Friday, August 14, 2015

இந்தியா 2085

இந்தியா 2085
இன்னம்பூரான்
சுதந்திர தினம்
ஆகஸ்ட் 15, 2015

நமது இந்தியா விடுதலை அடைவதற்கு முன், கலோனிய அரசின் நிர்வாகத்தை பற்றி அறிந்தவர்களில் சிலர் தான் தற்காலம் இருக்கிறார்கள்; தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வரிசையிலும் சிறுபான்மையினர் தான் சமுதாய வரத்துப்போக்குகளை அலசுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில: முதுமையின் தள்ளாமை, ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று சிறுவயதிலிருந்து இருந்த மனப்பான்மை, அறியாமை. முதியோர்களின் நோக்கில் வரலாறு புதைந்து கிடக்கிறது. தொல்லியல் ஆராய்ச்சி அருளும் பரவசத்தை இங்கும் பெற இயலலாம். அப்படித்தான் அமைந்து விட்டது, குடியரசர் ப்ரணாப் முகர்ஜி அவர்களின் விடுதலை தினம் பொருட்டு ஆற்றிய உரை.

நேற்று இரவே, என் சுதந்திர தின வாழ்த்துக்களை பதிவு செய்ய முயன்றேன். ‘நான் அழுகிறேன்.’  என்ற தலைப்புடன் முற்றுப்புள்ளி. நல்ல நாளும் அதுவுமாக அழுகை ஏன் என்ற கேள்வி. ஆனால் பாருங்கள், குடியரசரே ஒரு குரல் அழுது விட்டார். பிரதமர் இன்று காலை கவசக்கண்ணாடியறையிலிருந்து நற்செய்திகள் பரப்பினாலும், அவரும் குடியரசரின் உரையை போற்றியுள்ளார். அவர் வேறு என்ன தான் சொல்லியிருக்கலாம் எல்லாம் ‘லாம்’ தான். அதாவது, அவரவர் கற்பனை.

என் அணுகுமுறை, குடியரசரின் தொலைநோக்கு கவலைக்கு ஏற்புடையது என்பதால், அதன் வெளிப்பாடு தான் என் சுதந்திர தின வாழ்த்துக்கள். முதன்மையாக, மக்களுக்கு, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் பெரும்பாலும் சுயநலம் நாடி, தப்பும் தவறுமாக திரவியம் தேடி, அதை மறைத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆணவத்துடன் மக்கள் நலனை புறக்கணிக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி; அந்தோ பரிதாபம். உள்ளங்கை தான் அரிக்கிறது! மக்களே நேரிடையாக தீநிமித்தத்தில் மிதக்கிறார்களே! 

திருமூலரின் மரமும் மாமத யானையும் போலத்தான் அரசியல் கட்சிகள். ஒரே கட்சி தான் 1947லிருந்து அரசாளுகிறது. சுயநலம், அதிகார துஷ்பிரயோகம், துட்டு புரட்டுதல் என்று வந்தால். பெருந்தலைவர் காமராஜர் சொன்னமாதிரி ‘எல்லாம் ஒரே குட்டையில் அழுகிய மட்டை.’ வாக்கு வாங்கி, மக்களுக்குப் போக்குக்காட்டுவது என்றால், அவரவர் கட்சி, கொடி, தடி, மண்ணாங்கட்டி எல்லாம். நூடிலை (மறுபடியும் கிறுபடியும் வரதாமே!) இழுத்தால், நீண்டு வந்து கிழியும். சணற்கயிரானால், திரி பிரியும். கப்பல்களில் கட்டுவதற்கு ஏற்றதாக சிசல் கயிற்றை உபயோகிப்பார்கள். கயிறு அறுந்தால், உயிர் பிரிந்துவிடும். அதனால் வலிமை வாய்ந்த கயிறு. சிசல் கயிறாக 1947ல் நம்மிடம் வந்துள்ள விடுதலை, இன்று சணற்கயிராகி, பாரதமாதா உயிருக்கு அபாயமாகி, விடுதலையையும், நாட்டின் பெருமிதத்தையும் பறித்து விடுமோ என்று அஞ்சுகிறார், குடியரசர். நல்லவேளை நூடிலாகி நொந்து போகவில்லையே, அந்தவரைக்கும் லாவம்! என்பர், சிலர். அவர்களை நம்பாதே என்பது என் கட்சி. ஆதரவு தருவது, குடியரசர்.

ஏற்கனவே காலம் தாழ்ந்து விட்டதே என்று அங்கலாய்க்கும் குடியரசர், “…நாம் உடனே பிரிந்த திரிகளை விட்டுவிட்டோம் ஆனால், எழுபது வருடங்களுக்கு பின் வரும் சந்ததி நம்மை தூற்றுமே, நாம் எழுபது வருடங்களுக்கு முன் (வயசாயிடுத்தோல்லியோ! அதையெல்லாம் மறந்து சில தலைமுறைகள் ஆயின என்பதை மறந்து விட்டார்!) நாம் தேசீயத்தலைவர்களை போற்றியது போல் அல்லாமல்…’  என்று தேம்பினார். அவரது கவலை நியாயமானது. நான் எழுத அஞ்சியதை அவர் கூறி விட்டார்.

இது நிற்க.

எல்லாருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். கொண்டாடுவோம். பந்தாட வேண்டாம். 

சரியா?


_#_

Thursday, August 13, 2015

சுவற்றில் அடித்த பந்து!

