இசையும், நடனமும், கருத்தரங்கமும்
இன்னம்பூரான்
12 02 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=75007
உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4
இன்று வைகறையில், எழுந்தவுடன் நரிமுகத்தில் விழித்தேன் போல. தருமமிகு சென்னையின் இன்றையபோக்கு பற்றி சொல்லும்படியாக ஒன்றும் இல்லையென்றாலும், அசாத்திய துணிவுடன் பயணித்து, பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வீணையின் ரீங்காரமும், ஒத்த மத்தள சொல்லுக்கட்டு போன்ற ஆற்றல் மிகுந்த வாசிப்பும் அவைக்கு அலங்காரமாக அமைய, நடனம் அதற்கு மெருகேற்ற, ‘காலந்தோறும் தமிழ்!’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் இனிதே நடையேறியது. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா,ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா,ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி , சென்னை,ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்த விதத்தை பற்றி முதலில். அரங்கம், அருமையானது. மேடையில், நீதியரசர் எஸ்.மோஹன் அவர்களின் தலைமையில் அமர்ந்திருந்த சான்றோர்கள் நல்லதொரு காட்சி. அதற்கு இணைந்தவாறே, மேடைக்கு முன்புறம், சற்றே தாழ்ந்த படியில் வரிசையாக ஒரு புஷ்ப அணி. கணக்குப்போட்ட மாதிரி, கால அளவை மதித்து உரையாடிய தமிழர் அணி. பானுமதி எனப்படும் ஆதிரா என்ற அதிகாரியினி தான் ஓடியாடிக்கொண்டிருந்தார். அவர் என் கட்டுரையை படித்து விட்டார் போல! அதே கருத்து. மலேசியா போல, அரசு தமிழ் கருத்தரங்கம் நடத்தாததால், நாம் தான் முனைய வேண்டும் என்றார். ‘அதே! அதே! சபாபதே’ என்று மனனம் செய்து கொண்டு இருந்தபோது, தலைமை தாங்கிய நீதியரசர் எஸ்.மோஹன் அவர்கள் திருக்குறளை முன்வைத்து ஒரு கருத்துக்களஞ்சியமே வழங்கினார். தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நாணய ஆய்வு ஒன்றை அருளினார். எல்லாம் செல்லாக்காசு தான்! விலை மதிப்பற்ற தமிழ் வரலாற்றை பேசாமடந்தையாக முன் வைக்கும் நாணயங்கள். யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். மலேசிய துணையமைச்சர் தத்தோ எம்.சரவணன் அவர்களை மலேசியா சென்று சந்தித்து, பாடம் படிக்கப்போகிறேன். என்ன பாடம்? தமிழ் உச்சரிப்பு என்ற கவின்கலை. மொழி நயமும், குரல் வளமும், குறையிலா உரை ஒலியும், சொல்லும், பொருளும், கருத்துமாக இணைந்து வந்தன.
இந்த நிகழ்வு ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற ரகம். முனைவர் கோ.பெரியண்ணன் முதல் திரு.எ.கலி வரதன் வரை ஏழு புலவர்கள் அடங்கிய குழு ஒன்று ‘காலந்தோறும் தமிழ்’ என்ற இந்த ஆய்வுக்கோவையை ( கை வலி: அத்தனை தடிமன்: 180 கட்டுரைகள். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது, இதன் 1022 பக்கங்கள் திக்கெட்டும் செல்லும். என் குட்டுரை ( ஒரு மோதிரக்குட்டு வைக்கும் கட்டுரை: 25வது).
அரங்கம் இருந்த இடம்: ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை, சென்னை. இத்தனை பரிசுத்தமான கல்லூரியை நான் இந்தியாவில் கண்டதில்லை. மாணவர்களின் நன்னடத்தை வெளிப்படையாக தெரிந்தது. கல்லூரித்தலைவர் முனைவர். எஸ். ராமநாதன் அவர்களின் பெருந்தன்மை கண்கூடு. அவர் எங்களுக்கு அவர்கள் கல்லூரி ஹோட்டல் துறை மாணவர்கள் தயாரித்து பரிமாறிய இரு சுவை விருந்து அளித்தார். பிரமாதம். அந்த இரு சுவை இனிப்பு. இனிய விருந்தாகியதால், மற்ற சுவைகள் என் நாவை அடையவில்லை. ஆகவே, இனிப்பு + இனிப்பு. மற்ற சான்றோர்களை பற்றி எழுதாதது கை வலியால்! பொறுத்தாள்க. மாலை அமர்வில் கவிஞர். வைரமுத்து வந்திருக்கிறார். விருந்து லாகிரியில், நான் துயில் கொண்டேன்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
மேற்கோளுக்கு நன்றி: இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு.
இன்னம்பூரான்
வல்லமை - மின்னிதழ்.
காலந்தோறும் தமிழ்!
11 12 2016
ஞானத்தமிழ் என்ற சொல் ஒன்று உண்டு. அமுதம் என்றும் ஒரு சொல் உண்டு. ‘... திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த சங்கமென்னுனும்துங்கமலி கடலுள் அரிதி னெழுந்த பரிபாட் டமுதம்.’ என்ற சிறப்புப் பாயிரமாயினும், ‘அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தையிடுதிரியா- நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்குஞானத்தமிழ் புரிந்த நான்’ என்று பூதத்தாழ்வார், அன்பையும், ஆர்வத்தையும், இன்பத்தையும், சிந்தையையும் கலந்து இறைப்பற்று ஞானமுதமாக, நெக்குருகி பாடியது ஆயினும், ‘தமிழ்கூறு நல்லுலகத்து...’
என்று தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் பாராட்டியது ஆயினும், ‘தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினை..’ என சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் சீராட்டியது ஆயினும், ‘தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே! என்று கம்பர் மெய்மறந்து கனிவுடன் அழைத்ததாயினும்,
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்தொழுது படித்தடடி பாப்பா’ என்று மகாகவி பாரதியார் மழலை அமுதமூட்டியது ஆயினும், ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்!’ என்று தமிழமுதத்தை பாவேந்தர் புகழ்ந்ததாயினும், ‘தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு!’ என்று இனமும் குணமும் கண்டு நாமக்கல் கவிஞர் கவி இசைத்தது ஆயினும், அவற்றுடன்,
மலேசியாவின் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும், ஈகரைத் தமிழ்க் களஞ்சியமும், ‘அனைத்தும் ஒன்றே’ ஶ்ரீ நாராயண குருவின் பிரதம சீடராகிய மகாகவி குமரன் ஆசான் அவர்கள் நினைவை போற்றும் தமிழகக் கலை அறிவியல் கல்லூரியும், எம்மை இங்கு பிடித்திழுத்து வந்த ஆதிரா பதிப்பகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நற்பயனாகவும் சரி,
காலந்தோறும் தமிழ் செழித்து ஓங்கவேண்டும்; பட்டி, தொட்டி, பளிங்கு மாளிகை, கூட கோபுரம் தோறும், இறவா வரமாகத் திகழவேண்டும் என்று தமிழ்த்தாயிடம் வேண்டிக்கொண்டு, அதன் பொருட்டு, வரலாற்றின் அடிப்படையில் சில கசப்பான உண்மைகளை முன்னிறுத்தி, வருங்காலந்தோறும் தமிழ்மணம் தரணி முழுதும் வீசுவதற்கான ஆயத்தங்கள் செய்வோமாக.
இந்தியா விடுதலை பெற்றபின், அரசும், சமுதாயமும், கல்வித்துறையும் தமிழுக்கு செய்த பணிகள் சொற்பம். உதட்டளவில் உதிர்த்த வாய்பேச்சு வீரதீரங்கள் வியர்த்தமாயின. ‘நல்லதோர் வீணையாகவும், மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமல செல்வியாகவும், அன்னை பராசக்தியாகவும் அவதரித்த உத்தமி தமிழன்னை ‘திக்கற்ற பார்வதியாக’ வாடுகிறாள் என்பது தான் வரலாற்று உண்மை.
நமது கிராமங்களில், நிறைகுடங்களாகவும், கலங்கரை விளக்குகளாகவும், பண்டைத்தமிழின் திறவுகோல்களாவும் பணி புரிந்த தமிழறிஞர்கள் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் இலவசமாக எடுத்த பாடங்கள் எங்கே? சுப்ரதீபக்கவிராயர் வீரமாமுனிவருக்கு பாடம் எடுத்த விதம் அதே. தமிழ்த்தாத்தா, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் கற்றுக்கொண்டவிதம், அதே. தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தன் தந்தையிடம் படித்த விதம் அதே. அத்தகைய நன்முத்து வாசிப்புகள் ஏன் காணாமல் போயின?
கலோனிய அரசு தமிழுக்கு அளித்த பெருமிதம், விடுதலை அடைந்தபின் நமக்கு கிட்டவில்லை. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றுடன் தற்கால பட்டப்படிப்பு அட்டவணையை ஒப்பிட்டால், வெட்கி தலை குனிவோம். கலோனிய ஆட்சிமொழி சோற்றுக்கு ஒரு சோறு பதம், ஐ.சி.எஸ் பாடபுத்தகத்திலிருந்து:
1864 வருடம் ஜனவரி மீ 8 உ.”
‘மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.
விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்! தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.
மைல்கல்களாக நட்டவை, கூப்பிடும்தூரத்து கூழாங்கல்களாக வலுவிழந்த வரலாற்றை புரிந்து கொண்டால் தான், பாசம் அவசரமாக பரவசமான உரு எடுக்கும்.
- 1956: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம் 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம்
இந்த நன்னாளைத் ‘தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார்.
- 1966: ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா!
- 1967: தி.முக. பதவியேற்பு:‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.
- 1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
- 1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.
- 1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
- 1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
- 1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சகமாக உருவாக்கப்பட்டது
- 2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும்.
- 2010: மே 8: இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு...தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும் என்ற வீராப்பு.
- 2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது..என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
- 2011: "ஆட்சி மொழி" என்றால் அரசாணைகள் மொழி.1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆட்சி புரிந்தனர்.1966 லியே குஜராத்தி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேரூன்றிவிட்டது.. அங்கு தமிழ்நாட்டை சார்ந்த மேலதிகாரிகள் குஜராத்தியில் உரையாடினர். இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன.
- 2017: காலந்தோறும் தமிழ் மின்னொளி வீச, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடக்கும் இந்த நிகழ்வு அச்சாரமாக இருக்கட்டும் என்ற அவா;
- 2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம் 39/1956) நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா நடந்தால்..’ என்று ஒரு பகடி கற்பனை: கடுஞ்சொற்களை மட்டுறுத்தியதால் எனக்கு மன அழுத்தம்.
- அந்த விழாவில் ஏகோபித்தத் தீர்மானங்கள்:
- ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி;
- அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்;
- தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை;
- ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.
ஐயன்மீர்! அன்பு சகோதரிகளே! மாணவ மாணிக்கங்களே! இந்த பகடி கற்பனை உங்களை உசுப்பி எழுப்புவதற்கே. இன்று முதல் நாம் யாவரும் நாட்தோறும் இடை விடாமல் தமிழ் பாடங்கள் எடுப்போம்; தமிழ் பாடங்கள் கற்போம். அதுவே தமிழன்னையின் வேண்டுகோள் என்க.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
உசாத்துணை:
Guide to Records, Coimbatore District, pg.139
Salem District Gazetteer - Richards, Volume - 1 Page.93
Madras Legislative Debates, ‘The Madras Official Language Bill| Dated: 28.12.1956, Pages: 393 to 422)
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com