இன்னம்பூரான்
மேலத்தெரு பழனி இருக்கானே. அவன் ஒரு சண்டியர், மினி ரவுடி. அவன் கிட்ட ஒரு நோஞ்சான் பசு இருக்கு. வேளாவேளைக்குக் கறக்கலேன்னா துடிச்சுப் போய்டும். அப்படி ஒரு அமுதசுரபி மடி! கனத்துப் போய்டும். பிச்சைக்கோனார் அங்கே கூட, என்ன சொன்னாலும், நேரத்துக்கு போக மாட்டார். ரொம்ப பேசினா, ‘கூவாதே, பழனி’ என்பதோடு சரி. அடங்கிப் போய்டுவான். அப்படி ஒரு பெர்சனாலிட்டி! ஆனால், அம்புலு மாமி கிட்டே தொடை நடுக்கம். பதினேழு மாட்டையும் கறக்கறது மட்டுமில்லாமல், தீனி போடறது, சினை மாட்டைப் பராமரிக்கிறது, தொழுவத்தைச் சுத்தம் பண்ணி, மேய்ச்சலுக்குக் கூட்டிண்டு போய், ஹோட்டலுக்கு பால் சப்ளை எல்லாம் ஸப்ஜாடா பண்றாரே, வேளா வேளைக்குப், பசங்களையும் கூட்டீண்டு வந்து. விடிகாலையில் காராம்பசுவை கோயிலுக்கு ஓட்டிண்டு போறது, அவருடைய நாலாவது பிள்ளை, வாண்டு கோவாலு. இத்தனைக்கும் மாமி கிட்ட அப்பப்ப அர்ச்சனை கிடைக்கும். அம்புலு மாமி கை தாராளம் தான். ஆனா வாய் அதுக்கு மேலே. ஆறு வருஷமா நடக்கறது. அவா இரண்டு பேருக்கும் தொழில் உடன்பாடு வந்த விதம் கேளுங்கோ. சேர்ந்த புதுசிலே, ஒழுங்கா சொல்லிட்டு, காலம்பற மாடு எல்லாத்தையும் ஓட்டிண்டு போன பிச்சை, கொல்லைப்பக்கத் தட்டிக்கதவை ஆட்டிப்பிட்டு, ‘பாப்பாத்தியம்மா! மாடு வந்தது!’ அப்டீன்னு சொல்லிட்டு, நடையைக் கட்டிப்பிட்டான், சாயரக்ஷையில். மாமி தான், மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க, பதினேழையும் தொழுவத்திலே கட்டிப்பிட்டு, தண்ணி காமிச்சுட்டு, வந்தா. மறு நாள் காலையில் வந்தால், எல்லா மாடும் குளிச்சுட்டு நிக்கறதுகள். பால் கறந்தாச்சு. மாமி சொன்னதை கோனார் எங்கிட்ட சொன்னார். இல்லாட்டா, எனக்கு எப்படி தெரியும்?
‘பிச்சை! கேட்டுக்கோ. நீ காணாமப் போய்ட்டே, சரி, ஒரு பேச்சுக்கு சொல்றேன், செத்துப் போய்ட்டே. சூரியன் அஸ்தமிச்சுடாது. அம்புலுவொட தொழுவமும் அழிஞ்சுடாது. நீ யாருடா என்னை பாப்பாத்திங்கறது? மரியாதை கொடுத்து நீங்கன்னு தானே கூப்டறேன். அது உன்னோடை தொழிலை மதிச்சு. அது கிருஷ்ண பகவானோட தொழில். ஆமாம். இரண்டாம் தடவை சொல்ல மாட்டேன். மாட்டை எல்லாம் தொழுவத்திலே கட்டி, தண்ணி காமிச்சுட்டுத்தான் போகணும். இஷ்டமில்லென்னா, இப்பவே கணக்கு தீத்துப்பிடலாம்.’ இதுக்கெல்லாம் பின்னாலே ஒரு சூக்ஷ்மம் இருக்கு. அப்றம் சொல்றேன்.
சீட்டுப் பிடிக்கறா பாருங்கோ. இந்த முகம்மது யூனஸ் இவ கிட்ட மானேஜ்மெண்ட் பிச்சை வாங்கணும், ஸ்வாமி! இதுவும் அஞ்சு வருஷமா நடக்கறது. இன்னிக்கி ரிஸர்வ் வங்கியை வந்து சர்ப்ரைஸ் ஆடிட் பண்ணச்சொல்லுங்கோ. சர்ப்ரைஸ் என்ன சர்ப்ரைஸ்? ப்ரைஸ் கொடுத்துருவா.
நாணயம்னா அது தான் அம்புலு மாமி. கை சுத்தம், வாய் சுத்தம். மனசு சுத்தம். அதைச் சொல்லுங்கோ. பூங்குடி பெண்ணினமே அவளுடைய கண்ணசைவுக்கு அடிமை. அவர்களுக்கு ஜீவித நிர்மாதா மாமி தான். தையூ கூட, மனசு விட்டு அம்புலு மாமி புகழ் பாடுவாள். அப்படி ஒரு ஆபத்பாந்தவி, மாமி. கவலைப்படாமல் கடன் கொடுப்பாள். சீட்டு விதிகளுக்கு உட்பட்ட வட்டி, கமிஷன். வசூல் நூத்துக்கு நூறு. ரகஸ்யம் தெரியுமா? அம்புலுனா ராஜாங்கம் தான். வச்சுது சட்டம். ஆனால். சீட்டு நிர்வாகத்துக்கு ஒரு கமிட்டி. எல்லாம் பொண்டுகள். சேமிப்பு, கடன், வட்டி, வசூல் எல்லாம் கமிட்டியின் பொறுப்பு. மாமி வெறும் ஆலோசகர். அதான் ரகஸ்யம். சொரணை இருக்கோல்யோ பொண்டுகளுக்கு. நோ மிஷ்டேக்!
எங்கே சத்து இருக்கோ அதைச் சொல்லத்தான் வேண்டும். அம்புலு மாமி ஒரு இன்ஸ்டிட்யூஷன். அவளை, ‘என்னை வந்து பாரு’ என்று சொல்லும் உரிமை கல்யாணம் மாமாவுக்குத்தான் இருக்கு. ஒரு நாள்: ‘என்னை கூப்பிட்டேளாமே, அண்ணா’ என்று போய் நின்றாள். ஒரு தட்டு நிறைய பழங்கள். விதரணை என்றால், மாமி மாமி தான். ஏதோ லோகாபிராமமாக கொஞ்சம் பேசிக்கொண்டார்கள். ஒரு வெள்ளிக் கூஜா நிறைய டிகிரி காஃபியுடன், சொஜ்ஜியும் பஜ்ஜியுமா எடுத்துண்டு, பார்வதி மாமியும் கலந்து கொண்டாள். பேச்சு போற தோரணையைப் பாருங்கோ.
பார்வதி: ஏதோ இந்த பூங்குடி பரமேஸ்வரன் கிருபையில் நன்னா இருக்கே. அன்னிக்கு அந்தக் கடங்காரன் ராகவன் உன் சொத்தெல்லாம் பிடுங்கிண்டு உன்னை வீட்டை விட்டு விரட்டின போது, இந்தப் பரமேஸ்வரனை, ‘நீ தெய்வமா?’ என்று கேட்டேன். அவன் தான் உன்னை ரக்ஷித்தான். இவாளுக்கு என்னமோ புதுசாத் தோண்றதாம். நான் தான் அம்புலுவைக் கேளுங்கோ என்று சொன்னேன்.
அம்புலு: அன்னிக்கு அண்ணாவும் நீங்களும் தான் எனக்கு பெருந்தெய்வம். அண்ணா சொன்னா எனக்கு ஆஞ்ஞை.
கல்யாணம் மாமா, அவருக்கே உரிய மென்மையுடன்: ஆமாம். ராகவனோட பிள்ளை சீனுவுக்கு நீ தான் ஃபீஸ் கட்றாயாமே. உனக்குத் தாராள மனசு. ஆனா, அந்த கனகசபை வந்து எங்கிட்ட ஒரு குரல் அழுதுட்டுப்போனார்.
அம்புலு: அப்பா பண்ண தப்புக்குப் பிள்ளை பிணையா? வரச்ச, போகச்ச, சீனு முள்ளுத் தேன்குழல் அள்ளிண்டு போறான். சூடிகையான பிள்ளை. (சிரிக்கிறாள்.)
கல்யாணம் மாமா: அதான் சொல்ல வந்தேன். வயக்காட்டு வேலை இல்லாத போது, நம்ம பசங்க எல்லாரும் ஆடு புலியாட்டம் ஆடிண்டு. சோம்பேறியா இருக்காங்க. வீட்டில் வேறு, உன் தயவால் பெண் விடுதலை. ஒரு வழி சொல்லேன். ஊரே உருப்படும். ‘பூங்குடி ஆண்கள் விடுதலை இயக்கம்’ ஒண்ணு ஆரம்பிக்கணும். (சிரிக்கிறார்.)
அம்புலு: நானே நினைச்சேன். அசரீரி மாதிரி சொல்றேள். ஊரே நந்தவனம். எங்க பாத்தாலும் பூ குலுங்கறது. வருஷம் பூரா வருமானம். நவ திருப்பதி கோயில்களுக்கு அனுப்பிச்சாலே போதும். நீங்க சொன்னா எல்லாரும் கேட்பார்கள். எங்க சீட்டு வங்கியில் நூறு பெர்செண்ட் போனஸ் கொடுக்கப் போறோம். கலைக்டர் வருவார். முதலுக்குப் பணமும் ஆச்சு. கவர்ன்மெண்டும் ஆதரிக்கும். உங்களுக்கும் இந்த கோயில் நிர்வாஹம் தெரிஞ்சவா. அப்படியே நுங்கு பதனப்படுத்தி, ஒரு வியாபாரம்.
பார்வதி (சிரிச்சிண்டே) டீல்!
கல்யாணம் மாமா: ஒரு ஆண்பிள்ளையால் இப்படி கறார் பண்ண முடியாது. நீ தான் பிசினஸ் செய்ய லாயக்கு.
கதை முடியப் போறது. கொஞ்சம் முன் கதை. அம்புலுக்கும் மணவாளனுக்கும் பதினைந்து வருஷம் முன்னாலெ கல்யாணம். ஆறு வருஷம் முன்னாலே அஞ்சு நாள் ஜுரத்திலெ மணவாளன் போய்ட்டான். குஞ்சு குளவான் இல்லை. அவனுடைய தம்பி ராகவன் சொத்தெல்லாம் பிடுங்கிண்டு அவளை விரட்டி விட்டான். கல்யாணம் மாமா தான் கொஞ்சம் ஜீவனாம்சத்துக்கு ஏற்பாடு பண்ணினார். அப்றம், ‘சவாலே சமாளி தான்’. இரண்டு வருஷம் முன்னாலே ஏதோ வழக்கு. ராகவன் பூண்டியாகி, ஒடிந்து, நொடித்துப் போய்விட்டார். போக்கு வரத்து அவ்வளவாக இல்லாட்டாலும், சீனு தூது போய் வருவான்.
இந்தப் பாதாளகரண்டி சம்பவம் ஊர்லெயே பேச்சாயிடுத்து. எல்லாம் பிச்சைக்கோனார் உபயம்.
கலைக்டர் வந்த தினம், நன்றி நவிலல், அவரது பொறுப்பு. அத்தனை ஜனநாயகம்! அவர் ஜாலியாக குட்டைப் போட்டு உடைக்க, ஒரே சிரிப்பு. கலைக்டர் சொன்னாராம். மாமி எலெக்க்ஷனுக்கு நின்னா போட்டி இருக்காது என்று.
எங்கள் வீட்டில் பாதாளக்கரண்டி உண்டு.நான் சின்னவளாக
ReplyDeleteஇருந்தபோது, கிணத்துல விழுந்த குடம்,பக்கெட் போன்றவற்றை
எடுக்க வேண்டி சொம்பு போன்ற பாத்திரத்தை வைத்துவிட்டு
எடுத்துச் செல்வர். நினைவுக்கு வருகிறது.நன்றி.
அன்புடன்,
தங்கமணி
நன்றி, தங்கமணி,
Deleteநானும் 'பாதாளக்கரண்டி' போட்ட என்றோ எழுதியதை எல்லாம் பதிவு செய்து வருகிறேன்.
அன்புடன்,
இன்னம்பூரான்