சுவற்றில் அடித்த பந்து!
இன்னம்பூரான்
புதன் கிழமை: ஆகஸ்ட் 12, 2015

சிறிது நேரம் கிடைத்ததால், ஒரு சிறிய பதிவு; வழு தேடவேண்டாமே. சுவற்றில் அடித்த பந்து அதிவேகமாக திரும்பி வரும். பந்துக்கும், சுவற்றுக்கும் அடி தான் மிச்சம், வேறு ஆதாயமில்லை என்றாலும், அடித்தவன் கை நோகலாம்; வலு பெறலாம். அந்த மாதிரி தான் இந்த யாத்திரையின் போது கண்ட சில சமூகக் காட்சிகள். இந்தியாவுக்கு இருக்கும் கொடுப்பினையை சொல்லி மாளாது. என்னே பாரம்பரியம்! என்னே செங்கோலின் நேர்மை! என்னே வெண்குடையின் தருமம்! என்னே தெய்வ பக்தி! என்னே ஆற்றுப்படையாக பெருகி வந்து ஊக்கமளிக்கும் கலையார்வம்! என்னே வரலாற்று செய்திகள், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஏட்டுச்சுவடிகளிலும்!

இவற்றை நம் நாட்டு மக்கள் அறியாமல் குப்பை கொட்டுவதை கண்டால், மனம் கொதிக்கிறது. போகுமிடங்களில், மாணவ சமுதாயத்துடன் உறவு கொண்டாடினேன். என் மனம் முறிந்தது தான் மிச்சம், பல விஷயங்களை பற்றி பேசிப்பார்த்த பின். மெத்த படித்த மாணவர் ஒருவர் தனது விருதுகளை பாராட்டிக்கொண்டபின், சமுதாயம் தனது திறனை, அந்தோ பரிதாபம்!, பயன் படுத்திக்கொள்ளவில்லையே என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவரது துறைகளை பற்றி விசாரித்தால், ஒன்றும் தெரியாது என்று ஒத்துக்கொண்ட அவர், தனக்கு வழிகாட்டிகள் கிடைக்கவில்லை; ஆசிரியர்கள் உருப்போட்டதை தான் கிளிப்பிள்ளை போல் சொல்லி விட்டு, இடத்தை காலி செய்துவிடுவார்கள், பெற்றோர்கள் அறிவிலிகள் என்றவர், தனக்கு ஆங்கிலம் தெரியாது; சொல்லிக்கொடுத்ததைக்கூட தான் தலையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். அத்தனை தமிழ் மோகமாம். அதுவும் தெரியவில்லை. தமிழ்நாட்டு உயர் அதிகாரிகள் தேர்வுக்கு படித்துக்கொண்டதாக சொன்னார். அதற்கான புத்தகம் எட்டாம் வகுப்புப்பாடம், தப்பும் தவறுமாக, தந்தி வாசகத்தில். சுருங்கச்சொல்லின், அவர் சம்பந்த்ப்பட்டவரையும், கல்வி வேஸ்ட். அதை அழுத்தம் திருத்தமாக சொன்ன பத்து வயது பையன், ‘நீங்க படிச்சு என்ன கண்டீங்க?’ என்று சுற்றி வளைத்துக்கேட்டான். தனது தந்தை பள்ளிக்கு செல்லவேண்டும் என்று அடிப்பதாகவும் சொன்னான். இது எல்லாம் கோயில் வளாகங்களில்! மற்றொரு மாபெரும் கோயிலின் மூலை கோபுரத்தின் நிழலில், சல்லாபம் நடந்து கொண்டிருந்தது. அதை  ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த,  தோராயமாக முப்பது வயது வந்த மனிதன் ஒருவன் சுயலாகிரியில் இருந்தான். எங்களிடம் கடுப்பாக பேசி தெய்வ தரிசனத்தைத் தடுத்தாட்கொண்ட கோயில் காப்பாளர், அவர்களுக்கு உடந்தை!

மணிமேகலையின்,
“…படையிட்டு நடுக்குங் காமன் பாவையை
ஆடவர் கண்டா லகறலு முண்டோ!!!!!”

எனக்கு நினைவுக்கு வந்தது.

தூக்கம் வருகிறது; பிற பின்னர்.
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, August 11, 2015

நண்பர்களே 2

நண்பர்களே,

யான் தேசாந்திரியாக அலைகிறேன். எழுதுவதில் தாமதம். மன்னித்தீர்கள் அல்லவா!

ஆலாய் பறந்தாலும், பற்பல புராதனங்களை பார்த்துக்கொண்டு, ஆராய்ச்சிமணியின் டிங் டாங் கேட்டுக்கொண்டு, லால்குடியில் லா.ச.ரா. வின் சொல்லில் மயங்கிய தேவி தரிசனம், புதுக்கோட்டையில் நான் விட்டுசென்ற திரிசமன் தலங்களையும் திருகோகரணத்திலும், திருமயந்த்திலும், நார்த்தாமலையிலும் தரிசனங்கள் செய்து விட்டு, கானாடுகாத்தானில் டேரா போட்டு, பள்ளத்தூர் மஹாத்மியங்களை கண்டு களித்து, ஆத்தங்குடி பெரிய வீடு, சின்ன வீடு எல்லாம் சென்று, இன்னம்பூரில் திவ்யதரிசன்ம் செய்து விட்டு, நாளை பா.சே. க்கு பயணம். பிறகு என்ன? தொல்காப்பியம் தான்.

இன்னம்பூரான்
11 08 2015