அன்றொரு நாள்: ஜனவரி:19
ஏடாகூடம்!
இன்றைய ஏமென் என்ற வளைகுடாபகுதியின் ஏடன் நகரத்தில் கலோனிய ஆட்சி புரிந்தது, இந்திய அரசு என்பது ‘ஏடாகூடமான பேச்சாக’த் தோன்றினால்...!
இந்த மேற்கத்திய நாடுகள் மூக்கை நுழைக்காத இடங்கள் இல்லை போல இருக்கிறது. 1838ல் அங்கு 600 அராபியர்களும், சோமாலியர்களும், இந்தியர்களும் கூரை வீடுகளில் இருந்தனராம். சுல்தான் முஹ்ஸின் பின் ஃப்ஹ்டி ஆங்கிலேயர்களுக்கு அந்த சிற்றூரை தத்துக் கொடுத்துவிட்டார். கிழக்கிந்திய கம்பெனி கடற்படையில் வந்து, பிற்காலம் உலகப்புகழ் துறைமுகமாக ஆகக்கூடிய ஏடனை ஆக்ரமித்துக்கொண்ட தினம்: ஜனவரி,19, 1839. என்றோ ஒரு காலம் (1513 -1538) அங்கு போர்த்துகீசியர் ஆட்சி. (மும்பையும் அப்படித்தான். கெட்டிக்காரத்தனமாக, அதை சீதனமாக வாங்கிக்கொண்டார்கள், பிரிட்டீஷ்.). அது இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் கருதப்பட்டது. ரூபாய், தபால் தலை எல்லாம் இந்தியாவை சேர்ந்தது. ஏடன் செட்டில்மெண்ட் என்று பெயர். பம்பாய் மாகாணத்தின் ஆளுமை. 1937ல் இந்தியாவிடமிருந்து லாகவமாகக் கழட்டப்பட்டு, பிரிட்டீஷ் சாம்ராஜ்ய காலனி ஆனது, 1935ம் வருட அரசியல் சட்டம், இந்தியாவின் விடுதலை வெகு தூரமில்லை என்று உணர்த்தியதால். ஒரு நாள்/125 வருடம்: ஜனவரி 18, 1963 அன்று, உதட்டளவு அரசியல் மாறுதல்கள். நவம்பர் 30, 1967 அன்று கலோனிய கால்கட்டுத் தளர்ந்தது. பொதுவுடமை வாதம் தலை தூக்கியது. 1972, 1976, 1980 களில் உள்குத்து. 1980யில் அதிபர் இஸ்மெயில் மாஸ்கோவுக்கு ஓடிப்போனார். 1986ல், மறுபடியும் உள்நாட்டுப்போர். தற்கால அரசியல் தான், உங்களுக்குத் தெரியுமே.
இன்னம்பூரான்
19 -1 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment