வம்பும் தும்பும் ~2
இன்னம்பூரான்
12 10 16
டவர் டாக்கீஸ்ஸில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி சினிமா நடக்குது. ராணியம்மாவுக்கு பன்னீர் தெளிக்கும் உபநடிகை (எக்ஸ்ட்ரா) வராங்க என்று வாய்வார்த்தையா சொன்னா போதும். கூட்டம் அலை மோதும். நம்ம நாயக்கரோட தேர்தல் ஊர்வலம் வரணும். காச்சு மூச்சுநு கத்தணும். சோறு போட்டு, போத்தலும் கொடுத்து வள்ளிசா பச்சை நோட்டு இரண்டு தாராராம்னா போதும், ரேக்ளா ரேஸ் மாதிரி ஓடி வருவாங்க. இலவச கட்டில் எடுத்துப்போக, வாகா போட்டிருக்காங்க என்று மோப்பம் பிடித்த சுடலைமுத்து நாப்பது ஊரு சனங்களை இழுத்துக்கொண்டு வருவான். கமிஷனும் அடிப்பான். கூட்டம் கூட்டுவதும், ஊரை வளைக்கிறதும் ஒரு கலை. ஒரு குரங்குக்குட்டி போதும். பசங்களை இழுக்க. தெருவோரம் ஒருவர் ஹிந்தியில் பிளக்க, சகபாடி தமிழில் தந்தியடித்து தாதுபுஷ்டி லேகியம் விற்றால் விடலைகள் கூடும். மறு நாள் வேறு நகரில், சகபாடிகள் ட்யூட்டி மாறுவார்கள். மாதரசிகளை வைத்து களை கட்ட, நாலு புடவையை 101% தள்ளுபடி என்று கூவினால் போதும்.
இத்தனை உத்திகள் இருக்க, இந்த அன்றாட வாழ்க்கை நெறி அறியாத விஞ்ஞானிகள் அடித்தக் கூத்தைக் காண, மோடி மஸ்தானே வரவேண்டும். அவர் தான் விஞ்ஞானிகளிடம், இந்த ‘போனால் போகட்டும் போடா’ என்ற அசட்டு தைரியத்தை விடுங்கள் என்று சொன்னார். இனி செய்தி.
இமாலய பிராந்தியத்தில் எல்லை பாதுகாப்பு என்ற அதிமுக்கிய பணியை பாதுகாப்பு இலாக்காவின் விஞ்ஞான ஆய்வு கழகம் [DRDO] செய்யக்கூடிய பணிகள் பற்றி போனவாரம் ஒரு மாநாடு நடந்தது. உத்தராகாண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில் நடந்தது. இது சைனா எல்லை அருகில் இருக்கிறதே என்ற அச்சத்தில் ராணுவ விஞ்ஞானிகள் டிம்கி கொடுத்தாங்களாம். அடாது மழை பெய்தாலும் விடாது ஆட்டம் நடை பெறும் என்ற ஆர்வத்தில் அந்த மையம் மாநாட்டை நடத்தி மகிழ்ந்தார்கள். வந்தவர்களில், பெரும்பாலோர் எடுபிடி ஆட்கள், வண்டி ஓட்டுனர், அங்காடி கையாட்கள், காண்டீன் சர்வர் சுந்தரங்கள், மெக்கானிக் வகையறா. எல்லை பாதுகாப்புப் பற்றிய உரை ஆற்றியவர் ஒரு காண்டீன் பொடியன். மாநாடு நடத்தியவர்களை மட்டும் குறை கூறுவது நியாயமில்லை. பல மையங்கள் எடுபிடி ஆட்கள், வண்டி ஓட்டுனர், அங்காடி கையாட்கள், காண்டீன் சர்வர் சுந்தரங்கள், மெக்கானிக் வகையறாவை தான் அரசு செலவில் அனுப்பினார்கள்.
எல்லை பாதுகாப்புப் பற்றிய உரை ஆற்றிய காண்டீன் பொடியன் என்ன அறிவுரைகள் அளித்தார் என்று சரியாக கூறுபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com