அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971
‘...தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன்//... திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா? எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்!
‘எல்லாருமே படிக்கிறாங்க. நிச்சயமா. ஆனால் நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் யாருக்கும் எதுவும் எழுதத் தோன்றவில்லை. படிப்பவர்களை அந்தக் கால கட்டத்துக்கே எடுத்துச் செல்லும் பதிவுகள் இவை.’
அப்றம் என்ன? நல்ல விஷயங்களை உடனுக்குடன் சொல்லிவிடுவது தான் அழகு. காலம் போறப்போக்கில், யார் கண்டா, சொல்லுங்கோ? மண்ணாசை. பிறந்த மண்ணாசை. தூலியை தலையில் ப்ரோக்ஷணம் செஞ்சுக்கணும். 81 வயசிலே அப்படி ஒரு ஆசை. கை கூடி வந்ததே. அந்த ப்ராப்தத்தை சொல்லணும்லெ. அன்னிக்கு சொந்த மண்ணு. இன்னிக்கு அயல் தேசம். பாஸ்போர்ட், வீஸா, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் ஏற்பாடு பண்ணித்தரா, ஃப்ரெண்ட்ஸ். முன்னை பின்னத் தெரியாத பெரிய மனுஷன் ஒத்தர் முகமன் கூறி கனிவுடன் வரவேற்று, உபசாரங்கள் பல செய்து, ஸர்கோடா சொந்த மண்ணுக்கு கிழவரை அழைத்துச்செல்கிறார். பிறகு தன் வீட்டில் வைத்து விருந்து. செல்வாக்கானா ஆசாமி போல. புருஷன், பொண்டாட்டி, பசங்க, பந்து ஜனங்கள், ஊழியம் செய்வோர், எல்லாருமா, இப்படி கண்ணும், கருத்துமா! எல்லாம் நன்னாருக்கு. ஆனா, ஒண்ணு புரியலே. எதுக்காக, இப்படி விழுந்து, விழுந்து கொண்டாடரா? ஊருக்கு திரும்பற நாளும் வந்துடுத்து. வர, வர, பேச்சுக்குறையறது. நீண்ட மெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா! இனம் தெரியாத அழுகைன்னா வரது.
போறும். போறும். விஷயத்துக்கு வாங்கோ. விஷயம் இப்போத்தான், அப்பா!, வர்ரது. நானா கட்டிப்பிடிச்சு வச்சிருக்கேன்? அவா கிட்டயே கொடுத்துட்றேன். உங்க பாடு! அவா பாடு!
பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.
இது உரையாடலோ? உருக்கமான இரங்கலோ? அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள்!, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?, இந்தியனே!) எல்லாமே ஒரு ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்!
என்றோ ஒரு நாள் சொன்னேன். அது ஞாபகத்தில் வந்தால், நானா, பிணை?
‘மனம், மனது, மனசு போன்ற சொற்கள் ஒரே சொல்லின் திரிபுகள் என்று இலக்கணத்தார் உரைத்தாலும், என் மனம், மனது, மனசு சொல்வது வேறு. மனம் யோசிக்கும்; மனது அசை போடும். மனசு அடிச்சுக்கும். ஒன்றை மற்றொன்று பாதிக்கும். சிலது புலப்படும். சிலது தேடினால் சிக்கும். சிலது ஆழ்மனதில் (அது என்ன ஆழம்!) புதையுண்டு கிடக்கும். திடீரென்று விஸ்வரூபமெடுத்து, ஆட்டி படைக்கும். இத்தனைக்கும் திரை மறைவில் ‘மனோதர்மம்’ இருக்குமாமே! ‘
நான் இனி பேசப்போவதில்லை. பேசவும் தெரியாது.
பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர் தொடருகிறார்: ‘ அருண் பால்மணம் மாறாத இளைஞன் என்று பிறகு தான் எனக்கு தெரிந்தது. என்ன தான் ராணுவ கட்டுக்கோப்பு இருந்தாலும், மனிதநேயம் ஆத்மதரிசனம் செய்ய விழைகிறது. உங்களிடம் பாவமன்னிப்பு கேட்க நினைத்தேன். அதற்கு பதில், அருணுக்கு வீரவணக்கம் செய்கிறேன், ஐயா. வாழ்வின் இறுதியில் நெறி ஒன்றுக்குத் தான் அமரத்துவம்.
என்றோ படித்தது அவர்களுக்கும், எனக்கும் ஞாபகத்தில் உறைகிறது.
‘போர்க்களம் நிறுவவது அரசியலர்; அதிகார மையங்கள் போர்க்களங்களை கிளறுகின்றன. போராடுவது, சிப்பாய்!’
பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரிடமிருந்து ஃபோட்டோக்களுடன் ஒரு மடல் பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலுக்கு டில்லியில் பிறகு வந்தடைந்தது. வாசகம்:
‘... 13 லான்ஸர்ஸ்: பாகிஸ்தான் ராணுவம்: நாங்கள் ‘பர்ராபிண்ட்’ என்கிறோம். இந்தியாவின் பூனா புரவிகள் படை ‘பஸந்தர்’ என்கிறது. அந்த யுத்ததில் மலை போல் நின்று உயிர் தியாகம் செய்த ஷஹீத் இரண்டாம் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத் ரபாலுக்கு வீரவணக்கம்....’
பால்மணம் மாறாத இளைஞன் தான். இனி எழுத எனக்கு திராணியில்லை.
இன்னம்பூரான்
ஜூலை 11, 2011
உசாத்துணை: