Sunday, June 16, 2019

‘சாதிப்பெயர்…’

INNAMBURAN ON CASTE SURNAMES

‘சாதிப்பெயர்…’ 
இன்னம்பூரான் 25 03 2016
சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?
இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.
‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’ இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி. திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?
நிகழ்காலத்துக்கு வருவோம்.
சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்
– இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?
‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா? கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை. -இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?
சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு. -இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை? கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?
வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.
இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி. 
-#- 
நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016 
இன்னம்பூரான்