அன்றொரு நாள்: ஜனவரி: 6
அழகுக்கு ஒரு ஆராதனை
‘கோயிலில் நாட்டியம் நின்று போனால் என்ன?; நாட்டிய அரங்கம் கோயிலாயிற்று.’
~ருக்மணி தேவி அருண்டேல்
அழகு அழியாது. அழகு நீடூழி வாழும். அழகு எங்கும் உளது. அழகின் ஆராதனை வாழும் கலை. அழகுக்குத் தான் முதல் மரியாதை.
பரிதி எழுமுன் செவ்வானம் அழகு. நிலா காய்கிறது,குளிர்ச்சியாக. அதுவும் அழகு. என்னே அழகு, இந்த மீன் துள்ளல்! அன்ன நடையும், கடுமா பாய்ச்சலும், அரிமா நோக்கும், பருந்து வட்டமும், மயிலின் ஒயிலும் சொல்லொண்ணா அழகு! அன்றொரு நாள் லாஸ் ஏஞ்லெஸ் அருங்காட்சி மையத்தில் அழகு உருவாகுவதைக் கண்டேன். முட்டையிலிருந்து எட்டி, எட்டிப்பார்த்தக் கோழிக்குஞ்சு! சில நிமிடங்களாகும் என்று நினைத்தேன். இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை. ஆனால், உயிர்மையின் வரவு; வந்து நின்ற நேர்த்தி; அழகின் வடிவே, அந்த குஞ்சு. எனக்குள் சொல்லிக்கொண்டேன், ‘இறையும், இயற்கையும், அழகும் ஒன்றே.’
சிலப்பதிகாரத்தின் ‘...ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,
கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து...’
இருந்த அரங்கமேடை பார்த்தீரோ? அங்கு
‘...யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடலில்...’
மயங்கினீரோ?
‘ஓர் ஈர் - ஆறு ஆண்டில்
சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி -
இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து...’
ஆடிய சிறுமி மாதவியின் நடனத்தைக் கண்டு களித்தீரோ? வெட்கம், நாணம், மடம், பயிர்ப்பும் மட்டுமே தரக்கூடிய புன்முறுவலுடன் நிற்கும் மணமகளாய், மதுரை மீனாக்ஷியை கண்டீரோ? கல்லில் அதை செதுக்கிய ஆயனர்களுக்கு அழகு தான் ஆதாரஸ்ருதியோ?
‘இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்ட...’ கோதையின் மனதை புரிந்து கொண்டீர்களா?
ஶ்ரீராமனின் வீராசனத்தின் கம்பீரம் காணீரோ, ரவி வர்மாவின் ஓவியத்தில்? ‘ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிக்கும்’ அந்த தீராத விளையாட்டுப்பிள்ளையின் சில்மிஷத்தைக்கண்டு களித்தீரோ? திலோத்தமையின் பேரழகில், என்னைப்போல், சொக்கிப்போனீரோ?
நான் அழகை ஆராதிப்பவன். அதனால், இன்று ‘அத்தை’யை பற்றி பேச்சு. கலைத்தொண்டு குறையக்கூடாது என்று, இந்திய ஜனாதிபதி பதவியை மென்மையாக மறுத்த அழகியல் சேவகி, அத்தை. அன்றொரு நாள், அந்த எண்பது வயது அழகியையும், கமலா தேவி சட்டோபாத்யாவையும் அழைக்க சென்றதும், பிற்காலம் நம் அகத்துக்கு வருகை தந்திருந்த‘ஆனந்தி டீச்சருடன்’ அத்தையை பற்றி அளவளாவியதும், பசுமையான நினைவுகள்.
ஜனவரி 6, 1936 அன்று சுபஜெனனம்: கலாக்ஷேத்ரா. இனி தலபுராணம்.
அழகை, அதன் பிம்பமான கலையை, கலையின் உருவகமான பரதநாட்டியத்தை, அதனுடைய பாங்கியான இசையை போற்றி, புகழ்ந்து, வணங்கி, ஆராதனை செய்ய கோயிலொன்று எழுப்பி, அதில் ‘அழகு தேவதையை’ பிரதிஷ்டை செய்தார், ‘அத்தை’ ருக்மணி தேவி அருண்டேல். உறுதுணை ஜார்ஜ் சிட்னி அருண்டேல். மூலஸ்தானம்: பிரும்மஞான சபை, அடையார். தல விருக்ஷம், அடையார் ஆலமர விழுது. நாமகரணம்: பண்டித எஸ். சுப்ரமண்ய சாஸ்திரி. ருக்மணி தேவியே உபாசகர். நாட்டிய சாத்திரத்துக்கு வாழையடி வாழை சீடர்களின் பரம்பரையை நிலை நாட்டிய பெருமை அவரைச் சாரும். அவர் புகுத்திய ‘அடவு’ சீர்த்திருத்தத்தின் பெருமை அபாரம். மரபு போற்றப்பட்டது; நவீனம் வரவேற்கப்பட்டது. மேற்கத்திய ‘பாலே’ நிருத்யத்தையும், பாலே செல்வி அன்னா பாவ்லோவிடம், கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார். இத்தனைக்கும் அவருடைய முதலாசை, இசையாசை.
ஆரம்பகால பூஜாரிகள்: திருவாளர்கள். ‘ருக்மணியின் முதல் ஆசான் முத்துக்குமார பிள்ளை, பிரபல நாட்டிய மேதைகளாகிய மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை,சொக்கலிங்கம் பிள்ளை, ‘நிருத்யம்’ காரைக்கால் சாராதாம்பாள் அம்மாள், தண்டாயுதபாணி பிள்ளை, மைலாப்பூர் கெளரி அம்மாள், கதக்களி லெஜண்ட் அம்பு பணிக்கரும், சந்து பணிக்கரும், மைசூர் வாசுதேவாச்சாரியார், (பிரின்சிபால் வரிசை): வீணை சாம்பசிவய்யர், ‘கோட்டு வாத்தியம்’ பூதலூர கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்,் டைகர் வரதாச்சாரியார், வீணை கிருஷ்ணமாச்சாரியார்,மைசூர் வாசுதேவாச்சாரியாரின் பேரன் ராஜாராம்:, டி.கே. ராமசாமி ஐயங்கார், மதுரை சுப்ரமண்ய ஐயர், ‘பக்தி’ பாபநாசம் சிவன், ‘தாளம்’ காளிதாச நீலகண்ட ஐயர், எம்.டி.ராமநாதன். இலக்கிய மேதை வெ.சாமிநாத சர்மாவும் கலாக்ஷேத்ரா வாசியானார். கலாக்ஷேத்ரா என்றால், உன்னத வேட்கை, பேரெழில், பணியில் ஆர்வம். சங்கரமேனனின் நிர்வாகமும், தத்துவ போதனையும்,சாரதாவின் ஆய்வும், கருவூலப்பணியும், பத்மாசினியின் மருத்துவப்பணியும், எம்.டி.மணியின் செயலாற்றலும்,கமலா திருலோகேகரின் பள்ளி நிர்வாகமும், அத்தைக்கு கை கொடுத்த வரலாற்றை மறக்க இயலாது.
பிரபல சிஷ்யகோடிகள்: ‘நட்டுவாங்கம்’ கமலா ராணி, புஷ்பா, டாக்டர்.பத்மாசினி (இசை)எஸ். சாரதா, ராதா, லீலாவதி, ஏ.சாரதா, ஆனந்தி, கிருஷ்ணவேணி, பசுபதி, குன்ஹிராமன்,ராமன்,லக்ஷ்மணன், தனஞ்சயன், பாலகோபாலன்,ஜனார்த்தனன் என்ற நீண்டதொரு வரிசை. விட்டுப்போனவர்கள் பலர்; அவர்கள் மன்னிப்பார்களாக. இந்திய அரசு கலா க்ஷேத்ராவின் மரபை போற்றுகிறது. தற்காலம், அதன் தலைவர் கோபால் கிருஷ்ண காந்தி: டைரக்டர் அத்தையின் சிஷ்யை லீலா சாம்ஸன். கலா க்ஷேத்ரா ஒரு உலகக்ஷேத்ரா இன்று. பாருங்களேன். ஹிலரி க்ளிண்டன் தேடி வருகிறார், பவளவிழா கொண்டாடிய இந்த பவளக்கொடியை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு வரம். அத்தையின் சிஷ்யையான வித்யா திருநாராயண், என்னுடைய மருமகள். பள்ளி மாணவியான எனது ‘ஓர் ஈர் ஏழாண்டு’ பேத்திக்கு அத்தையின் பெயர்; என் அம்மாவின் பெயர். அவளும், அத்தையின் ஏகலைவ சிஷ்யையாக, கலா க்ஷேத்ராவின் மரபு, பந்ததியை, பாணியை போற்றும் நர்த்தகி.
இன்னம்பூரான்
06 01 2012
Secretary Clinton at Kalakshetra
உசாதுணை:
No comments:
Post a Comment