அன்றொரு நாள்: ஜனவரி:15
‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டால்...’
‘இனி பொறுப்பதற்கு இல்லை. தீயசக்திகளுடன் எம்மால் ஒத்துழைக்க முடியாது.’
~ஹென்ரி டேவிட் தோரோ
‘வன்முறைக்கு பதிலடி வன்முறை அல்ல.’
~மார்ட்டின் லூதர் கிங்
‘கேக்கறத முதல்லெ கேட்றுங்கோ.’ என்றார், ஒரு நண்பர். செஞ்சாப்போச்சு! அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் செய்த மாதிரி, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், காந்திஜியாலும், பாபாசாஹேப் அவர்களாலும் ஏன் செய்ய முடியவில்லை?’
பட்டித்தொட்டிகளில் காந்தி நகர்; அம்பேத்கார் சிலை. அம்மாதிரி, அமெரிக்காவில் எங்கெங்கும் மார்ட்டின் லூதர் கிங். ஆதங்கம் என்னவென்றால், பெரும்பாலும் அவை எல்லாம் நீக்ரோ குடியிருப்புகளில். அவர் மெம்ஃபிஸ் நகரில் (கீதா: அந்த இடத்தை பணிவுடன் போய் பார்த்துவிட்டு வந்து எழுதவும்.) ‘... சுடப்பட்டு இறந்து 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் அவரை நீக்ரோ இனத்து தலைவராக மட்டும் பார்க்கிறார்கள். அது தவறு. அவர் நீக்ரோ இனத்திற்கு விடுதலை பெற்று தந்தாலும், அமெரிக்காவின் இனவெறி பாசாங்கிலிருந்து வெள்ளையர்களை விடுவித்தார்...’ என்று ‘டைம்’ இதழ், ஏப்ரல் 13, 1998 அன்று எழுதியது.
மூன்றாவது தலைமுறையாக, உயர்கல்வியிலும், மத போதனை செய்வதிலும் நற்புகழ் வாய்த்த குடும்பத்தில் ஜனவரி 15,1929 அன்று பிறந்தவர், இன்றைய கதாநாயகன். அவருக்கு, இறுகிக்கட்டித்தட்டிப்போன கிருத்துவ மத போதனையை, பொடித்து வடிகட்டி ‘வஸ்த்ராயனம்’ செய்து, மறு உரு அமைத்த மத குரு மார்ட்டின் லூதரின் (அன்றொரு நாள்: டிசம்பர் 10: காசும் கடவளும்) நாமத்தைச் சூட்டினார்கள்; பிற்பகுதி மட்டும் ( மைக்கேல்) லூதர் என்று. அவரிடமே ‘முன்னம் அவருடைய நாமம் கேட்டால்’, ‘மார்ட்டின் லூதர் கிங்’ என்றார். அதுவே நிலைத்தது. பள்ளிப்படிப்பு, நீக்ரோக்களுக்காக விலக்கி அமைக்கப்பட்ட பள்ளியில்; பாட்டனும், தந்தையும் படித்த பிரபல நீக்ரோ கல்லூரியில் மேல்படிப்பு. மத போதனை துறையில் முனைவர் பட்டம் 1955ல். 1954லிருந்து மாண்ட்கோமரி, அலபாமாவில், மத குரு. மனித உரிமையை பாதுகாப்பதில் ஆர்வம். அமெரிக்காவில் நிறபேதத்தால் இன்னலுக்குட்படும் சமூகங்களின் நலன் நாடும் தேசீய இயக்கத்தில் பொறுப்பு. இவ்வாறு தெய்வீகப்பணியும், மனிதநேயத்தொண்டும் செய்ய தொடங்கிய உண்மை கிருத்துவருக்கு, ‘Lead! Kindly Light!’ (இதனுடைய விளக்கம் ஒரு நாள் வரவேண்டும்.) ஆக மஹாத்மா காந்தி தான் மார்க்கபந்து.
ஏசு நாதர் ‘ஒரு கன்னத்தில் அடித்தால், அடுத்தக் கன்னத்தைக் காட்டு’ என்றார். (மத்தேயு 5;39)
. அது கோழைத்தனம் அன்று; ஆன்மீகபலம்: பிறகு தான் விளக்க வேண்டும். 26 வயது இளைஞரான மார்ட்டின் லூதர் கிங் அந்த அற நெறியை டிசம்பர் 1955ல் எதிரொலித்த போது, (அன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்!) [
(http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_டிசம்பர்_1) }50 ஆயிரம் நீக்ரோக்கள் கீழ்ப்படிந்தனர். வரலாறு காணாத வெற்றி.
அந்த மஹாத்மியத்தை அழகாக எடுத்துரைத்தவர் நோபல் பரிசு கமிட்டி தலைவர் திரு. கன்மர் ஜாஹ்ன் அவர்கள்.
“...சிறுவயதிலேயே ஏழ்மையும், செல்வசெருக்கும் அடுத்தடுத்த வீடுகளில் இருப்பதை புரிந்து கொண்டவர், மார்ட்டின் லூதர் கிங்...அவர் வாழ்ந்த சமுதாயத்தில் ‘தீண்டாமை’ யின் ஆட்சி. அதன் கொடுமையை, நீக்ரோ சமுதாயமே அசிரத்தையுடன் பொறுத்துக்கொண்டது, மேலும் கொடுமை. மத குருமார்களும், ‘சாமிப்பேச்சுடன்’ சரி...திருமதி ரோசா பார்க்கின் போராட்டத்தை, இவர் ஒரு கிருத்துவ போதனைகளின் மூலம் அறிந்து கொள்ள முயன்றார்...நாமும் நீக்ரோ சமூக உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அன்றாடப்பொழுது கழிவதே பிரச்னை. கிருத்துவமதம் ஒன்று தான் அடைக்கலம்... அந்த பின்னணியில் மார்ட்டின் லூதர் கிங் கூறுவதை கேளுங்கள் ~‘ஏசுநாதரின் அன்பின் பிணைப்பை, அதன் அற நெறியை ஒரு சமுதாய சக்தியாக, வரலாற்றிலேயே முதல் தடவையாக படைத்த பெருமை மஹாத்மா காந்தியை சாரும். அவர் தான் எனக்குத் தெளிவு அளித்தார். அவருடைய அஹிம்சை சத்யாக்ரஹத்தில் மட்டுமே நசுக்கப்பட்டவர்களுக்கு வடிகால் இருக்கிறது.’...
‘...மார்ட்டினுக்கு அவர்களுடைய சமூகத்திலேயே எதிர்ப்பு இருந்தது. 1963ல் சிறைலிருந்து அவர் அளித்த விளக்கம் கேளீர்: ‘பேச்சுவார்த்தை நடத்தச்சொல்கிறீர்கள். ஒத்துக்கொள்கிறேன். என்னுடைய நேரடி போராட்டத்தின் இலக்கு அதுவே...நான் சட்டத்தை மீறுவதைக் கண்டிக்கிறீர்கள். தார்மீகமான சட்டங்களும் உண்டு. அதர்மமும் சட்டத்தின் போர்வையில். தன்னைக்கட்டுப்படுத்திக்கொள்ளாமல், சிறுபான்மையினரை ஒடுக்கும் சட்டங்கள் அதர்மமானவை. அதை மீறும்போது, வெளிப்படையாகவும், கனிவாகவும், தண்டனையேற்க விருப்பத்துடனும் இயங்கவேண்டும்.’ இது எல்லாம் காந்திஜி அளித்த படிப்பினைகள். ...மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் மாபெரும் சாதனை, ‘ஒரு நீண்டகாலத்து காழ்ப்புணர்ச்சியை, இரு தரப்பிலும் தணித்ததே’ என்று சொல்லி,
தங்கள் நாட்டு கவிஞர் அர்னுல்ஃப் ஓவர்லாண்ட்(1889-1968) அவர்களின் கவிதை ஒன்றிலிருந்து ‘நிராயுதபாணிகளுக்கு ஆத்மபலம் தான் நிரந்தர ஆதரவு தருகிறது’ என்ற மேற்கோளை எடுத்துரைத்து முடிக்கிறார். இந்த உரை நிகழந்த தினம், டிசம்பர் 10, 1964, நோபல் பரிசை 35 வயது இளைஞரான மார்ட்டின் லூதர் கிங் அவர்களுக்கு அளித்த போது. அதை பெற்றுக்கொண்ட கிங் அவர்கள், அடக்குமுறையையும், வன்முறையையும் தணிக்க அடக்குமுறையையும், வன்முறையையும் உதவாது என்பதை இந்த பரிசு தெரிவிக்கிறது என்றார். பரிசுத்தொகையான $54,123 முழுதையும் உரிமை போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்போவதாக அறிவித்தார். அமெரிக்காவில் ‘நிக்கர்’ என்ற இழிச்சொல் ‘நீக்ரோ’வாக மாறி, பின்னர் ‘கறுப்பனாக’ திருத்தியமைக்கப்பட்டு, அதுவும் தற்காலம், ‘அஃப்ரோ-அமெரிக்கன்’ ஆனது. இருந்தும், இக்கட்டுரையில் ‘நீக்ரோ’ என்ற சொல்லை உபயோகித்ததின் காரணம், நோபல் ஆவணங்களில், வரலாற்று சொல்லாக, அது தான் உபயோகிக்கவேண்டும் என்ற மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்த விருப்பம். அவருடைய கனவை பற்றி மற்றொரு தருணம் தான் எழுத இயலும்.
ஏப்ரல் 4, 1968 அன்று குப்பை அள்ளும் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த அவரை, ஒருவன் சுட்டுக்கொன்றான். அதை நினைக்கும் போது, அதற்கெல்லாம் பல வருடங்களுக்கு முன்னால், ஒரு படுகொலை மிரட்டல் வந்த போது, அவர் மண்டியிட்டு பிரார்த்தித்தபோது, அவருடைய ஆத்மா எடுத்துக்கொடுத்த தேவ வாக்கு:
‘மார்ட்டின் லூதர்! நன்னெறிக்கு போராடு. நியாயத்திற்கு போராடு. வாய்மைக்கு போராடு. நான் உன் கூடவே இருப்பேன், உலகமே கவிழ்ந்தாலும்.’
இன்னம்பூரான்
15 01 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment