Tuesday, April 19, 2016

இன்னம்பூரான் பக்கம் சுழலும் வட்டமேஜை

இன்னம்பூரான் பக்கம் 

சுழலும் வட்டமேஜை

Wednesday, April 20, 2016, 1:58

இன்னம்பூரான்.

பிரசுரம்: http://www.vallamai.com/?p=68165
இன்னம்பூரான் பக்கம் — சுழலும் வட்டமேஜை

சில நாட்கள் எழுந்தவுடன் நரிமுக தரிசனம் கிடைக்கும். அந்த நாட்களில் எல்லாம் அமோகமாக நடந்தேறும். இன்று நரிமுகம் என்னை வட்டமேஜைக்கு இழுத்துச் சென்றது. அதுவும் அது என்னுடைய மாஜி வட்டமேஜை. இன்று காலை, வழக்கம் போல் ‘ஆல் ஓவெர் சென்னை’ சுற்றாமல் தாம்பரம், சித்லபாக்கம், சேலையூர், கிரோம்பேட் என்று குண்டுசட்டியில் குதிரை ஓட்டியபோது அசாத்திய அனுபவங்கள் கிட்டின.
முதலில் அந்தமான் ‘கைதி’ கிருஷ்ணமூர்த்தி வசமாக நம்மிடம் சிக்கிக்கொண்டார். முனைவர் சதாசிவத்தை பார்க்கச் சென்றால், நெய்வேலி முரளி, சென்னை அரி (ஹரி அல்ல) பாபு புடைசூழ அமர்ந்திருந்த அந்தமானார் எம்மால் இற்செறிக்கப்பட்டார். ஜிலேபி, பழவகைகள், பசங்களோடு போட்டிப்போட்டுக்கொண்டு உண்டு, நான் மதிக்கும் சதாசிவத்தின் அன்னைக்கு வணக்கம், இல்லத்தரசிக்கு வாழ்த்துக்கள், சிறாருக்கு ஆசி கூறி, விடை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகைய புத்தகச்சுமையை தலையில் கட்டினார், அருமை நண்பர் சதாசிவம்; அந்தமானில் மாட்டிக்கொண்ட கம்பனும் கூட வந்தார்.
இந்த நால்வர் அணி பைலட் ஆக முன் ஆடி வர, (சுழல் விளக்குதான் இல்லை) யாவரும் கிருஷாங்கிணி வீட்டுக்குப் படை எடுத்தோம். எக்கச்சக்க வரவேற்பு. ‘சுழலும் வட்டமேஜை’ தரிசனம். அது பற்றிய திண்ணைக் கட்டுரை மறு வாசிப்பு. அரவக்கோன் ஓவியங்கள் மனதுக்கு ஆறுதல் அளித்தன. ஏன் தெரியுமா? வண்டி ப்ரேக்டெளன்.
அப்படியும் இப்படியும் கைபேசிகள் முணுமுணுத்த பின் மாற்று வண்டி பிடித்து, வீராங்கனை சீதாலக்ஷ்மி தரிசனம். அடேங்கப்பா! ராஜதர்பார் ஊஞ்சல். சீதாவை விட நல்லமாதிரி அவர்கள் தங்கை. உபசாரம் பலம். போனவிடம் எல்லாம் தண்ணீர்ப்பந்தல் தான், போங்கள். சீதாலக்ஷ்மியின் உறவினர்கள் விழுந்து கும்பிட்டார்கள். காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜிப்பா!
ஒரு பாடாக தங்கை கமலா வீட்டுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டேன்.
இன்னம்பூரான்
ஏப்ரல் 17/19, 2016

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, April 18, 2016

கனம் கோர்ட்டார் அவர்களே [26]

கனம் கோர்ட்டார் அவர்களே [26]



இன்னம்பூரான்
ஏப்ரல் 16 ,2016

பிரசுரம் : http://www.vallamai.com/?p=68082
Monday, April 18, 2016, 5:10

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஆளவந்தார் கொலை வழக்கு நாள்தோறும் தடபுடலாக, ஊடகங்களில் உலா வந்தபடி இருக்கும். கட்டுப்பெட்டி பெண்ணரசிகளும் கட்டுக்கடங்கா ஆண்வர்க்கமும் விழுந்தடித்துப் படிப்பார்கள். அவர்கள் சற்றே அசந்தால் போதும். நாங்களும் ஒரு கண்ணோட்டம் விடுவோம். வகுப்பில், அக்கு வேறு, ஆணி வேறாக அலசுவோம். ஒரு குறுக்கு விசாரணை:
எதிர்த்தரப்பு வக்கீல்: ஆளவந்தாரும் தேவகியும் கட்டியணைத்து அந்தரங்கமாக இருந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எந்த ஜன்னல்?
சாட்சி: குளியலறை ஜன்னல்.
எ.வ: உங்கள் மூக்குக்கண்ணாடி சோடாபாட்டில் கண்ணாடியாக இருக்கிறதே. அதை போட்டுக்கொண்டு தான் பார்த்தீர்களா?
சா: ஆமாம்.
எ.வ. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
சா. குளித்துக்கொண்டிருந்தேன்.
எ.வ. ஓஹோ! கண்ணாடி போட்டுக்கொண்டுதான் குளிப்பீர்களோ?
சா. உம்………
எ.வ. குறுக்கு விசாரணை முடிந்து விட்டது, கனம் கோர்ட்டார் அவர்களே!
[சாக்ஷியம் குப்பையிலே.]
அதை நினைவூட்டும் வகையில் ஒரு அரசியல் கொலையைப் பற்றிய ஒரு கொலை வழக்கு ஏப்ரல் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் பைசல் செய்யப்பட்டது. டாக்டர் ஶ்ரீதர் என்ற பிஜேபி திருச்சி பிரமுகரை, ஒரு மதவெறி கும்பல் பெப்ரவரி 2, 1999 அன்று இரவு பத்து மணி அளவில் அவரது வீட்டு வாசலிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அவருடைய கூக்குரலை கேட்டு பதறி அடித்துக்கொண்டு வந்த அவருடைய மகள் இதைக் கண்ணால் கண்டாள். அவளது நேர்முக சாட்சியத்தில் ஓட்டை கண்டுபிடிக்க, அவர் அந்த மங்கலான ஒளியில் இதைக் கண்டு இருக்கமுடியாது என்று குற்றம் சாற்றப்பட்டவர்களின் வக்கீல்கள் செய்த சாகசங்களை இப்போதைக்கு விடுவோம். தெரு விளக்கும், மற்ற விளக்குகளும் நல்ல வெளிச்சம் போட்டதால், அவரால் தன் தந்தையின் கொலைகாரர்களை காணமுடிந்தது என்பதில் ஐயமில்லை என்று உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பு. இந்த மாபெரும் இயல்பு – உண்மையைக் கண்டுபிடிக்க, அடித்தள கோர்ட்டார் மூன்று வருடங்களும், உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களும், உச்சநீதிமன்றம் எட்டு வருடங்களும் எடுத்துக்கொண்டன.
தெரு விளக்கு வெளிச்சத்தில் வெளிச்சம் காண 16 வருடங்கள்!
ஹூம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.thebigstorage.com/images/ebay/sa/E59383.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com