அன்றொருநாள்: ஃபெப்ரவரி 28
மின்னல் கீற்று ஒன்று:
பிராண வாயு, கந்தகம், அமிலம், நேர் கோடு, புள்ளி, வட்டம், விட்டம், நாண், உயிரினம் போன்ற சொற்கள் எங்கள் பாடத்தில் இருந்தன; புரிந்தன; இன்று வரை - 65 ஆண்டுகளுக்கு மேல் கழிந்தும் - மறக்கவில்லை. பெ.நா. அப்புசாமி அவர்கள் எழுதிய விஞ்ஞானம் விளங்கியது. ஆனால், ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம், தீநுண்மம், நீல அச்சு,ஒற்றைச்சக்கரை, பொசுபேற்று, போன்ற தற்கால விஞ்ஞானத்தமிழ் சொற்கள் கடினமாக இருக்கின்றன; மணலை கயிறாக திரிப்பது எளிது என்று தோன்றுகிறது. பரிச்சியம் இருந்தால், பழக, பழக, அவற்றை புரிந்து கொள்வது எளிதாக ஆகலாமோ என்னமோ? நான் ஆங்கில சொற்களை தாராளமாக இணைப்பதற்கு சால்ஜாப்பு அளித்தாயிற்று.
ஆர்க்கிமிடீஸ்ஸின் வால்யூம் கணிப்பு, கலிலியோவின் புவி ஈர்ப்பு சோதனையின் பின்புலம், ந்யூடனின் ஆப்பிள், ஐன்ஸ்டீனின்... (சரி விடுங்க!), வாட்ஸன் & க்ரிக் DNA double helix structure: இவை எல்லாமே மின்னல் கீற்றுகள் தாம்.
DNA பற்றி எதை எழுதுவது? எதை விடுவது? அபாரமான கண்டுபிடிப்பு பற்றியா? அதனுடைய அதிசய தோற்றம் பற்றியா?, அதனுடைய அளவிலா கொடுப்பினைகள் பற்றியா?, அதனுடைய இடைவிடா சர்ச்சைகள் பற்றியா? உள்குத்து/ டம்மாம்குத்து விஞ்ஞான லடாய்கள் பற்றியா?
டி.என்.ஏ என்பது (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும். இது உயிரினங்கள் ஒவ்வொன்றின் செயல்முறைகளையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார்ந்த செய்திகள்/அன்பு கட்டளைகள்/அறிவுறுத்தல்கள்/ஆணைகளைக் கொண்ட ஒரு கரு அமிலம். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம் என்றால், நீங்கள் விடப்போவதில்லை. மர்மங்களை உள்ளடக்கியது இந்த ‘சாரை~சர்ப்பம்’ என்றால், வியங்கோள் வினாக்கள் தொடுப்பீர்கள், மின் தமிழ் காண்டீபத்திலிருந்து. வம்சம், பரம்பரை, சந்ததி எல்லாம் டி.என்.ஏ.யினால் பாதிக்கப்படும் என்றால், மிகவும் கவலைப்படுவீர்கள். வருங்காலத்தின் மனிதனின் தேக ஆரோக்யத்தை பாதுகாக்க, இது ஒரு திறவு கோல் என்றால், அவசரப்படுவீர்கள். எதற்கும் இந்த உடனடி கவிதை கேளுங்கள்:
நான் தான் வாட்ஸன், நான் தான் க்ரிக்,
பாருங்கோ! பாருங்கோ! எங்க ட்ரிக்!
வாழ்வாதாரத்தை கண்டுபிடிச்சுட்டோம்.
அது ஸிம்பிள் மரபணு (ஒட்டு மீசை) பசையாக்கும்!
அதன் கால அளவு 34 ஆங்க்ஸ்ட்ரோம்!
(நாங்க எகிறி குதிக்கறோம்! டும்! டும்!)
~ஈ.எஸ். ஆண்டர்சன் குழு: 1953 + இன்னம்பூரான் இடைச்செருகல்!
ஃபெப்ரவரி 28, 1953 நன்றாகவே விடிந்தது, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில். இனி நாடக பாணியில்:
காவெண்டிஷ் பரிசோதனை சாலை.
