றி கூற விருப்பம்.
அண்ணல் காந்தியின் கடிதமே ஒரு சான்று. ஜூன் 16, 1833ல் எழுதப்பட்ட இந்த தோத்திரம், மத எல்லைகளை கடந்து, பயணித்தது. ஏழே வருடங்களில், கிட்டத்தட்ட எல்லா தோத்திரத்தொகுப்புகளிலும் இது இடம் பெற்றது. கிருத்துவ மரபுகளில், யுனிடேரியன், பாப்டிஸ்ட், மெதடிஸ்ட் எல்லா மரபுகளும் இதை ஸ்வீகரித்துக்கொண்டன. ஆங்கில மொழியில் உள்ள தோத்திரங்களில் இது முதன்மை இடத்தைப் பிடித்து விட்டது என்றால் மிகையாகாது. நிதானமாக படித்துப்பார்த்தால், எளிய நடையில், இறைவனுடன் தனிமனிதனின் ஆன்மீக உரையாடலாக புலப்படும். அண்ணல் காந்திக்கு இந்த தோத்திரத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு பற்றி பல கடிதங்களும், ஆவணங்களும் உளன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக:
ஃபெப்ரவரி 10, 1908 அன்று ஜோஹனஸ்பர்கில் அவருக்கு பலமான அடி. ஸ்மட்ஸுடன் கூடி ஏமாற்றிவிட்டார் என்று தவறாக கருதிய இந்தியன் முஸ்லீம்கள் அவரை தாக்கினர். அடைக்கலம் கொடுத்தது ஜோஸஃப் டோக் என்ற பாதிரி. காந்த்ஜியால் பேசமுடியவில்லை. உதடு வீக்கம். அவர் மூன்று வேண்டுகோள்களை எழுதினார். ஸ்மட்ஸுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வசதி செய்யவேண்டும்; தன்னை அடித்தவர்களை விடுவிக்க வேண்டும் விண்ணப்பத்தை அரசு வக்கீலிடம் அனுப்ப வேண்டும். டோக் அவர்களின் பெண் ஆலிவ் Lead, Kindly Light' பாடவேண்டும்.
‘Lead, Kindly Light'
"Lead, Kindly Light, amidst th'encircling gloom, Lead Thou me on! The night is dark, and I am far from home, Lead Thou me on! Keep Thou my feet; I do not ask to see The distant scene; one step enough for me.
I was not ever thus, nor prayed that Thou Shouldst lead me on; I loved to choose and see my path; but now Lead Thou me on! I loved the garish day, and, spite of fears, Pride ruled my will. Remember not past years!
So long Thy power hath blest me, sure it still Will lead me on. O’er moor and fen, o’er crag and torrent, till The night is gone, And with the morn those angel faces smile, Which I have loved long since, and lost awhile!
Meantime, along the narrow rugged path, Thyself hast trod, Lead, Saviour, lead me home in childlike faith, Home to my God. To rest forever after earthly strife In the calm light of everlasting life."
இதை தமிழில் மொழியாக்கம் செய்யப்போவது யார்?
இன்னம்பூரான்
23 02 2012
உசாத்துணை
பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, சுய அனுபவம்/புராணம் ஒன்றை ஓதி விடலாமா?
இ
|
No comments:
Post a Comment