இதுவும் ஒரு பிருகிருதி ~7
மேல ராஜ வீதிலே (பின்ன எங்கெ? தஞ்சாவூரிலெ தான்), ஜோஷி கடை தாண்டி, காமாக்ஷி அம்மன் கோயில் வரத்துக்கு முன்னாலே, அந்த அஹ்மத் பாயி மளிகைக்கடைக்கு முன்னாலே, எதிர்வாடையில் கோணாமாணான்னு இருக்கே ஒரு சந்து. அது தான் பச்சண்ணா சந்து. ஒரு பக்கம் சாக்கடை ஓட்றதோல்லியோ. இல்லை. தேங்கி, தேங்கி நிக்கறது. நாத்தம் குடலை பிடுங்கி எடுக்கிறது. எதிர்வாடைலே ஆறாவது வீடு. ஒண்டுக் குடித்தனம் ஒன்பது. எல்லாம் இழுபறி தான். ஒத்தருக்கு ஒத்தர் ஆகாது. ஆனா ஒருமாதிரியான கோஎக்ஸிடென்ஸ். நான் வச்ச பெயர் நவசீலம். நேருவும் செள என் லாவும் (அந்தக்காலத்து உச்சரிப்பு.) ஜாக்கர்த்தாவில் செய்து கொண்ட ‘ராஜ தந்திரத்தின்’ மூலமந்திரம். அங்கே அஞ்சு; இங்கே ஒம்பது. எல்லாரும் குப்பைக் கொட்றதுலே மட்டும் ஒத்துமை. வாசல்லே கொட்டிடுவா.
கோர்ட்டாரின் அமீன் பிச்சுமணி ஐயர் தான் இங்கு பிரதான ஒண்டுக்குடித்தனம். ஜப்தி பண்ணப்போவாரோல்லியோ,ஹைக்கோர்ட் ஜட்ஜு மாதிரி என்று சவுடால் விடும் ஆசாமி. லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டின்னு, யாரையாவது குற்றம் சொல்லாட்டா, தூக்கம் வராது, பாவி பிராமணனுக்கு. மனுஷன்ஒரு நாள் வசமா மாட்டிண்டுட்டார். அன்னிக்கி அவர் யதார்த்தமா சொன்னார், நாலு வீட்டுக்குக் கேக்கிறமாதிரி, ‘நம்மாத்து மாட்டுப்பெண்ணெல்லாம், சக்கு பாய் கிட்ட கத்துக்கணும், பால் காய்ச்சறது கூட. என் ஆம்படையாளுக்கு அது கூட தெரியாது’ இதான் வினை. இவாத்து தையூ மாமி மூஞ்சியை மொட்டை மாடி வரைக்கும் தூக்கி வச்சுண்டுட்டா. சத்புத்திரன் நடராஜன் தனிக்குடித்தனமே போயிட்டான். ஆத்துக்குள்ளேயே, துக்குரி நாக்கு. மற்ற எட்டுக்குடித்தனக்காராளும், இவரோட வாயிலெ புகுந்து தான் வந்தாகணும், சக்குபாய் ஆத்து மாமா, ராவுஜி உள்பட. இத்தனிக்கும் அவர் பரமசாது.
எதையோ நினச்சுண்டு எதையோ எழுதறேன். பிச்சுமணிக்கு இந்த பேஃபார்ஸ் (இரண்டுங்கெட்டான்) வேலை, வக்கீல் மாமா கொடுத்த உபயம். ஆத்மநாதய்யர் மாமா (அவர் தான்) எப்பவோ போய்ட்டார். அவரோட வாரிசு விச்சு தான் அப்பா கட்டின வீடு தரும் வாடகையை வச்சுண்டு மூணூ சீட்டாட்டம், பண்டாரவாடை வெற்றிலை, கும்மோணம் நெய்ச்சீவல், சிவபுரி புகையிலை, இலை மறைவு, காய் மறைவா, குடி, கூத்தியா என்று வாரி இறைச்சுண்டிருந்தான். அவனுக்கு, இந்த மனுஷன் ஏஜண்ட் மாதிரி. குடக்கூலி வசூல் பண்றதும், சுணங்க்றவாளை காலி பண்ணச்சொல்றதும், கரண்ட் ஜாஸ்தியாரது என்று 8 மணிக்கே விளக்கை அணைச்சு, கோடி போர்ஷன் கமலாவோட ( அவள் படிக்கிற பெண்) சாபத்தை வாங்கிக்கட்டிக்கிறதும், அமீன் மாமாவோட கைங்கர்யம்.
ஆமை புகுந்த வீடும், அமீன் நுழைந்த வீடும் உருப்படாது என்பார்கள். இவரோ ஒரு பச்சோந்தி. பச்சோந்தி புகுந்த வீடு தான் உருப்படாதுங்கிறத்துக்கு அத்தாட்சி. ஜப்தியாவது? கிப்தியாவது? கடங்காரன் கிட்ட காசு வாங்கிண்டு, மஞ்சள் கடிதாசு நோட்டீஸ் ஒட்டாம போயிடுவார். கோர்ட்டார் கிட்ட நொண்டிசாக்கு ஏதாவது சொல்லிடுவார். இவருக்கு உள்கை, பென்ச் க்ளார்க் ரங்கசாமி.
இவருடைய பாச்சாவெல்லாம், பெரிய பண்ணை வாண்டையார் கிட்ட பலிக்குமா? சிவன் கோயில் குருக்கள், பெண் கல்யாணத்துக்கு வாங்கின கடனை திருப்பல்லே. வாண்டையார் சொல்லி பார்த்தார். ஊஹூம்! கேஸ் போட்டுட்டார், குருக்களாத்து மாமியோட மஞ்சக்காணி நிலத்தைக் கேட்டு. இதுலே வேடிக்கை என்னவென்றால், வாண்டையார் கிட்ட அடகு வச்சது, சன்னதி தெருவில் உள்ள குருக்கள் வீடு. அவருடைய அப்பா காலத்தில், வாண்டையாரோட அப்பா சல்லிசா வாங்கிக்கொடுத்தது. அந்த கிரயப்பத்திரத்தையே அழிச்சுட்டான், இந்த மைனர் வாண்டையார். பென்ச் க்ளார்க் ரங்கசாமியை கைக்குள் போட்டுண்டு, கோர்ட்டாரை ‘தனது’ பண்ணி, இல்லீகல் ஜப்தி ஆர்டர் வாங்கி விட்டான். பிச்சுமணி அதை ‘ஸெர்வ்’ பண்ணனும்.
இந்த சமயம் பார்த்து, தையூ கோயிலுக்குப் போக, குருக்கள் மாமா கிட்டேர்ந்து, பிரசாதம் வாங்கிண்டு போக வந்த (பசி வயிற்றை கிள்றதே என்று குழந்தைகள் அழறது.) குருக்களாத்து மாமி பர்வதம், தையூ கிட்ட ஒருகுரல் அழுதாள். என்றோ ஒரு நாள் மொட்டை மாடி வரைக்கும் தூக்கி வச்சுண்ட மூஞ்சியை, தையூ இன்னும் இறக்கி வைக்கவில்லை. மனஸ்தாபம். மாமாவுக்கும் காமதாகம். அவரும் தான் இறங்கி வந்து கெஞ்சி பார்த்துட்டார். ஊஹூம்! அடம்னா பிடிக்றா தையூ. பர்வதம் பேச்சை எடுத்தாள், இன்முகத்துடன். பிச்சுமணி ஐயர், வாயெல்லாம் பல்லாக இளிச்சுண்டு, வாக்குக் கொடுத்துட்டார். பெரிய தசரத மஹராஜா! ஜப்தி ஆர்டரை ‘ஸெர்வ்’ பண்ண வில்லை.
பிடிச்சது ஏழரைநாட்டு சனியன். இவர் மேலேயே கேஸ் போட்டுட்டான், ஹை கோர்ட்லே. எல்லாம் பரம ரகசியம். மத்ராஸ் வக்கீல். ஜப்திலே வரதை விட ஜாஸ்தியாம், வக்கீல் செலவு. எல்லாம் அந்த கடங்காரன் பென்ச் க்ளார்க் ரங்கசாமி சொல்றான், கதை கதையா. உனக்கு வேலை போயுடும் என்றான். அவன் இரண்டு பக்கமும் மத்தளம் அடிப்பான். சம்பளத்தையெல்லாம் லேவாதேவிலெ விட்டுட்டு, கிம்பளத்திலெ குடும்பம் நடத்துகிறான் என்று டவாலி புருஷோத்தம நாயுடு சொல்றது நிஜமா இருக்குமோ? சாட்சிக்காரன் காலில் விழுறதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்று பெரிய பண்ணைக்கு போனார், பிச்சுமணி ஐயர். பண்ணையார் இவரை கண்டுகொள்ளவேயில்லை. இவரோட ஜபர்தஸ்த்தை சூர்ணம் சூர்ணமா பொடியாக்கிட்டான். பெட்டிப்பாம்பா சுருண்டு, வீட்டுக்கு வந்தவர், சர்வோத்தமராவ்ஜியை ஒரு பிடி பிடித்தார் பாருங்கோ! சாயரக்ஷை ஆயிடுத்தா? இருட்டிண்டு வரது. நீங்கள் வீட்டுக்கு தத்க்ஷணமே போகாட்டா, டோஸ் விழுமாக்கும்! அந்த கதையை இன்னொரு நாள் சொல்றேன்.
(தொடரும்)
பி.கு. சிக்கலும், பின்னலுமா கதை போறது என்று சொல்லாதங்கோ, அண்ணா. சந்தேஹமிருந்தா, நிவாரணம் கேளுங்கோ. நான் எதுக்கு இருக்கேன்?