திரு. வி. க. குருகுலம்
முகவுரை
“திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும்” என்ற தொடரை, பின்னூட்டங்களாக வந்த வாசகர்களின் 60 கருத்துக்கணிப்புக்களுக்கு இணங்க, மேற்படி தலைப்பில், சீர்திருத்தங்கள் செய்து, புதியதொரு தொடராக சமர்ப்பிக்கிறேன்.
திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொண்டு, தேசீய பணி, சமுதாய சீர்திருத்தங்கள், தொழிலாளர்களுக்கு தலைமை என்று ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அடிப்படையில் செய்ததை எல்லாம் தமிழினம் மறந்து விட்டது. தற்காலத்தமிழர்களுக்கு அவரை பற்றி தெரிந்தது சொற்பம். யான் அவருடைய ஏகலைவ சீடன் -அதாவது, அவரிடம் நேரடியாக பாடம் படிக்காவிடினும், அவருடைய நூல்களை என் குருகுலமாக பாவித்து, இந்த தொடரை உங்களின் ஆதரவுடன் துவக்குகிறேன்.
இத்தருணம் நன்றி நவில்வது பொருந்தும். எனது சிறுவயதிலேயே என் தந்தை எனக்கு நாட்டுப்பற்று கற்றுக்கொடுத்தார். ஒரு விதத்தில் அது அவருக்கே இன்னல் விளைவித்தது. கலோனிய அரசு கோலோச்சிய காலகட்டம். அவர் போலீஸ் துறையில் பணி புரிந்தார். என்னுடைய பொதுமேடை ஆவேசப்பேச்சுக்கள் உசிலம்பட்டியில் வரவேற்கப்பட்டன; கலோனிய அரசால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன; அவருடைய வேலைக்கும் உலை வைத்தன. ஆனால், அவர் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. அவருக்கு என் வணக்கமும், நன்றியும் உரித்ததாகவன. அந்த காலகட்டத்தில் எனக்கு ஒரு திரு.வி.க. நூல் பரிசாக அளிக்கப்பட்டது. கொஞ்சம் கூட புரியவில்லை. கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு பிறகு அதே நூல் கிடைத்தது, தற்செயலாக. இப்போது புரிந்தது. நான் திரு.வி.க. பக்தன் ஆனேன்.
அந்த காலகட்டத்தில் நான் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் வாழ்ந்து வந்தேன். உலகாளவிய தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான முனைவர் சுபாஷிணியின் அறிமுகம் கிடைத்தது. அவர் திரு.வி.க. அவர்களின் வாழ்க்கை, நூல்கள், தொண்டு ஆகியவை பற்றி என்னை பலமுறை தொலை பேசி மூலம் நேர்காணல் செய்து பதிவு செய்தார். அந்த உந்துதலால், அவரின் விடா முயற்சியின் பயனாக, திரு.வி.க. அவர்களின் நூல்களை மின்னாக்கம் செய்ய சென்னை வந்து சேர்ந்தேன். டாக்டர் அக்னிஹோத்ரம் வாசுதேவன் அவர்கள் மின்னாக்கம் செய்ய சொல்லிக்கொடுத்தார். மற்றவர்களின் மறு பிரசுரங்களில் எனது நாட்டம் செல்லவில்லை. எங்கிருந்தோ வந்த முனைவர் நாகலிங்கம் அவர்கள் (அவருடைய முனைவர் பட்டத்துக்கு எடுத்துக்கொண்ட ஆய்வே, திரு.வி.க. அவர்கள் எழுதிய பெரிய புராணம் பற்றிய நூல்.) மூல நூல்களை கொடுத்து உதவினார். நான் மின்னாக்கம் செய்த திரு.வி.க. நூல்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல் சேகரிப்பில் உளன. நான் எழுதிய கட்டுரைகள் எல்லாவற்றிலும் திரு.வி.க. அவர்களின் முத்திரை உள்ளடக்கம். அவற்றை இடை விடாமல் வல்லமை மின் இதழில் முனைவர்.அண்ணா கண்ணனும், ஆசிரியர் திருமதி. பவள சங்கரியும் பிரசுரம் செய்தனர். என் தந்தைக்கு அடுத்தபடியாக, முனைவர் சுபாஷிணி, டாக்டர் வாசுதேவன், முனைவர் நாகலிங்கம், முனைவர் அண்ணா கண்ணன், திருமதி. பவளசங்கரி ஆகியோருக்கும், இந்த இழையின் உந்தனர் ஆகிய டாக்டர் நா.கணேசன் அவர்களுக்கும், கருத்தளித்த வாசகர்களுக்கும் நான் நன்றி நவின்று, இந்த தொடரை துவக்குகிறேன்.
இன்னம்பூரான்
29 ஆகஸ்ட் 2019
- முதற்படி
சான்றோர்களைத் தற்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் போது, அவர்களின் பிறந்து, வளர்ந்து, மறைந்த கதையை விட அவர்களின் வாழ்நெறியை எடுத்துரைப்பது தான் பயன் தரும். அத்தருணம் சில நிகழ்வுகளை முன்னிறுத்தி அலசுவது தான் வாழ்க்கைப்பாடங்களை அளிக்கும் வழி. அவ்வாறு தொகுக்கும்போது அட்டவணை போட்டு கதாநாயகன் கட்டை விரல் சப்பியதில் தொடங்கி மரணாவஸ்தை வரை வரிசைப்படுத்துவது தேவையல்ல. சில சம்பவங்கள் அந்த சான்றோர்களின் பெருமைக்குக் கட்டியம் கூறும். சில அவர்களின் தர்மசங்கடங்களை பூடகமாகத் தெரிவிக்கும் – திறந்த மனதுடன் தேடினால். நான் என்னவோ என் மனம் அழைத்துச்செல்லும் ராஜபாட்டையில் தான் உங்களை அழைத்துச்செல்வேன். ராஜபாட்டை விசாலமானது. திரு.வி.க. அவர்களை முன்னிறுத்தினாலும், நாட்டு நடப்புகள் -உதாரணமாக ஜாலியன் வாலா பாக் - விவாதிக்கப்படும். மஹாத்மா காந்தி வருவார்; கார்ல் மார்க்ஸ்ஸும் வருவார். பொறுத்தாள்க.
மஹாத்மா காந்தியின் ஜன்மதினம் அன்று உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். காந்திஜியை நினைவு கூர்பவர்கள் சொற்பம்.
அது கூட இல்லை. ‘தமிழ் காந்தி’ ‘தமிழ்தென்றல்’ திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம் அவர்களை தமிழர்கள் அறவே மறந்துவிட்டார்கள். ஏதோ விருது அளிக்கும் தினத்தில் ஒரு வரி உதட்டளவு புகழுரை. அத்துடன் சரி. அங்கும், இங்கும், எங்கும் இறைவனின் சிலாரூபத்தைப் பழிப்பவர்கள் எழுப்பிய மானிடஜன்மங்களில் சிலைகள் மலிந்த நம் நாட்டில், எனக்குத் தெரிந்து மூவருக்கு மட்டும் தான் ஆளுக்கு ஒரே ஒரு சிலை, பொது மக்களே முன் வந்து ஆர்வத்துடன் சந்தா அளித்து எழுப்பபட்டவை. அவர்களில் ஒருவர் திரு.வி.க. அவர்கள். மாஜி பி & ஸி மில் முன் நிற்கிறார், அஃறிணை ஆகி விட்ட திரு.வி.க. மற்ற இருவரை பற்றி யாராவது கேட்டால் சொல்கிறேன். இது நிற்க.
கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரிஜனல் காந்தியிடம் செல்வோம். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அந்த கனிவை ந்யூஸிலாந்தில் காண்கிறோம். அங்கு ஒரு பயங்கரவாதி பலரை சுட்டுத்தள்ளி விட்டான். அந்த நாட்டு வெள்ளையர் மக்கள் இஸ்லாமியர்களை தேடி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்களுக்கு காந்தி மஹான் அறிமுகம் இருக்கிறது. நமக்குத்தான் இல்லை.
“ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு. அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி.” -இன்னம்பூரான்.
2. நோன்பு
நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது.
தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ? காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து எழுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர்.
சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் –
‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’
இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.
சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்ளெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள்.
கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.
(தொடரும்)
இன்னம்பூரான்
பின்குறிப்பு:
புவனம் முழுதும் நண்பர்கள் இருப்பது ஒரு கொடுப்பினை. டெக்ஸாஸ் வாழும் டாக்டர் நா.கணேசன் அவர்களிலொருவர். ஒரு இழையில், அவர் ”…மதறாஸ் வந்தால் இன்னம்பூரான் சார் வீட்டிலோ அல்லது கீதாம்மா வீட்டிலோ நிச்சயம் திணைப்பாயாசம் கொடுக்கணும்.” என்று எழுதி என் மனதை கவர, இந்த இழை பிறந்தது.
என் குருநாதரின் அன்பு கட்டளை படி எனக்கு எல்லாரும் வேண்டும். இதமாக பழக வேண்டும். இங்கிதமான உறவு நாடுபவன், நான். இந்த இழை தொடரும். காழ்ப்புணர்ச்சியை உரக்கப் பேசுபவர்களை தணிந்து பேசச்சொல்லி கோரிக்கை விடுகிறேன்.
3.அடிச்சுவடுகள்:
சான்றோர்களை பற்றி மற்றவர்கள் எழுதியதை படிக்கும் போது, நாம் அவ்வாறு எழுதியிருக்கலாகாதா? என்ற அங்கலாய்ப்பு எழுவது ச்கஜம். நம்மில் பெரும்பாலோர் என்னைப்போல பாமரர்கள் தானே. ஆர்.நல்லகண்ணு அவர்கள் பழுத்த பொதுவுடைமை அரசியல் வாதி. நல்லொழுக்கத்துக்கு முன்னுதாரணம் வகிப்பவர். அவர் திரு.வி.க. அவர்களின் சீடர் என்பது வியப்புக்குரிய செய்தி அல்ல. குருநாதர் தானே கார்ல் மார்க்ஸின் நூல்களை பிரசுரம் ஆனவுடன் படித்து தொழிற்சங்கத் தலைவர் ஆனார்.மேலும் சீடர் குருநாதரின் அடிச்சுவடுகளை தொகுத்தார். அவற்றை பட்டியலிட்டு இங்கு, தோழர். நல்லகண்ணு அவர்களுக்கு நன்றி கூறி, இங்கு தவணை முறையில் தருகிறேன்.
1. "அரசியல் மேடைகளில் தமிழில் பேசிச் சாதாரணமக்களை அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடச் செய்தார். முதன்முதல் ஏகாதிபத்ய எதிர்ப்பு அரசியலில் சானான்யரும் ஈடுபடவேண்டுமென்று வலியுறுத்தினார். சாதாரணமக்களையும் விடுதலைப் போரில் ஈடுபடத்தூண்டினார்.
2. "சென்னை மாநகரில் அமைப்பு ரீதியாகத் தொழிலாளர்களைச் சங்கமாகத் திரட்டினார். இறுதி மூச்சு வரை தொழிலாளர் நலனுக்காகப் போராடி வந்தார்."
(தொடரும்)
really nice, keep it up! I'll go ahead and bookmark
your site to come back down the road. Cheers
really nice, keep it up! I'll go ahead and bookmark
your site to come back down the road. Cheers
Please keep us informed like this. Thanks for sharing.
know who to ask.