டி.என்.ஏ. மாடலுக்கு உலோக ப்ளேட்கள் ரெடியாகவில்லை. 16 வயது டெக்னீஷியன் மைக் ஃபுல்லர் அட்டைகள் வாங்க சைக்கிளை எடுத்துக்கிணு ஓட்றான்.போது போகலெயா! அவன் கொண்டுவந்த கட்-அவுட் அட்டைகளுடன் விளையாடுகிறார், வாட்ஸன். அதற்கு என்று செய்து வைத்த மாதிரி, மாடல் ரெடி! மாடல் ரெடிடோய்! மத்யானம் ஆயிடுத்து. வவுத்தைக்கிள்ளுது. தண்ணி போட ஆசை வருது. வாட்ஸனும், கிரிக்கும், அருகில் உள்ள ‘கழுகு’ என்ற பப் (எலீட் டாஸ்மாக்) செல்கிறார்கள். அங்கு உள்ள குடிமகர்கள் (எலீட் மருவாதை) இவர்கள் இருவரும் வாழ்வாதார மர்மம் கண்டுபிடித்து விட்டதாக கொக்கரிப்பதை இளக்காரத்துடன்,செவி சாய்க்காமல் கேட்கிறார்கள். கிரிக்கின் ஆர்வம் வீடு வரை. இல்லாள் ஓடிலிடம் ஓதுகிறார். அவளானால், ‘நீ வீட்டுக்கு வந்து இந்த மாதிரி ரீல் விட்றது வழக்கம் தானே’ என்றாளே, பார்க்கலாம்!
அதன் முதல் மாடல் லண்டனில், ஒரு ஜெட் கார், கால்குலேட்டர், தொழிலாளி வேவு மிஷின் ஆகியவையுடன், பல பட்டறையில், ஒன்றாக ஐம்பது வருடங்களாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் பசலி மாடல். ஆனால், அதை பார்த்தாலே, ஜனனம், வித்தியாசமான ஜனனம், மரபு சம்பாஷணை,மரபு மெளனம் எல்லாம் நிழல் நிழலாக ஓடிப்பிடித்த வண்ணம்.
இந்த கண்டுபிடிப்பு தரணி தனை தடபுடலாக மாற்றி விட்ட சாதனை,ஸ்வாமி! தங்களது ஃபெப்ரவரி 28, 1953 அன்றைய கண்டுபிடிப்பைப் பற்றி, இவர்கள் இருவரும், Nature என்ற கீர்த்திமான் விஞ்ஞான இதழில் எழுதியது, ஏப்ரல் 25, 1983 இதழில் பிரசுரமானது. ஜூன் மாதம் பாமரர்களுக்கு புரியும் வகையில், ந்யூ யார்க் டைம்ஸும் ஒரு கட்டுரையையும் பிரசுரித்தது. இரண்டுமே எளிதான ஆங்கிலத்தில்; அவை உசாத்துணையில் சுட்டப்பட்டுள்ளன.
பாரெங்கும் டி.என்.ஏ. என்பதே பேச்சு, இன்று! ஓடி ஒளியும் ‘தந்தை’ க்கு கொக்கி மாட்டவும், குற்றவியலிலும், மருத்துவத்திலும், வேளாண்மையிலும், வாழ்வியல் முழுதுமே டி.என்.ஏ.புகுந்து விளையாடுது, ஐயா! பற்பல தார்மீக வினாக்களும் எழுகின்றன, அம்மா! அது ஒரு ‘சாரை~சர்ப்பம்’ தான், சபையோரே! ஏதோ ஒரு சின்னம் இந்த Double Helix என்று சொல்லி விட்டு, நகர்ந்து விடமுடியாது.
இந்த பரந்த உலகின் எல்லா பகுதிகளிலும், தொன்று தொட்டு புழக்கத்தில் - பேச்சிலும், எழுத்திலும் - இருக்கும் வரலாற்று சுவடுகளில், உயிரூட்டவது பற்றிய ஓவியம், இந்த ‘சாரை~சர்ப்பம்‘ தான். சுமேரியன் ‘வாழ்வளிக்கும்’ தெய்வமான ‘நிங்கிழிடா’வும், ஸர் ஜான் உட் ரோஃப் (ஆர்தர் அவலான்) என்பவர் Serpent Power என்ற நூல் எழுதி மேற்கத்திய நாடுகளுக்கு விளக்கிய குண்டலிணி சக்தியும், மற்றும் பல புராதன தொன்மை கலாச்சாரங்களும் பற்றி நாம் அறிந்து கொண்டது சொற்பம். DNA க்கு கனவில் கண்ட சித்திரமும், சின்னமும் ஒரு விளக்கமும் தான் இந்த Double Helix என்று வாட்ஸன் சொன்னாலும், என்றோ ஒரு நாள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நமது முன்னோர்கள் படைப்பையும், ‘சாரை~சர்ப்பம்‘ சின்னத்தையும் பிணைத்தல்லவா வழங்கியிருக்கிறார்கள்! தருணம் கிட்டினால், மேலதிக விவரங்கள், தெரிந்த வரை.
இன்னம்பூரான்
28 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment