அன்றொரு நாள்: ஜனவரி:28
‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’
பரதகண்டத்திலே, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் நற்பெயருடன் அறியப்படும் பாஞ்சால சிங்கம் அமைதியின் மறு உரு; புரட்சித்தூண்; ஆன்மீகச்செம்மல்; லெளகீக மார்க்கபந்து; கடலோடி விடுதலை தேடியவர்; மனோபலசாலி; தியாகத்தின் சிகரம்; மாசற்ற ஜோதி. அந்தக்காலத்தில் லால்-பால்-பால் என்றால் மும்முகம் தோன்றும் ~லாலா லஜபத் ராய், பால கங்காதர திலகர். பிபின் சந்திர பால். ஜனவரி 28, 1865 முதல்வரின் அவதார தினம். நடுவரை பற்றி ஜூலை 23, ஆகஸ்ட் 1 ம் எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கேயும் http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூலை_23:I & http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூலை_23:I_%26_ஆகஸ்ட்_1. பிபின் சந்திர பால் அவர்கள் சென்னையை மகுடி ஊதி மயக்கியதை பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். விவரமாக எழுதவேண்டும்.
இந்தியாவுக்கு ஹோம் ரூல் என்று அன்னிபெசண்ட் முழங்கியது 1916ல். லாலாஜி அமெரிக்காவில் வசித்த காலம் 1914 -1919. அங்கு இந்தியாவின் ஹோம் ரூல் மையத்தை 1918லியே அவர் துவக்கினார். இளமை இந்தியா (எங் இந்தியா) என்ற இதழை துவக்கி அதனுடைய முதல் இதழில் (ஜனவரி 1918) டாக்டர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு எழுதி, கலோனிய அரசை பாடாய் படுத்திய கடிதத்தை, அதில் பிரசுரித்தார். எனக்கு தெரிந்து அதை பிரசுரித்த மற்றொரு இதழ், திரு.வி.க. அவர்களின் ‘தேசபக்தன்’.
லாலாஜியின் ஆன்மீக பின்னணி அதிசயமானது. கட்டுப்பெட்டி மதாபிமானம் நிறைந்த அக்காலத்தில், ஹிந்துவாக பிறந்த இவரது தந்தை இஸ்லாமியபற்று மிகுந்தவர். அம்மையோ சீக்கியம் சார்ந்தவர். ஹிந்து மத சீர்திருத்தங்களை சுவாமி தயானந்த சரஸ்வதி ஆர்ய சமாஜம் மூலம் பரப்பதொடங்கிய காலம், அது. தந்தையை கவர்ந்த அந்த இயக்கம் லாலாஜிக்கு மார்க்க பந்துவாக அமைந்தது வியப்புக்குரியது அல்ல.
இந்த பின்னணியிலிருந்து என்றுமே விலகாமல், அவர் அரசியலில் 1885ல் பிரவேசித்தார். கோகலேயுடன் 1905ல் இங்கிலாந்து சென்று இந்தியாவின் விடுதலைக்கு கணிசமான ஆதரவு திரட்டினார். 1907ல் பஞ்சாப்பில் ஒரு வேளாண்மை புரட்சி செய்ததற்காக, பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். சிறைவாசத்தில் சேகரித்த புள்ளி விவரங்களுடன் 1908ம் ஆண்டு மறுபடியும் இங்கிலாந்து சென்று, அத்துடம் ஒரு உலக திக்விஜயம் செய்து இந்திய விடுதலை வேட்கையை உலகுக்கு அறிவித்தார், 1920 வரை. அது ஒரு பெரிய பணி. நமது வரலாற்று ஆசிரியர்கள் அவ்வளவாகக் கண்டு கொள்ளாதது. நமது சகஸ்ரநாமி எம்.என்.ராய் அவர்களை பராமரித்த புண்யம் இவரை சாரும். இவருடைய நோக்குதலும் உலகளாவியது. பிரிட்டீஷ் தொழிற்கட்சி, ஐரிஷ் அரசியல் வாதிகள், போல்ஷிவிஸம் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தார். 1910 ~20 களில் இருந்த இந்திய உறவுகளை பாருங்கள். இவருடன் அரசியல் ஆய்வு செய்தது ஹார்திகர் ~மஹராஷ்ட்டிரர்; குருநாதர் ~எஸ்.சுப்ரமண்ய ஐயர். இவருடைய அமெரிக்க இதழில் கவிதை வடித்தவர் ~குருதேவ் ரபீந்த்ரநாத் டாகுர். முன்னுரை: பிரிட்டீஷார் ஜோசையா வெட்ஜ்வுட்.
உங்களுக்கு கேதரின் மேயோ எழுதிய ‘மதர் இந்தியா’ என்ற நூலை பற்றி தெரியுமோ? ஒரே ஒரு பிரதி இங்கு இருக்கிறது. அதை ‘சாக்கடை இன்ஸ்பெக்டர் ரிப்போர்ட் என்றார், காந்திஜி. அதற்கு, ‘இந்தியாவின் மனவருத்தம்’ என்ற மறுப்பு எழுதியவர் லாலாஜி. பயிற்சியின் முக்கியத்துத்தை உணர்ந்ததால், ஒரு இந்திய தொண்டர் படையை உருவாக்க, லோக் சேவக் மண்டல் என்ற அமைப்பைத் துவக்கினார்.
மூடி மறைக்கும் வித்தைகள் லாலாஜிக்குத் தெரியாது. மாணவர்கள் அரசியலில் முனைந்து ஈடுபடவேண்டும் என்று திட்டவட்டமாக அவர் சொன்னது, பெருந்தலைகளுக்கு பிடிக்கவில்லை. காந்தி வழியை ஆதரிக்காத லாலாஜி, கல்கத்தா காங்கிரசில் அதை எதிர்த்தாலும் அடுத்த வருடமே, நாக்பூரில் அதன் வசம் வந்துவிட்டார். ஆனால், காலபோக்கில், சி.ஆர். தாஸ் (அவரை பற்றி எழுதாமல் இருக்கலாமோ?), மோதிலால் நேரு துவக்கிய ஸ்வராஜ்யா கட்சியில் ஐக்யம் ஆனார். அக்டோபர் 30, 1928 ஒரு கரி நாள். அன்று சைமன் கமிஷனை எதிர்த்துச் சென்ற ஊர்வலத்தில், லாலாஜி தலைமை வகித்தார். ஒரு போலீஸ் முரடன் தடியால் தலையில் அடித்து, படுகாயப்படுத்தினான். அதை பொருட்படுத்தாமல் அன்று மாலை பொதுக்கூட்டத்தில், ‘என் மேல் படும் அடி ஒவ்வொன்றும், பிரிட்டீஷ் சவப்பெட்டியில் ஆணிகளாகும்’ என்று முழங்கினார். இவரது உடல் நிலை கெட்டுப்போய், நவம்பர் 17, 1928 அன்று விண்ணுலகம் ஏகினார்.
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
அதன்கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
நின்னையவர் கனன்றுஇந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெலாம் மறக்கொ ணாதுஎம்
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி
நீ வளர்தல் கென்செய் வாரே?
என்று பாரதியாரின் கவிதையை படித்துணர்ந்து, அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தும் போது, பாகிஸ்தானில், இன்றளவும் அவருக்கு இருக்கும் புகழை பாராட்டவேண்டும். லாஹூரில், தன் அன்னை குலாப் தேவியின் பெயரால் இவரது நன்கொடையில் எழுப்பப்பட்டு, காந்திஜியினால் ஜூலை 17, 1934ல் திறக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு, அன்றும், இன்றும், அரசு சலுகைகள் உண்டு. அதனுடைய பொறுப்பான நிர்வாகமே, அங்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சையே, லாலாஜிக்கு நினைவாஞ்சலி.
இன்னம்பூரான்
28 01 2012.
உசாத்துணை:
|
No comments:
Post a Comment