அன்றொரு நாள்: ஜனவரி: 5
கூண்டோடு பூலோக கைலாசம்
ஒரு பிரச்னை. இன்று எதைப்பற்றி எழுதுவது? ~ விஞ்ஞானம், ஆன்மீகம், இலக்கியம், கிரிக்கெட், சமூக நாற்று நடப்பட்ட வரலாறு. இறுதியில் சொல்லப்பட்டது தான் கெலித்தது. ஜனவரி 5, 1985 அன்று ஊடகங்களில் கசிந்த செய்தி ஒன்று உலகையே வியப்பில் ஆழ்த்தியது. பூகோள எல்லைகளை கடந்த தேசாபிமானம், இனப்பற்று, புலன் பெயர்தல், திறன்மிகு திட்டம், அதை நிறைவேற்றிய சாமர்த்தியம், அடுத்த கட்டம் எல்லாமே , அது வரை வரலாறு காணாத அச்சாணி நிகழ்வுகள்.
உலகெங்கும் பரவி வாழும் யூதர்களின் இனம் பழமை வாய்ந்தது. ஆற்றலால் முக்கியத்துவமும், ஒதுங்கி/ ஒதுக்கப்பட்டு வாழ்வதால், பலவீனமும் வாய்த்த மெனாரிட்டி என்று அன்றொரு நாள்: நவம்பர் 29: இதழில் ‘தேசமில்லா நேசம்!’ என்ற உப தலைப்புடன், ‘...பல நூற்றாண்டுகளாக, ‘இல்லாத நாட்டின்’ மீது அபார பற்று. நவம்பர் ...பால்ஃபோர் பிரகடனம் 1917ல் பிரிட்டன் யூதர் நாடு இது என்று சொன்னதும், அதே சமயம் அரேபியர்களுடன் அவர்களின் உரிமைக்குரலுக்கு சம்மதம் தெரிவித்து மடலாடியது...நவம்பர் 29, 1947ல் ஐ,நா.பொது மன்றம் இயற்றிய தீர்மானம் 181னின் வருகையாக,‘எரெஸ் இஸ்ரேல்’ (The Land of Israel:ஹூப்ரூ: אֶרֶץ יִשְׂרָאֵל ʼÉreṣ Yiśrāʼēl, Eretz Yisrael) எனப்படும் புதியதொரு நாடு உயிர்ப்பிக்கப்பட்டது...’ என்று படித்திருப்பீர்கள்.. யூத இனத்து வரலாறு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே சிறப்புடன் கோலோச்சியது என்றாலும். அவர்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்தது 1947ல். இன்று வரை பாலஸ்தீனியர்களுடன் தீராத பிரச்னை. யூதர்கள் பட்ட கொடுமையை பற்றியும், உடும்பு பிடி தேசாபிமானத்துடன் இணைந்த இனப்பற்று பற்றியும், அசகாய வேலைகளில் நிகரற்றவர்கள் என்பதையும் அன்றொருநாள்: ஆகஸ்ட் 04:I, ஜூலை 4, ஸெப்டம்பர் 5 இழைகளில் நீங்கள் கவனித்து இருக்கலாம்.
எத்தியோப்பியாவும் பழமையான சமுதாயம். ஹைல் சலீஷி என்ற எத்தியோப்பிய மன்னர் சென்னை வந்தது நினைவில் இருக்கிறது. கவர்னர் ஶ்ரீ.ஶ்ரீ பிரகாசாவின் மகன் இறந்துவிட்டதால், அவர் சென்னையில் இல்லை. எதிர்க்கட்சி தலைவரான ராஜாஜியை, ஹைல் சலீஷியை சம்பிரதாயமாக வரவேற்க நேரு பணித்தார். அவரும் மனமுவந்து அதை செய்தார். இது உபகதை. அந்த நாட்டில் நடந்த புரட்சி ஒன்றில் ஹெல் சலீஷி பதவி இழந்தார். அவரை வீழ்த்தி, சர்வாதிகாரியான கர்னல் மென்ஜிஸ்டு ஹைல் மரியம் சிறுபான்மை யூத இனத்தினரை கொடுமைப்படுத்தினார். அவர்கள் சமயத்திற்கும், மொழிக்கும் தடை விதித்தார். இத்தனைக்கும், எத்தியோப்பிய யூதர்களின் சாலமன் அரசர் வம்சத்தினர் என்று சொல்லப்படுகிறது. நாட்டில் கொடும் பஞ்சம். பஞ்சப்பரதேசிகளான ஆயிரக்கணக்கான யூதர்கள், கொடுமையை தாங்கமுடியாமல், பசியும், பட்டினியாக, கால் நடையாகவே, சூடான் நாட்டுக்கு புலன் பெயர்ந்தனர், ஸெப்டம்பர் 1984ல். அவர்களில் கிட்டத்தட்ட நாலாயிரம் பேர் வழியிலேயே இறந்தும் போயினர். (நம்மில் சிலருக்கு, பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு கால் நடையாக வந்தவர்களை பற்றி தெரிந்து இருக்கலாம்.) இஸ்லாமிய ஆளுமை நிறைந்த சூடானுடன் எப்படியோ ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, நவம்பர் 21, 1984 அன்றிலிருந்து ஜனவரி 4, 1985 வரை இருந்த குறுகிய காலத்திற்குள் எட்டாயிரம் எத்தியோப்பிய யூதர்களை, விமானம் மூலம், ரகசியமாக இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றனர். திட்டத்தின் பெயர் ‘ஆபரேஷன் மோசஸ்’. செய்திக்கசிவு தற்காலிகமாகத்தான் தடை செய்துள்ளது; மறுபடியும் தொடர்வோம்
என்றார், இஸ்ரேலிய பிரதமர் ஷைமன் பெரஸ். விடாக்கொண்டனாக. அடுத்த வருடமே ஆபரேஷன் ஷீபா. 1989ல் எத்தியோப்பியாவுடன் வெளிநாட்டு உறவை பலப்படுத்திக்கொண்டு, மே 25, 1991 அன்று தொடங்கி 36 மணி நேரத்துக்குள் 14, 324 யூத அகதிகளை 34 விமானங்களில் அழைத்துச்சென்றது, இன்று வரை மாபெரும் சாதனையாக அறியப்படுகிறது.
இஸ்ரேலின் நண்பனான அமெரிக்காவும் ஆபரேஷன் ஜோஷுவா என்ற திட்டப்படி பல எத்தியோப்பிய யூதர்களை காப்பாற்றியது. இன்னும் 10,000 ~15,000 யூதர்கள் எத்தியோப்பியாவில் வாடுவதாக 2004ல் செய்தி. நிறம் இருக்கிறதே, அது பாடாய் படுத்தும். செல்வ நிலையும் அப்படித்தான். ஏழைகளும், கறுப்பர்களும் ஆன எத்தியோப்பிய யூதர்கள், இனபேதமின்றி கலப்பதில் சிக்கல்கள் இருந்தாலும், அவர்களை பெருமளவு ராணுவத்தில் எடுத்துக்கொண்டது, அந்த பிரச்னையை இஸ்ரேல் தணித்துள்ளது.
ஒரு கேள்வி: இந்தியாவில் பல சமூக பிரிவினை சிக்கல்கள் தென்படுகின்றன. 19வது வயதில் கட்டாய ராணுவச்சேவை இருந்திருந்தால், அவை தணிந்து இருக்குமா?
ஒரு வேண்டுகோள்: கேள்விக்கு பதில் சொல்லும்போது, கட்டுரையை பற்றியும் விமர்சனம் இருக்கவேண்டும், திசை மாறாமல் இருக்க.
நன்றி,
இன்னம்பூரான்
05 01 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment