அன்றொரு நாள்: நவம்பர் 20
பொன்மொழி இணைப்பில்.
“சாந்தி நிலவவேண்டும் என்று வாழ்த்துக்கூறுவது எமது மரபு. எமது உணர்ச்சிகளையும், அபிலாஷைகளையும் அது பிரதிபலிக்கிறது. இது எமது மனோவாக்கு.”
~நோபல் பரிசு விழாவில் எகிப்திய அதிபர் அன்வர்-எல்-சாதத்: 1978
“அதிபர் அன்வர்-எல்-சாதத் அவர்கள் ஒரு வீரனாக போருக்குத் தலைமை தாங்கினார்; எனினும், அசாத்திய தைரியத்துடன் அமைதி நாடினார். ஜன்மவைரிகளான எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டி, முதலடி எடுத்து வைத்து, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார்., அவர் இன்று நம்மிடையில் இல்லையெனினும், அவருடைய மனிதநேயமும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு மார்க்கபந்துக்கள். மென்மையான போக்கு உடைய மூதறிஞர் அன்வர்-எல்-சாதத் அவர்களை என்றுமே ஒரு கதாநாயகனாக அமெரிக்க மக்கள் போற்றுவர்.”
~அமெரிக்க அதிபரின் சுதந்திர மெடல் விழா:26 03 1984: விருது மொழி:
மறைந்த தந்தையின் சார்பில் பெற்றுக்கொண்டது: கமால் எல்-சாதத்.
எனக்கு பிடித்த இஸ்லாமிய சமயம் சார்ந்த சொல், ‘ரஹம்’; பொருள்: தனிப்பெருங்கருணை. மனித இனம் ஓரினமே. அன்யோன்யத்திற்கும், மனித நேயத்திற்கும் ‘ரஹம்’ தான் அடித்தளம். அதை புரிந்து கொள்ளாமல் ‘பத்து நாள்’ தாயாதிகள் பத்துத் தலைமுறைகளுக்கு பகைமை பாராட்டுவர். துவாரகையில் யாதவர்கள் உலக்கைத்தாக்குதல் நடத்தி தங்கள் குலத்தையே அழித்துக்கொண்டமாதிரி, தம்மையே மாய்த்துக்கொள்ளுவர். என்றோ ஒரு நாள் விவேகம் தலையெடுத்து விமோசன காண்டம் தொடங்கினால், அண்ணன் தம்பியென கட்டி மகிழ்வர். அதுவும் காலாவதியானால், வீராவேசம், பரவசம், உணர்ச்சி பிரவாகம், போர்க்களம், வெட்டு, குத்து, குண்டு வெடிப்பு. ‘இது தாண்டா உலகம்’ என்று அரட்டையடிப்பவர்களும் உண்டு. எதற்கும் இதையும் பாருங்கள். நாடு கடந்த தேசாபிமானம் யூதர்களுக்கு உண்டு;ஏனெனில் அவர்களுக்கு நாடென்று ஒன்றுமில்லையே! வல்லரசுகளின் உபய/ உபாயமாக இஸ்ரேல் நாடு நிறுவப்பட்டது என்றும், அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனிய இஸ்லாமியர் என்றும், அதன் பொருட்டு இஸ்லாமிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்வது மிகையன்று. இஸ்ரேலியர்களின் தேசாபிமானத்தை உடும்புப்பிடி எனலாம். இந்த பின்னணியில்...
காசி மாநகரம் போல, எகிப்திய தலை நகரம் கெய்ரோவும் பழைய பெருமை நிறைந்த, தென்மதுரையை போல ராப்பகலும் கூட்டம் நெருக்கும் நகரம், நவம்பர் 21,1977 அன்று இரவு தத்தளித்துக்கொண்டிருந்தது; அப்டியொரு ஜே ஜே கூட்டம். ஆயிரக்கணக்கான மக்கள், ஏதோ ஒரு வேலன் வெறியாட்டம் நடந்தது போலதொரு லாஹிரியில் மயங்கி, ‘சதத்~அமைதி நாயகனே! வாழ்க நீ எம்மான்!’ என்றெல்லாம் பாடி, 20 11 1977 அன்று இஸ்ரேல் சென்று, அமைதி நாடி, வாகை சூடி திரும்பிய அதிபரை அமர்க்களமாக வரவேற்றனர் என்று ந்யூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. நடை நடையாக நடந்து, ‘மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்’ என்ற அறிவுரையை, பொது நலம் கருதி, தள்ளி வைத்து, ராஜாஜி மு.கருணாநிதியின் வீட்டுக்கு வந்து ‘மதுவும், கள்ளும், சாராயமும், தேறலும் வேண்டாமப்பா’ என்று கெஞ்சியது நினைவில் வந்தது. சான்றோர்கள் தன்னலமும் கருதமாட்டார்கள்; சுயமரியாதையை பொது நலனுக்கு பலியிடுவார்கள். அம்மாதிரி: கேளும் பிள்ளாய்!
‘கத்தியை சுழட்டி கண்ட சுகம் என்ன? என்ன?
புத்தியை தீட்டி பகைவனுக்கு அருள்வோம் அப்பனே!
சத்தம் போடாமல் சமாதானம் பேசுவுமே என்று,
பத்திரமாகவே இஸ்ரேலுக்கு போனாரே, ஐய்யன் சாதத்.
‘வாங்க! அண்ணாச்சி! அப்டீனார் தம்பித்துரை அவுகளும்,
அங்கிட்டு பிரதமர் மெனெச்சம் பெகின் ஐயாவை சொல்றேனுங்க.
சங்கதியெல்லாம் பேசிக்கிட்டாஹ, ஆனந்தமாகவே!
பொங்கப்பானையும் மங்களம் பாடியதே.
நல்லது நடக்கும் என்றால் நாலு பேருக்கும் சம்மதம். தன்னுடைய நோபல் சொற்பொழிவில் அதிபர் சாதத் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு நன்றி கூறியது சாலத்தகும். அன்னாரின் நல்லெண்ண யாத்ரீகம் பயன் அளித்தது. ஐ.நா.வின் தீர்மானங்கள் 242ம் 338ம் வழி வகுத்தன. மார்ச் 26, 1979 அன்று இரு நாடுகளும் ஒரு அமைதி உடன்பாட்டில் கையொப்பமிட்டன. அண்ணனுக்கும், தம்பிக்கும் 1978ம் வருட நோபல் பரிசு கிடைத்தது. அந்த விழாவில் எகிப்திய அதிபர் சாதத் அவர்களின் அருமையான சொற்பொழிவின் ஈற்றடி:
‘...யாவரும் என்னுடைய பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள். உலகெங்கும் சாந்தி நிலவட்டும். நியாயமும், தர்மமும், மனித உரிமையும் தலை நிமிர்ந்து பீடு நடை போடட்டும். மனித இனம், ஆங்காங்கே, தன்னுடைய வாழ்வியலை வகுத்துக்கொள்ளட்டும். அவரவருடைய வருங்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளட்டும். உலகின் சுபிக்ஷம் செழிக்கட்டும்.’
பாவி மனுஷா! இத்தனை நல்லவனாக இருப்பாயோடா?
சாவி கொடுத்த பொம்மை மாதிரி அண்டை அரேபிய விரோதமடா!
ஆவி பறித்த சண்டாளர்கள், சுட்டுத்தள்ளினார்களடா.
கேவி, கேவி அழுதது எகிப்திய பிரஜைகளடா.’
இன்னம்பூரான்
20 11 2011
பின் குறிப்பு: இது 20 11 1979 தின நிகழ்வை பற்றி மட்டும். தலைமாந்தர்களின் வரலாறு அன்று. பக்கம் பக்கமாக எழுதலாம். தகும். ஒரு நண்பர் கேட்டார், ‘யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று. பாயிண்ட் மேட். எனக்கு தெரியவில்லை. ஒரு சமயம் எனக்காகவே எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமயம் ‘புதியது தருவோம்’ என்ற அவா என்றும் தோன்றுகிறது. Que sera sera.
... after '1979 Peace Treaty' with Israel signed by President Anwar Sadat.
| | Sadat.pages 37K |
|