அன்றொருநாள்: ஃபெப்ரவரி 8:
எலியா? கிலியா?
கும்பிருட்டு. வெட வெட என்று குளிர் வேறே. தைத்தாரி காடா? ஒடிஷா. புலி வரலாம். அப்போ ஒரு விறகு வெட்டி கூட வரார். ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.’ என்று சொல்லி விட்டு அட்டகாசமா சிரிக்கிறார். திரும்பிப்பார்த்தா, ஆளைக்காணோம்! விடுதிக்கு வந்தால் நல்ல ஜுரம். கொஞ்சம் அரத பழத ஜோக் தான். ஆனா பாருங்கோ! ஆவியுலகை எட்டிப்பார்த்தவர் யார்? கொள்ளிவாய் பிசாசு மெதேன் வாயுவா? குட்டிச்சாத்தானை ஏவி விட்றது யாரு? மோஹினி பிசாசு தாள் பதிப்பாளோ? நான் பார்த்த மோஹினி வந்த வேகம்! (நிஜம், சார்.) ஒரு சின்ன வேண்டுகோள். நடு நிசியில் இதை படியுங்கோ. எலியும் வரும்.கிலியும் வரும். எனக்கு சண்டிப்பூர்லெ வந்த மாதிரி மோஹினியும் வர்ர்ரலாம்!
படிச்சிளோனோ? நேற்று லண்டனிலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள் ரத்து, என்று. அப்படி பனிமழை. அந்த மாதிரி தெற்கு டெவான் பகுதியில் ஃபெப்ரவரி 7/8 (விக்கிப்பீடியா)/ஃபெப்ரவரி 8/9: (உசாத்துணை) நள்ளிரவில் கனத்த பனி மழை. காலாம்பற வந்து பார்த்தால் கிட்டத்தட்ட நூறு மைல் தூரத்துக்கு, (40 மைல் என்றார், ஒருவர்.) சுவர்களின் மீது, வைக்கோல் போர்கள் மீது, மேடு பள்ளங்கள் மீது, ஜன்னல் விளிம்பில், ஏதோ அவை தங்கு தடையில்லை என்கிற மாதிரி, நூற்றுக்கணக்கான பாதங்களின் தடயங்கள்.(58 என்றார், ஒருவர்.) அதுவும் ஒத்தை ஜதை!, இரண்டு கால் பிராணி தான். ஆனால் ஜதையில்லாமல், குஞ்சிதபாதம்! டேய்! பாருடா! குளம்பில் பிளவு! இது சாத்தானின் நடமாட்டம் தான். எடு ஓட்டம். நிச்சியம் சாத்தான் தான். நதியை கூட, அதுவும் இரண்டு மைல் அகலம், ஒரே தாண்டு; கடந்து விட்டதே. மறந்துட்டேனே. அந்த வருடம் 1885.
எல்லா ஊர்களிலும் மெய்ஞானமும், விஞ்ஞானமும் ஜோடி தானே. சிலர் அளந்து பார்த்தார்கள். எட்டரை அங்குல அளவு செருப்பு வாங்கணும் போல. எட்ட நடந்தாலும், ஓஹோன்னு இல்லை. நாலு பேர் சேர்ந்தால், சாத்தானை ஒரு பிடி பிடிக்கலாம் போல. அந்த பிராந்தியத்தில் உள்ள பாவிகளை நன்கு அறிந்த மதகுருமார்கள், இது சாத்தானின் வருகை. ஓடோடி மாதாகோவிலில் தஞ்சம் நாடுக என்றார்கள். நாத்திகர்கள் எள்ளி நகையாடினார்கள். ‘சாத்தான் பாதமோ? சாமியார் பாதமோ? கழுதை பாதமோ?’ என்றார்கள். ஆனால். பசங்களை ராத்திரி வெளியில் விடுவதில்லை. பொதுஜனங்களுக்கு சுவாதீனமாக நடக்கிற சுபாவம் சுரத்து இல்லாமல் கம்மியாயிடுத்து. முதலில் பூடகமாக, பிறகு வெளிப்படையாக, ஊடகங்கள் புகுந்து விளையாடின. எக்கச்சக்க பின்னூட்டங்கள். ஆளுக்கொரு செய்தி; ஆளுக்கொரு கருத்து. ஒருவர் முயலென்றார்; ஒருவர் எலியென்றார்; ஒருவர் குரங்கு என்றார். ஒருவர் அன்னமென்றார். ஒருவர் தப்பிவிட்ட கங்காரு என்றார். மற்றொருவர் விழுந்தடித்து தாறுமாறாக ஓடிய பலூனின் தொங்கட்டான் கயிறு என்றார். சீர் தூக்கி பார்த்தால் எல்லாமே பொருத்தம். ஒன்று கூட எல்லா விதத்திலும் அல்ல. எல்லா விளக்கங்களும் ‘நாயை கண்டா கல்லைக்காணோம்; கல்லைக்கண்டால் நாயைக்காணோம்’ என்ற தத்துவ ரீதியில், இன்று வரை மர்மத்தை நீடிக்கின்றன.
ஆய்வு செய்ய விரும்புவோர்களுக்கு பாயிண்ட்ஸ்:
- சாத்தானுக்கு பாதங்கள் உண்டோ?
- எந்த ஒரு பிராணியும் இத்தனை தொலைவை, பனிமழையில் கடந்து இருக்கமுடியாது. பல எலிகளா? ஒரே கிலி மட்டுமா?
- சாத்தான் மற்ற காலகட்டங்களில் வருவாரா?
- 1855க்கு பிறகு சுற்றுப்புறச்சூழல், மனித பிசாசின் தாக்குதல்கள், இயற்கையின் எதிர்வாதம் தவிர வேறு எந்த வகையிலும் சாத்தான் வரவில்லை என்கிறார், விறகு வெட்டி. சரியா?
- சாத்தானுக்கு இந்த உருவம் அளித்த மஹானுபாவன் யாரு?
வரேன்.
இன்னம்பூரான்
08 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment