Showing posts with label அதீதம். Show all posts
Showing posts with label அதீதம். Show all posts

Thursday, March 27, 2014

தோணித்து! போட்டேன்: இன்னம்பூரான் பக்கம் 7 – அதீதம்

இன்னம்பூரான் பக்கம் 7 –

அதீதர்களே!

அடுத்த வாரம் டிசம்பர் 11 அன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அவர்களின் ஜன்மதினம். அதை பற்றி நினைத்த மாத்திரம் நான் வலுக்கட்டாயமாக நாம் ‘வீர சுதந்திரம்’ பெறுவதற்கு முன்னால் இருந்த கால கட்டத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். 1930-43 களில் பாரதியாரின் குடியிருப்பு, மாணவர்கள் நாவில் மட்டுமே. அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். எளிதில் படிக்கக்கிடைக்காது. சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

நான் சொல்லப்போவது இன்றைய சூழ்நிலையில் எடுபடாமல் போகலாம். பாரதி போற்றியதெல்லாம் அகக்கண்ணுக்கும், புறக்கண்ணுக்கும் புலப்படவில்லை என்பார்கள் இன்றைய தேசீய தலைவர்கள் என்று ஊடகங்களில் பெரிதும் பேசப்படுகிறது. கரி, வைரம், நீர், ஆகாயம், மலை, இரும்பு, ஏழ்மை எல்லாவற்றிலும் துட்டு பார்க்கிறார்களாம். இந்திய தணிக்கைத்துறை கரடியாக கத்துகிறது. நான் அவ்வப்பொழுது நினைத்துக்கொள்வது உண்டு ~ மஹாகவி இதையெல்லாம் பார்த்தால் என்ன சொல்வார் என்று? என்ன சொல்வார்?
‘என்று தணியும் இந்த பாழுங்காசுக்கு வந்த மோகம்?’ என்று பாடுவார்.

சில வருடங்கள் முன்னால் தஞ்சை மேலராஜவீதியில் இருக்கும் கொங்கணேஸ்வரர் பாடசாலைக்கு விஜயம் செய்தேன். தலைமை ஆசிரியர் எடுத்துக்கொடுத்த என் மூன்றாம் வகுப்பு பற்றிய பதிவின் நகலை கொடுத்த போது மனம் அலை பாய்ந்தது. எனக்கு பாலு சார் தான் எல்லாம் என்றேன். நான் அவருடைய மகன் என்றார், அருகில் இருந்த நண்பர். அந்த பாலு சார் சொல்லிக்கொடுத்த படி திலகர் திடலில் நான் டிசெம்பர் 11, 1941 அன்று பக்திப்பரவசத்துடன் ஆற்றிய சொற்மாரி கேட்டு ஒரு பெரியவர் சபையிலேயே என்னை கட்டிக்கொண்டு அழுதார். பரிசாக கிடைத்த நூல்கள் இரண்டு: பாரதியாரின் கதைக்கொத்தை யாரோ கொத்திக்கொண்டு போய்விட்டார்கள். என் வாழ்க்கையை வகுத்த பகவத் கீதையை என் பெண் பத்திரமாக வைத்திருக்கிறாள். கலோனிய அரசின் உளவுத்துறை குறிப்பு எடுத்துக்கொண்டதாம். எனக்கு ஒரே பெருமை. அத்தை தான் திருஷ்டி கழித்து விட்டு, என்னை மறைத்து வைத்தாள். இதெயெல்லாம் பாடசாலையின் மாணவர்களுக்கு சொன்னபோது எனக்கு அதீத பெருமை!
ஐந்து வருடங்களுக்குப்பிறகு உசிலம்பட்டி ஜில்லா போர்ட் கள்ளர் ரெக்ளமேஷன் பள்ளி. எந்த கணக்கில் என்னை மாணவர் தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள் என்று அறியேன். ஆனால், நான்தான் சட்டாம்பிள்ளை! தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் அண்டை வீடு. குடும்ப நண்பர். நான் அவருக்கு செல்லம் வேறு. ஒரு நாள் காலை பிரார்த்தனையில் ‘வந்தே மாதரம்’ பாடச்சொன்னேன். ஒச்சத்தேவனும் பாடினான். தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டு நின்றார். ஆக்ஷேபிக்கவில்லை. மறுநாள் தற்காலிக பதவி நீக்கம். திரு. சிவசுப்ரமண்ய ஐயருக்கு தற்காலிக பதவி உயர்வு. நாங்கள் ஹர்த்தால் செய்தோம். ஐயரோ அப்பாவுக்கு ஆப்த நண்பர். அவர் வந்து கேட்டும் நாங்கள் ஹர்த்தாலை வாபஸ் வாங்கவில்லை, ஜனாப் அவர்கள் பதவிக்குத் திரும்பும் வரை. ஏதோ ஒரு மாதிரியாக என்னை கைது செய்து, உடனுக்குடனே விட்டும் விட்டார்கள்.
இதெல்லாம் தம்மாத்தூண்டு சமாச்சாரங்கள். மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்  ஒரு நாள் தமிழ்த்தென்றல். திரு.வி.க. அவர்களின் தேசபக்தன் இதழ் அலுவலகத்துக்கு வந்தார். உதவி ஆசிரியராக இருந்த பரலி.சு.நெல்லையப்பர் எல்லாரையையும் பக்குவமாக தயார் செய்து வைத்திருந்தார். பாரதி விஜயம் பற்றி மற்றொரு உதவி ஆசிரியரான திரு.வெ.சாமிநாத சர்மா எழுதியிருந்ததை ஒரு நூலுக்காக ஆங்கிலப்படித்தினேன். அதனுடைய தமிழாக்கத்தை யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;…’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி…’ என்று குரு வந்தனம் செய்து,
‘வந்தாரே அமானுஷ்யன்;
சட்டையில் காலரில்லை;
ஆனா டை கட்டி தொங்குதடா,
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,
தோளின் மேல் சவாரி,
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி!
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி.
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, விடை பெறுகிறேன். உங்கள் யாவரையும் அந்த ஆதிபராசக்தியின் திருவருள் ரக்ஷிக்கட்டும்.

பிரசுரம்: அதீதம் இதழ்
சித்திரத்துக்கு நன்றி: http://bharathiyar.gratussolutions.com/sites/all/themes/bharathiyar/images/bharathiar1.jpg

Thursday, May 2, 2013

இன்னம்பூரான் பக்கம் 16

இன்னம்பூரான் பக்கம் 16

“ …தத்துவத்தின் ஜனனம், வியப்பிலே தான்…”. (ப்ளேட்டோ)
‘சர்வ வியாபியான தத்துவ போதனையும், தேடிய சிந்தனையும், திறந்த மனதும், பிரதிபலித்தல் வருகையும்  நமக்கு உறுதுணை என்ற பிந்திய தொடரின் பீடிகை, வேறு  ஒரு இடத்தில் சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஏதுவாயிற்று. அவற்றின் சாராம்சம்:
பொது அங்கீகாரம் (conformity) ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. மாற்றமில்லாமல் முன்னேற்றமில்லை. நிரந்தரம் அடைந்த பொது அங்கீகாரம் அதற்கு முரண். சிந்தனைக்கு அதை மாற்றியமைக்கும் திறன் உண்டு. அதனால் தான், காலத்துக்கேற்ற பொருத்தம்/புதிய கோணங்கள்/காரண காரியங்களை கண்டு கொள்வது ஆகிய கட்டாயங்கள் ஏற்படும்போது,  பொது அங்கீகாரம் சிந்தனையை குலைக்கக் கட்டைப் பஞ்சாயத்து செய்கிறது. மூடநம்பிக்கைகள் அதனுடைய தூண்களாக அமைந்து விடுகின்றன.
விவேகமற்ற அரசியல் மேலாண்மையை கட்டுக்குள் வைக்க சமுதாயத்துக்குத் துணிவு இல்லாததால், தத்துவ விசாரணையின் பிதாமகன் என கருதப்படும் சாக்ரடீஸ் அரசாணைக்குட்பட்டு நச்சு அருந்தி தன்னை மாய்த்துக்கொண்டார். ‘காசே தான் கடவுளடா!’ என்ற பழம்பெருச்சாளிகளை நிந்தித்த ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டார். ‘‘சாந்தி நிலவவேண்டும்’ என்ற மஹாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். பொது அங்கீகாரத்தின் மூளைச்சலவையின் ஆதிக்கம் வலிமை மிகுந்தது. அதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள, நாம் ஒரு குகையில் நுழைவோமாக.
நீண்டதொரு இருட்டுப்பாதையில் ஓட்டமும் நடையுமாக நடை நடந்து ஒரு கும்மிருட்டு குகைக்குள் செல்கிறீர். அதனுடைய முட்டுச்சுவர் பெரிது; அகலமானது; நீண்டது. மானிடர்கள் பலர், அதில் விலங்கிடப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கழுத்துக்குக்கூட அசையமுடியாத தளையிறுக்க, அவதிபடுகிறார்கள். எதிரில் உள்ள மற்றொரு சுவர் ஒன்று தான் காட்சி. ஒருவரை ஒருவர் பார்க்ககூட முடியாது.  வலியும் வழக்கமாகி போய்விட்டது. விடுதலையில்லை என்பதும் உறுதியாகி விட்டது. அவர்களுக்கு இது பழக்கமாகி விட்டது. ஆயுசு பரியந்தம் இதே நிலை, ஜனித்ததிலிருந்து. இயல்பு ஆகிவிடும், காலாகாலத்தில். இந்த முட்டுச்சுவருக்கு பின்னால் ஒரே பிரகாசம். கொழுந்து விட்டு எரிகிறது தீ. அங்கிருந்து சற்றே தொலைவில் சூடில்லா பிரதேசம். அங்கு மக்கள் வந்து போய் கொண்டு இருக்கிறார்கள்; தலையில் சுமை; வாயெல்லாம் பல்;அப்படி பேச்சு. இவர்களில் நிழல்களை கைதிகள் பார்க்கிறார்கள். பேச்சொலியின் எதிரொலியை கேட்கிறார்கள். வாழ்நாள் முழுதும் இதே கதி என்பதால், அவர்கள் மனதில் இந்த நிழல்களும் எதிரொலியும் உண்மை நிகழ்வுகளாக பதிந்து விடுகின்றன. என்ன தான் எடுத்துச்சொன்னாலும் அது விபரீதம் தான். சுருங்கச்சொல்லின், இந்த நிழலுலகம் அவர்களுக்கு நிதரிசன உலகு. மற்றதெல்லாம் மாயை. எப்பாடுப் பட்டோ, நீவிர் ஒரு கைதியை விடுவித்து, பிரகாசமான பிரதேசத்துக்கு அழைத்து செல்கிறீர்கள். ஒளி அவன் கண்ணை குத்துகிறது. முடங்கிக்கிடந்த கைகால் அசைய மறுக்கிறது. ஒன்றும் புரியவில்லை. காலம் செல்ல, செல்ல, அவனுக்கு துணிவு பிறக்கிறது, துளிராக. வெளியுலகம் அவனை ஈர்க்கிறது. நிழலை மறந்து அசலை அனுபவிக்கிறான். எதிரொலியின் விகாரம் மறைந்த இசைஒலி அவனுக்கு அமுதமாகப்படுகிறது. உம்முடன், அடித்துப்பிடித்துக்கொண்டு சகபாடிகளை உய்விக்க ஓடோடி வருகிறான், இருட்டுக்குகைக்குள். அவர்களோ இவனுடைய தீர்க்க தரிசனத்தை எள்ளி நகைத்து, அவனை நாடுகடத்தவேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வருகிறார்கள்.
(தொடரும்)
உசாத்துணை: The Myth of the Cave.
சித்திரத்துக்கு நன்றி
http://qiq.ru/media/npict/1008/original/amazing_animals_wallpapers_full_hd_1080p_709421.jpegMore Posts
பிரசுரம் http://www.atheetham.com/?p=4742

Tuesday, April 2, 2013

இன்னம்பூரான் பக்கம் -14

ஒரு நாட்டின் வரலாறு அதனுடைய வளர்/தேய் பிறைகளை பாரபக்ஷமின்றி ஆதாரத்துடன் பதிவு செய்தால் தான், அந்த நாட்டின் மக்கள் அது அளிக்கும் படிப்பினைகளை புரிந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் ஒரு படி ஏறி, வரலாற்றையே படைக்கலாம். இன்றைய சமுதாயத்திற்கு நேற்றைய சமுதாயத்தின் அனுபவப்பாடங்கள் நேரிடையாகத் தெரியாது. நேற்றைய சமுதாயமும், அந்த பிரச்னையை எதிர்கொண்டது என்பதும் உண்மை. இப்படி பல தலைமுறைகள் வரலாற்றின் உதவியால் மட்டுமே, சுயவரலாற்றை படைக்க முடியும்.
நம் இந்தியா விடுதலை பெற்ற வரலாறே மகத்தானது. பிரிட்டீஷாரின் கலோனிய ஆட்சியின் நன்மை, தீமைகளை நடுவு நிலையில் நின்று அலசி பயன் பெறுவது 1947ல் இயலாதது. இன்று இயலும். அத்தனை கசப்புகளை நாம் அனுபவித்து விட்டோம். பல தலைமுறைகள் வந்து போன பின், தள்ளி நின்று, பாரபக்ஷமில்லாமல், நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளை, வரலாற்று பதிவுகளை அணுக முடிகிறது. ஒரு உதாரணம். இந்தியா, பிரிட்டீஷ் ஆட்சியிலக்கணமாகிய நாடாளுமன்ற தேர்தல் அமைப்பை (வெஸ்ட் மினிஸ்டர் மாடல்), மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டது. மற்றும் பல நிர்வாக நுட்பங்கள் – தணிக்கை, வேவு இலாகா, அமைச்சரவை மாடல், நீதித்துறை ஆகியவை. வரலாறு படிக்காவிடின், இவை எப்படி தெரிய வரும்?
அதா அன்று. பிரிட்டீஷ் கலோனிய ஆட்சிக்கு முன் இந்தியா இருந்த விதம் முதற்கொண்டு, அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு முன் வரை, நம்முடைய வரலாறு நமக்குத் தெரிய வேண்டாமா? அசோக சக்கரவர்த்தியின் பெருமிதம் தெரிய வேண்டாமா? சாலையோரம் மரம் நடுவதைத் தவிர அவர் நடத்திக்கொடுத்த மஹாத்மியங்கள் யாவை? சரி. அது பழங்காலம். இன்றைய நிலைமைக்கு வருவோம்.
மக்கள் ஆட்சி, குடியரசு, ஜனநாயகம் என்ற சொற்தொடர்கள் மக்களின் ஆளுமை, நிர்வாகம், தலைமை பொறுப்பு ஆகியவற்றை சுட்டினாலும், அவை நேரிடையாக நடப்பதில்லை. அது இயலாத காரியம். எனவே தேர்தல், பிரிதிநிதிகள், சட்டசபை, அமைச்சரவை, முதல்வர்/பிரதமர் என்று எல்லாம் அமைப்புகள் நிறுவப்படுகின்றன. அரசியல் சாஸனம் என்று ஒரு மக்களாட்சி கையேடு வழித்துணையாக உதவுகிறது. இந்த பின்னணியில் ஒவ்வொரு பிரஜையும், பிரிதிநிதியை பொறுக்கி எடுக்கும்போது வரலாறு (நிறையும்,குறையும்) படைக்கிறான்/ள். மூன்று உதாரணங்கள் – பெருந்தலைவர் கே.காமராஜ் அவர்களின் தகுதியை பற்றி மக்களிடையை ஐயம் ஒன்றும் இல்லை. ஆனால், தேர்தலில், முன்பின் அறியாதப்பட சீனிவாசன் என்ற இளைஞர் தேர்தலில் அவரை கெலித்தார்; இந்தியாவின் மனசாட்சியாகத் திகழ்ந்த அண்ணல் காந்தி ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை; தேர்தலில் களங்கத்தின் மறு பெயராக அமைந்து விட்டது திருமங்கலம் என்ற ஊர்.  இந்த மூன்று வரலாறுகளும் ஜனத்தொகையின் செயல்களையும், பலாபலன்களையும் பிரதிபலிக்கின்றன.
தற்கால இளைஞர் சமுதாயம் நாளைய தலைவர்கள். பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகப்படிப்புகள் அவர்களின் அறிவை பெருக்கி, சிந்தனையை வளர்த்து, தாரதம்யம் பகுத்து, ஜனநாயகப் பணிகளில், வாக்காளராகவும், தேர்தலில் போட்டியிடும் நபர்களாகவும், பிரதிநிதிகளாகவும், ஆட்சி நிர்வாகம் செய்பவர்களாகவும் செயல்பட உதவும் என்றாலும், அவரவர் தொழில்/ஊழியம்/ மேற்பார்வை/ முதலாளித்துவம் ஆகிய சுய முன்னேற்றத்துக்கு உதவும் என்றாலும், அவை  வாழ்வியல் அனுபவத்திற்கு அடுத்த படி தான் உதவும். கல்வியும் வேண்டும். வாழ்க்கைப் பாடங்களும் வேண்டும். அதனால் தான் குமாஸ்தா வேலைக்கு கல்வித்தகுதி வரையறை விதிக்கப்பட்டாலும், ஜனநாயக கடமைகள் ஆற்ற வயது ஒன்று தான் வரையறை – வாக்காளரிலிருந்து பிரதமர் வரை. கடந்த 65 வருடங்களாக இந்திய குடியரசின் வரலாறு தந்து வரும் படிப்பினைகளை – நமது அரசியல் சாஸன பரிபாலனம், நிர்வாகப்பிரிவுகள், அவற்றின் சுதந்திரம், இணைந்து செயல்படுவது, திட்டங்கள், சிக்கல்கள், தீர்வுகள், சாதனைகள், பலவீனங்க, மர்மங்கள், ஊழல்கள் என்ற பற்பல சக்கரங்களை, அக்கு வேறு, ஆணி வேறு என பிரித்துப்போட்டு அலசி, அவற்றின் வரலாற்றை பிரஜைகள் யாவரும் உன்னிப்பாகப் படித்துத் தெளிவு பெறாவிடின், ஜனநாயகம் அம்பேல்; சட்டத்தின் உன்னதம், அபாயத்தில்; நிர்வாகத்திறன் இழப்பு; சமுதாய பின்னணி. இவையெல்லாம் உத்தரவாதம். யதேச்சதிகாரம் தலையெடுக்கும். தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆவான்.
தேவையா?
இன்னம்பூரான்
பிரசுரம் & நன்றி: http://www.atheetham.com/?p=4495

Thursday, February 28, 2013

தேசாபிமானத்தில் தலை சிறந்தவரும், மனித நேய பண்பாளரும், நமது முதல் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேரு ‘சட்’ என்று சினந்து, அதை உடனே மறந்துவிடும் முன்கோபி என்றாலும், அவருடைய கள்ளமில்லா குழந்தை மனதும், கலையார்வமும், வசீகர புன்னகையும் உலக பிரசித்தம். அவரை அடிக்கடி தரிசித்திருக்கிறேன். அவருடைய முகாரவிந்தத்தில் பிரசன்னமான சந்தோஷத்தையும், சோகத்தால் அது இருண்டு போனதையும் பார்த்திருக்கிறேன். ஆவடி காங்கிரசுக்கு வந்திருந்த போது, முண்டியடித்தக் கூட்டம் என்றாலும், எப்படியோ நானும், என் தந்தையும் மேடைக்கு அருகில் இருந்தோம். உரையாற்ற எழுந்த நேருவின் முகத்தில் ஒரு கோபரேகை ஓடியது. அவருடைய கண்ணாடியை காணவில்லை. சாளேஸ்வரம் தானே. மற்றவர்களின் கண்ணாடி உதவலாம். சர்தார் படேல், மெளலானா ஆசாத், ராஜாஜி எல்லாரும் அவரவர் கண்ணாடியை தந்தாலும், ஒன்றும் உதவவில்லை. கோபம் கொப்பளிக்க, குழந்தை மாதிரி அடம் பிடித்தார். பஞ்சுத்திண்டுகளைக்கூட தூக்கி அடித்தார். சில நிமிட டென்ஷனுக்குப் பிறகு, தன்னுடைய    இடது பக்க ஜேபிலிருந்து கண்ணாடியை எடுத்த அவருடைய முகத்தில் ஊரையே மயக்கும் ஒரு அசட்டுச்சிரிப்பு. அது ஒரு பிரசன்னம். பல வருடங்கள் கழிந்த பின், எனக்கு ராணுவ அமைச்சரகத்தில் ஊழியம். சைனா யுத்தம். வீ.கே.கிருஷ்ண மேனன் ராணுவ அமைச்சர். அவர் மீது யாவருக்கும் அதிருப்தி, நேருவைத் தவிர. அவருடைய ராஜிநாமா இன்றியமையாததாக ஆகிவிட்டது. வீ.கே.கிருஷ்ண மேனனை கூப்பிட்டனுப்பாமல், நாகரீகம் கருதி, அவரே வீ.கே.கிருஷ்ண மேனனுடைய அறைக்குப் போகும் போது, நான் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தேன். நேருவின் முகத்தில் சோகம் அப்பியிருந்தது.  அந்த காலகட்டத்தில், அவருடைய நண்பரும், அரசியல் எதிராளியாகவும் ஆகி விட்ட ராம் மனோஹர் லோஹியா அவர்கள், நேருவின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, நேருவை கடுமையாக தாக்கினார். அந்த விவாதத்தை கவனித்து எங்கள் அமைச்சரகத்துக்கு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டதால், நான் உன்னிப்பாக அதை கவனித்தேன். நேருவின் நெற்றியில் சுருக்கங்கள்; தாக்குதல் எல்லை மீறிப்போகும்போது முகம் சுளித்தது. சில சொற்கள் வேதனை கலந்த மென்சிரிப்பை உணர்த்தின. அகத்தின் அழகு முகம். சிறிது காலத்திற்கு பிறகு, ராம் மனோஹர் லோஹியா  கைது செய்யப்பட்டார். ஜெயிலில் இருக்கும் போது அவருக்கு பிறந்த நாள். வாழ்த்துக்களுடன், ஒரு மாம்பழக்கூடை வந்தது பரிசாக. அனுப்பியது நேரு. நேருவை பற்றி ஒரு வரி மட்டும் தான் எழுத நினைத்தேன், ஒரு பீடிகையாக. ஆனால் ஒரு பத்தி படிந்து விட்டது.

“மேடாக அமைந்துள்ள உமது நெற்றியையும், அது தெரியப்படுத்தும் உமது மேதையையும் வருணிக்க ஒரு கவிஞரின் கற்பனையூற்று வேண்டுமையா. வாழ்வியல் நாகரீகத்துக்கு அடித்தளமாகிய மானிடத்தின் உன்னத இலக்குகளை முன்கொணரும் புருஷோத்தமன் ஒருவரை பற்றி என் மனதில் ஒரு கனவு உண்டு. அதை உம்மிடம் நான் உணருகிறேன்”

~ நேருவை பற்றி ஹெலென் கெல்லர் (அவருக்கு ப் பார்வை கிடையாது; காது கேட்காது; வாய் பேசாது. எல்லாம் விரல் நுனி தான்.)

ஹெலென் கெல்லர் (June 27, 1880 – June 1, 1968 ) ஒரு சாதாரண சராசரி பிறவி. அவரது வாழ்க்கை அபூர்வமானது. பெற்றோர்களும் சராசரி அலபாமா (அமெரிக்கா) பிரஜைகள். பிரச்னைகளை எதிர்நோக்கி, இன்னல்களுக்கு எதிர்நீச்சலடித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தன்மை அவர்களிடம் இருந்தது. இரண்டு வயதுக்குள், இன்றும் இனம் காண இயலாத, காய்ச்சல் ஒன்று, அவருடைய கண்பார்வையையும், செவியின் செயலையும் பறித்தது. அதனால், பேச்சும் வரவில்லை. இயலாமையினால் அவளுடைய அடம், பிடிவாதம், படுத்தல் எல்லாம் உச்சகட்டம். பிரபல ரேட்க்ளிஃப் காலேஜில் படித்து பீ.ஏ. பட்டம் பெற்ற முதல் மாற்று திறனாளி. செவி/வாய் திறனற்றவர்களுக்கு முதல் பள்ளி துவக்கியவர், இவரது மூதாதை ஒருவர் என்பது குறிப்படத்தக்கது. புவியெங்கும் புகழப்பட்ட எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், சமூக ஊழியராகவும், தொழிலாளிகள், சமுதாய ஏற்ற தாழ்வுகளை குறைப்பது, பெண்களின் நலம் ஆகியவற்றுக்கு உழைத்த ஹெலன் கெல்லர், உலகத்தை தன் உள்ளங்கையாக பாவித்து, அலட்டிக்கொள்ளாமல் சுற்றுப்பயணம் செய்தவர். தயங்காமல் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர். அவரது சுயவரலாற்றை 22 வயதிலேயே பதித்த இவர் எழுதிய நூல்கள் 12. அமெரிக்காவின் ‘சுதந்திர விருது’ மெடல் மிகவும் போற்றத்தக்கது. 1964ல், ஜனாதிபதி ஜான்ஸன், அதை இவருக்கு அளித்து கெளரவப்படுத்தினார். அடுத்த வருடமே தேசீய பெண்ணரசிகள் மன்றத்தில் அமர்வு கொடுக்கப்பட்டது. அலபாமாவும் 1971ல் அவரை கெளரவித்தது. அவரை பற்றி உசாத்துணைகளில் படித்துக்கொள்ளலாம். நான் அவரை பற்றி கடைசியில் ஒரு வரி சொல்லுவேன். மற்றபடி வந்த விஷயம் வேறு.

வாடி வதங்கிய அழுகும் கத்திரிக்காயாக விழுந்து கிடக்காமல், ஹெலென் கெல்லர் ஒரு புதுமைப்பெண்ணாக உலகம் சுற்றியது பின்னணி: 1. அமெரிக்க சமுதாயத்தின் எதிர்நீச்சல் மனப்பான்மை; 2. மனித நேயத்தின் பன்முகம்; 3. ‘முயற்சி திருவினையாகும்’ என்ற கோட்பாடு; 4. நன்மை செய்வதயே நாடும் நண்பர்கள் எனலாம். இந்த சமுதாயபண்புகள் வந்த தினம் தான், இந்தியாவுக்கு பூரண சுதந்திரம்.

குறிப்பாக சொல்லப்போனால், இவர்கள் நிவாரணம் தேடிய வகையை போற்றவேண்டும். சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஒரு வரலாற்றை படித்த இவரது அன்னை, இவரை, ஆறு வயதில், பால்டிமோர் டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் செல்ல, அவர் டெலிஃபோன் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் அவர்களிடம் அனுப்ப, அவர் தன் பங்கை மட்டும் செய்வதுடன் நிற்காமல், கண்ணொளி நிபுணர் மைக்கேல் அனக்னோஸ் அவர்களிடன் அனுப்ப, அவர் தன் மாணவி ஆன் சல்லிவனை இவருக்கு அன்றாட ஆசிரியராக நியமிக்கிறார். சங்கிலித்தொடர் போல் இந்த நற்பணிகள் அமைந்தது ஒரு கொடுப்பினை. அந்த ஆன் சல்லிவனின் அன்றாட தொடர்பு 50 வருடங்கள் அமலில் இருந்தது. அது ஒரு தெய்வ சங்கல்பம் என்று தான் சொல்ல வேண்டும்.

எப்படி என்று கேட்கிறீர்களா? ஹெலன் கெல்லரின் திறன் ஆற்றுப்பெருக்குப்போல் கூடி வருவது கண்டு, அவருக்குக் கிருத்துவ மதத்தை போதிக்க ஒரு பங்குத்தந்தை வந்து யேசு கிருஸ்து பிரானை பற்றியும் விவிலயத்தைப் பற்றியும் ஆன்மீகப்போக்கில் பேசுகிறார். அதை கேட்ட நம் ஹெலன் கெல்லரின் விளக்கம், மெய்யுணர்வின் உச்சகட்டம். பக்தி இலக்கியத்தின் சூத்ரம். ஞானமார்க்கத்தின் ராஜ பாட்டை.

“அவர் இருப்பது நான் என்றோ புரிந்து கொண்டது தான். அவருடைய பெயர் தான் எனக்குத் தெரியாது.” (“I always knew He was there, but I didn’t know His name!}  நான் உங்களிடம் கேட்பது: அவருடைய பெயர் கிருஷ்ணனா? கிருஸ்துவா?
இனி எழுத என்ன இருக்கிறது?
(தொடரும்)
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி

உசாத்துணை:
இதை பிரசுரம் செய்த அதீதம் இதழுக்கு நன்றி:http://www.atheetham.com/?p=4018

மேலெழுத்து

மேலெழுத்து

“உமது மூளையில் அடுக்கடுக்காகப் படிந்திருக்கும் கருத்துக்கள், கற்பனைகள், சித்திரங்கள், உணர்ச்சிகள், நினைவலைகள் எல்லாம் மறையவே இல்லை; அவை உறைகின்றன. காய்ச்சலடித்தாலோ, உயிர் பிரியும் தருவாயிலோ அவை தலை தூக்கலாம்…நம் தலைக்குள் ஒரு இயல்பான, வலிமையான மேலெழுத்து இருக்கிறது. சாவி கொடுக்கணும். அவ்வளவு தான்.”
~தாமஸ் டெ க்வின்சி  (1845ல்)
தஞ்சை பெரிய கோயிலின் மூன்றாவது அடுக்கில் உள்ள பரதநாட்டிய சிற்பங்களாயினும் சரி, ஒன்றன் மீது ஒன்றாக வரையப்பட்ட நாயக்கர் கால/மராட்டிய ஓவியங்களாயினும் சரி, திரிவேணி சங்கமத்தில் படிப்படியாக அமைந்திருக்கும் (ஆய்வுகள் நிறைபெறவில்லை) பல காலகட்டங்களின் குடியிருப்புகளும் சரி, 1920ல் காணப்பட்ட தென்னமெரிக்க புதிர் நிறைந்த ஓவியங்களை நாற்பது வருடங்கள் கழிந்தபின் ஆதாரமொன்றுமில்லாமல் டைனிக்கின் என்பரின் ‘தேவ ரதம்’ என்ற நூலில் கூறப்பட்டதை வேதவாக்காக குழுமங்களில் விவாதிக்கப்பட்ட சின்னங்களாயினும் சரி, மனிதனின் அபார கற்பனாசக்தியின் பரிமாணங்களில் இந்த ‘மேலெழுத்தும்’ (palimsest) ஒன்று.
இந்த தொடரின் முதல் நான்கு பகுதிகளில் paradigm shift பற்றி நம்பிக்கையின் தும்பிக்கை என்று வர்ணித்து எழுதியதை சிலர் வரவேற்றார்கள். அம்மாதிரியே, நாம் ‘அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள் , முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட’  இந்த ‘மேலெழுத்தை’யும் ஒரு சிந்தனையூற்றாக அணுகவேண்டும். அதனுடைய அபாரம் அப்போது நன்றாகவே புரியும். அவரவருக்கு அது ஒரு கைவிளக்காக பயன்படும் ஆற்றல் அதற்கு உண்டு. நினைவாற்றலை கூட்ட உதவும்; வரலாறு படிக்க உதவும்; புவிவியல் படிக்க உதவும். ஏன். ஓலைச்சுவடி, கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், நாணயங்கள் படிக்கக்கூட உதவும்.
17வது நூற்றாண்டிலிருந்து ஆங்கில மொழியின் புழக்கத்தில் இருக்கும் இந்த சொல்லை, ‘அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள் , முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட’ படைப்பு என்று மட்டும் சொல்லி எளிதில் விளக்கமுடியாது.  அதனுடைய உட்கருத்து ஆழமானது; அதனுடைய தாக்கம் வலிமை மிகுந்தது. ராபர்ட் ஃபுல்ஃபோர்ட் சொல்வது போல், காலரிட்ஜ் தன் நினைவாற்றலலிருந்து மீட்க நினைக்கும் ஞாபகம் ஒரு பரிமாணம்; டாக்டர் வாட்ஸனும் ஷெர்லாக் ஹோம்ஸும், ஒரு பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு, அழிக்கப்பட்ட மூலப்பொருளை படித்து மர்மங்களை அவிழ்க்க முயல்வது ஒரு பரிமாணம்; கொடுங்கோல் ஆட்சியில் யதேச்சாதிகாரி மக்களின் நினைவாற்றலை ஒழித்துக்கட்டுவதை பற்றி, ‘வரலாறே ஒரு மேலெழுத்து தான். அழித்து,‘பளிச்’ என்று துடைத்து வைத்து, வேண்டப்பட்டபோது, இஷ்டப்படி எழுதி வைத்துக்கொள்வது தானே வரலாறு’ என்று ஜார்ஜ் ஆர்வெல் கூறியதும் மற்றொரு பரிமாணம்.
அதா அன்று. சொல்லும், பொருளும், அவை உரைக்கும் கருத்தும், கருத்தின் ஆழமும், அங்கு ஜனிக்கும் சிந்தனையும், அதனுடைய சஞ்சாரமும் தனிமனிதனுக்கு கலங்கரை விளக்கு. நினைவாற்றலை வளர்க்க உதவும்; சிற்பமோ, புவிவியலோ, கலையுணர்வோ, கட்டிடக்கலையோ, இலக்கியமோ, கவிதையோ, எதுவாயினும் பேரெழுத்து ஆகிய ‘மேலெழுத்தின்’ தாக்கம், அங்கு, இருக்கத்தான் செய்யும். அதனால், சமுதாயத்தின் சீர்திருத்தம், முன்னேற்றம் எல்லாவற்றிலும், மேலெழுத்து ஆளுமை புரிகிறது.
‘மேலெழுத்து’ ஒன்றின் வரலாற்றை கவனிப்போம். ‘ஆர்க்கிமிடீஸ் மேலெழுத்து’ என்ற நூல் சமீபத்தில் பிரசுரம் ஆனது. 2300 ஆண்டுகளுக்கு முன் பிரபலமான விஞ்ஞானியாக போற்றப்பட்ட ஆர்க்கிமிடீஸ் எழுதிய அறிவியல் கட்டுரைகளில் பல காணாமல் போயின. ( நீங்க ஒண்ணு! பழைய சுதேசமித்திரன் இதழ்களை காணவில்லை.) ஆனால், ஆங்காங்கே, நகல்கள் தென்படலாம். ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, ஒருவர் படியெடுத்ததில், அதுவரை காணக்கிடைக்காத இரு நூல்கள் கிடைத்தன. அவை எல்லாம் கான்ஸ்டாண்டினோபில் நகரத்தில் இருந்தன. அடுத்த நூற்றாண்டிலேயே, அவற்றை அழித்து விட்டு, அவற்றின் மேல் ஒரு பிரார்த்தனை நூல் எழுதப்பட்டது. எழுநூறு வருடங்களுக்கு பிறகு, 1906ல் யோவான் லுட்விக் ஹீபெர்க் என்ற ஆய்வாளர், அந்த நூலை பிரித்து, மூலநூல் கட்டுரைகளை படித்தார். ஆர்க்கிமிடீஸ் பற்றிய வரலாறு மேன்மைப்படுத்தப்பட்டது. அத்துடன் கதை முடியவில்லை. பல கைகள் மாறிய அந்த பிரார்த்தனை நூலை 1998ல் ஒருவர் பத்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். வங்கி லாக்கரில் போடாமல், பால்டிமோரில் உள்ள வால்டர் ஆர்ட்ஸ் ம்யூசியத்தில் பத்திரப்படுத்தினார்.  அங்கு 12 வருடங்களாக இடை விடாமல் நடந்த ஆய்வின் நற்பயனாக, பல அருமையான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சிந்தனையூற்று இருக்கிறதே, அதில் எத்தனை ‘மேலெழுத்துக்கள்’ வாசம் செய்கின்றன தெரியுமா? தாமஸ் டெ க்வின்சி என்ற படைப்பாளர் 1845ல் எடின்பரோ மாகஸைன் என்ற இதழில், ‘மூளையின் பேரெழுத்து என்ற நீண்ட கட்டுரை வடித்தார். அதில் மனிதனின் நினைவாற்றல் நாம் நினைக்கும் அளவுக்குள் இல்லை; அதை விட பல மடங்கு அதிகம் என்றார். அதிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் ஆக பதிவு செய்துள்ளேன். சிந்திக்க, சிந்திக்க, இதை பற்றி பல கட்டுரைகள் எழுத உந்துகிறது, ஆர்வம். எனினும், வாசகர்களுக்கு அலுப்பு தட்டக்கூடாது அல்லவா?
புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன்.
இன்னம்பூரான்
பி.கு.
ராபெர்ட் ஃபுல்ஃபோர்ட் நேஷனல் போஸ்ட் என்ற இதழில் சில நாட்கள் முன்னால் எழுதியது படித்தது, என் சிந்தனையையும் மூட்டி விட்டது. அவருக்கு நன்றி.

இன்னம்பூரான் பக்கம் -12
சில சமயங்களில் எங்கிருந்தோ எப்பவோ வந்த சிந்தனைகளை மனம் அசை போடுகிறது, நம்மிடம் சம்மதம் கேட்காமலே! மற்றும் சில சமயங்களில் இன்று வந்து கண் முன் நிற்கும் ஒரு கருத்து, நம்மை ஐம்பது வருடங்களுக்கு முந்திய நினைவு ஒன்றுக்குக் கட்டியம் கூறுகிறது. வித்யா சாகர் என்ற குவைட் நண்பரொருவர் எழுதிய கவிதை ஒன்றில் பல சிந்தனைகளை முன்வைத்தாலும், அதிலிலுள்ள, ‘... நான்; நானாகயிருக்கவே முயன்றுக்கொண்டுள்ளேன்!!..’ என்ற ஒரு வரி என்னை அந்தக்காலத்தில் புகழும், இகழும் அளவு கடந்து சம்பாதித்துக்கொண்ட  ஆஸ்கார் ஓயில்ட் என்ற ஆங்கில படைப்பாளரிடம் இழுத்துச்சென்றது. அவர் ஒரு வினோத மனிதர். படைப்பாற்றலுக்குப் பஞ்சமில்லை; வம்பு தும்புக்கும் பஞ்சமில்லை. ஜகத்தைப்புரட்டும் உண்மை வாதங்களை அனாயசமாக உதிர்க்கும் அவருடைய ஆற்றலே அலாதி! எனக்கு நினைவில் வந்த அவருடைய மேற்கோள்: “Be yourself; everyone else is already taken.”~ Oscar Wilde.”
‘நீ நீயாகவே இரு. வேறு இடம் காலியில்லை.’ என்று ஏழு சொற்களில் ஒரு வாழ்வியல் தத்துவ விசாரணையையே ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலேயே அவர் துவக்கியதால், ‘ நானாகயிருக்கவே முயன்றால் தான் முடியுமா? / முயன்றால் வெற்றி கிட்டுமா?‘என்ற கேள்விகளுக்கு அவர் ஏற்கனவே விடை அளித்துவிட்டதாகத் தோன்றுகிறது. இனி ‘நான்’ பேசுகிறேன். நானாக இருப்பது இயல்பு, எளிது, தான்தோன்றி. மீன்குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா? என்பது பொருத்தமான உவமை.  ஆனால், பிரச்னை வேறு. இந்த ‘நான்’ யார்? தெளிவு காண இரு அணுகுமுறைகள்.
  1. யதார்த்தம். உள்ளது உள்ளபடி. கண்டதே காட்சி; கொண்டதே கோலம். முன் கோபம், பெண்ணாசை, கருமித்தனம் போன்றவையும் (அவற்றை ‘நான்’ பலவீனம் என்று நாமகரணம் செய்யாததை நோக்குக.) மனித நேயம், கடமை, நேர்மை போன்றவையும், ஒவ்வொன்றாகப் பார்க்கும் பொழுது, சிலரிடம் அதிகமாகவும், சிலரிடம் குறைவாகவும், பற்பல வகைகளில் காணக்கிடைக்கின்றன. அவரவர் விருப்பம் போல் இயங்க சமுதாயம் அனுமதிப்பதில்லை. சிறுவயதிலிருந்தே மூளைச்சலவை நடந்து வருவதால், நேற்றைய ‘நான்’ இன்றைய ‘நான்’ அல்ல; இன்றைய ‘நான்’ நாளை காணாமல்  போகலாம். 
இரண்டாவது சிக்கலான அணுகுமுறைக்குப் போகும் முன், சுயமுன்னேற்றம் பற்றி பல நூல்களை எழுதியை மைக் ராபின்ஸ் என்பவர் ‘Be yourself; everyone else is already taken.’ என்ற தலைப்பில் எழுதிய ஜனரஞ்சக புத்தகத்தின் சாராம்சத்தைப் பார்ப்போம். 
  1. சுயநம்பிக்கையுடன் தன் கருத்தை வெளியிடுக.
  2. அச்சம் தவிர். நழுவாமல் அதை எதிர்கொள்ளவேண்டும்.
  3. பிரச்னைகள் வந்தால் அவற்றை நேரடியாக சமாளிக்க வேண்டும். தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  4. தனக்கு வேண்டியதை தேடுவதிலும், அடைவதிலும் எதிர்நீச்சல் போட தயங்காதே.
  5. வாழ்வியல் உறவுகள், நட்பு, ஊழியம் எல்லாவற்றுடன் இணைந்து செயல் படும் போது, தன்னுடைய சுதந்திரத்தை இழக்காதே.
இந்த ஐந்து சூத்திரங்களுக்கும் நடைமுறை பாடங்கள், உவமான உவமேயங்கள், பயிற்சிகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. எனினும், அவரது பட்டியலை கவனமுடன் படித்த பின், நிறைவு காண முடியவில்லை. சிக்கல் தீரவில்லை. விடை தென்படவில்லை. முதலில், அவருடைய பட்டியலை காண்போம்.
  • தடம் மாறாதே;
  • ஆணையிடாதே;
  • தன்னை புரிந்து கொள்;
  • பயம் வரும். அதை மாற்றிக்கொள்;
  • தன்னிலை கூறுக;
  • துணிவுடன் செப்பு;
  • சுயமதிப்பைப் போற்று.
சாராம்சம் மட்டும் அளித்து நூல் விமர்சனம் செய்வது என் விருப்பமல்ல. உசாத்துணையில் கொடுத்திருக்கும் அந்த நூல் கணக்கற்ற மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் உதவியிருக்கிறது. காரணமில்லாமல் அவருக்கு பல விசிறிகள் வலம் வரவில்லை. இருந்தாலும் அந்த நூல் “Be yourself; everyone else is already taken.”~ Oscar Wilde.” என்ற ஆஸ்கார் ஒயில்டின் நிகரற்ற பொன் வாக்குக்கு பொருத்தமான உரை விளக்கமாக அமையவில்லை. 
நூலாசிரியர் கொடுத்தத் தலைப்பின் முழு உருவம்: ‘Be yourself; everyone else is already taken: Transform Your Life with the Power of Authenticity’  அதாவது: நிஜ வாழ்க்கை வாழ கற்றுக்கொள். அந்த சொல்லை அவர் பலமுறை உபயோகித்திருந்தாலும், நிஜத்தின் நிஜ முகம் கண்டு அறிந்து, புரிந்து கொண்டு தனது வாழ்வியலை நிர்ணயத்துக்கொள்ள நாம் வேறு இடம் செல்ல வேண்டும். ஒரு ஃப்ளேஷ்பேக்: கல்லூரியில் படிக்கும் போது காசுக்குப் பஞ்சமில்லாத நாள் கிடையாது. சில ‘அரிய பெரிய’ தியாகங்கள் (பட்டினி தான்; வேறு என்ன?) செய்து சாமுவேல் ஸ்மைல்ஸ் அவர்களின் ‘சுய உதவி’ என்ற நூலை வாங்கினேன். காலின்ஸ் பதிப்பு என்று ஞாபகம். அதன் முதல் பக்கத்தில் இந்த Authenticity பற்றி சில மேற்கோள்களை எழுதி வைத்துக்கொண்டேன். அது என்னை படுத்திய பாடு பற்றி, இன்னம்பூரான் பக்கம் -13ல் எழுதுகிறேன். இந்த கட்டுரை நீண்டு விட்டது.
இன்னம்பூரான்
உசாத்துணை:

‘வந்தாரே அமானுஷ்யன்!

டிசெம்பர் 7, 2012

அதீதர்களே!

அடுத்த வாரம் டிசம்பர் 11 அன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அவர்களின் ஜன்மதினம். அதை பற்றி நினைத்த மாத்திரம் நான் வலுக்கட்டாயமாக நாம் ‘வீர சுதந்திரம்’ பெறுவதற்கு முன்னால் இருந்த கால கட்டத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். 1930-43 களில் பாரதியாரின் குடியிருப்பு, மாணவர்கள் நாவில் மட்டுமே. அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். எளிதில் படிக்கக்கிடைக்காது. சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. 

நான் சொல்லப்போவது இன்றைய சூழ்நிலையில் எடுபடாமல் போகலாம். பாரதி போற்றியதெல்லாம் அகக்கண்ணுக்கும், புறக்கண்ணுக்கும் புலப்படவில்லை என்பார்கள் இன்றைய தேசீய தலைவர்கள் என்று ஊடகங்களில் பெரிதும் பேசப்படுகிறது. கரி, வைரம், நீர், ஆகாயம், மலை, இரும்பு, ஏழ்மை எல்லாவற்றிலும் துட்டு பார்க்கிறார்களாம். இந்திய தணிக்கைத்துறை கரடியாக கத்துகிறது. நான் அவ்வப்பொழுது நினைத்துக்கொள்வது உண்டு ~ மஹாகவி இதையெல்லாம் பார்த்தால் என்ன சொல்வார் என்று? என்ன சொல்வார்?
‘என்று தணியும் இந்த பாழுங்காசுக்கு வந்த மோகம்?’ என்று பாடுவார்.

சில வருடங்கள் முன்னால் தஞ்சை மேலராஜவீதியில் இருக்கும் கொங்கணேஸ்வரர் பாடசாலைக்கு விஜயம் செய்தேன். தலைமை ஆசிரியர் எடுத்துக்கொடுத்த என் மூன்றாம் வகுப்பு பற்றிய பதிவின் நகலை கொடுத்த போது மனம் அலை பாய்ந்தது. எனக்கு பாலு சார் தான் எல்லாம் என்றேன். நான் அவருடைய மகன் என்றார், அருகில் இருந்த நண்பர். அந்த பாலு சார் சொல்லிக்கொடுத்த படி திலகர் திடலில் நான் டிசெம்பர் 11, 1941 அன்று பக்திப்பரவசத்துடன் ஆற்றிய சொற்மாரி கேட்டு ஒரு பெரியவர் சபையிலேயே என்னை கட்டிக்கொண்டு அழுதார். பரிசாக கிடைத்த நூல்கள் இரண்டு: பாரதியாரின் கதைக்கொத்தை யாரோ கொத்திக்கொண்டு போய்விட்டார்கள். என் வாழ்க்கையை வகுத்த பகவத் கீதையை என் பெண் பத்திரமாக வைத்திருக்கிறாள். கலோனிய அரசின் உளவுத்துறை குறிப்பு எடுத்துக்கொண்டதாம். எனக்கு ஒரே பெருமை. அத்தை தான் திருஷ்டி கழித்து விட்டு, என்னை மறைத்து வைத்தாள். இதெயெல்லாம் பாடசாலையின் மாணவர்களுக்கு சொன்னபோது எனக்கு அதீத பெருமை!
ஐந்து வருடங்களுக்குப்பிறகு உசிலம்பட்டி ஜில்லா போர்ட் கள்ளர் ரெக்ளமேஷன் பள்ளி. எந்த கணக்கில் என்னை மாணவர் தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள் என்று அறியேன். ஆனால், நான்தான் சட்டாம்பிள்ளை! தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் அண்டை வீடு. குடும்ப நண்பர். நான் அவருக்கு செல்லம் வேறு. ஒரு நாள் காலை பிரார்த்தனையில் ‘வந்தே மாதரம்’ பாடச்சொன்னேன். ஒச்சத்தேவனும் பாடினான். தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டு நின்றார். ஆக்ஷேபிக்கவில்லை. மறுநாள் தற்காலிக பதவி நீக்கம். திரு. சிவசுப்ரமண்ய ஐயருக்கு தற்காலிக பதவி உயர்வு. நாங்கள் ஹர்த்தால் செய்தோம். ஐயரோ அப்பாவுக்கு ஆப்த நண்பர். அவர் வந்து கேட்டும் நாங்கள் ஹர்த்தாலை வாபஸ் வாங்கவில்லை, ஜனாப் அவர்கள் பதவிக்குத் திரும்பும் வரை. ஏதோ ஒரு மாதிரியாக என்னை கைது செய்து, உடனுக்குடனே விட்டும் விட்டார்கள்.
இதெல்லாம் தம்மாத்தூண்டு சமாச்சாரங்கள். மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்  ஒரு நாள் தமிழ்த்தென்றல். திரு.வி.க. அவர்களின் தேசபக்தன் இதழ் அலுவலகத்துக்கு வந்தார். உதவி ஆசிரியராக இருந்த பரலி.சு.நெல்லையப்பர் எல்லாரையையும் பக்குவமாக தயார் செய்து வைத்திருந்தார். பாரதி விஜயம் பற்றி மற்றொரு உதவி ஆசிரியரான திரு.வெ.சாமிநாத சர்மா எழுதியிருந்ததை ஒரு நூலுக்காக ஆங்கிலப்படித்தினேன். அதனுடைய தமிழாக்கத்தை யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;...’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி...’ என்று குரு வந்தனம் செய்து, 
‘வந்தாரே அமானுஷ்யன்; 
சட்டையில் காலரில்லை; 
ஆனா டை கட்டி தொங்குதடா, 
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு, 
தோளின் மேல் சவாரி, 
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே. 
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல. 
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு. 
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே! 
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு? 
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா? 
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு? 
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா; 
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி! 
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி. 
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, விடை பெறுகிறேன். உங்கள் யாவரையும் அந்த ஆதிபராசக்தியின் திருவருள் ரக்ஷிக்கட்டும்.
இன்னம்பூரான்
07 12 2012 
சித்திரத்துக்கு நன்றி: http://bharathiyar.gratussolutions.com/sites/all/themes/bharathiyar/images/bharathiar1.jpg

மின்வேலி

மின்வேலி
அண்ணல் காந்தியும், தேசாபிமானி மோதிலாலும் கொஞ்சிய குழவி; தந்தை ஜவஹரின் தொடர்மடல்களில் சித்தரிக்கப்பட்ட பாரதத்தை கண்டு வியந்த சிறுமி; அவருடைய இல்லத்தை திறம்பட நிர்வஹித்தும், அருமையாக விருந்தோம்பியும் நற்பெயர் பெற்ற திருமகள்; அமைதி காத்த தகவல் துறை அமைச்சர்; நாட்டை ஆட்டிப்படைத்த பிரதமர்; பதவி இழந்தாலும், பவிசு இழக்காத தலைவி. அது தான் இந்திரா காந்தி. அவருக்கு நிர்வாகத்திறன், ஆளுமை, கட்டி மேய்ப்பது, கறார் தீர்மானங்கள், மின்னலடி தாக்குதல் ஆகியவை கை வந்தக் கலை; அழுச்சாட்டியமும். இவருடைய அரசியல் விரோதி சரண் சிங் பிரதமராக இருந்த காலத்தில், போலீஸ் இவரை கைது செய்ய வருகிறார்கள். இவரோ காரின் பான்னெட் மீது ஏறி அமர்ந்து கொண்டு, ‘முடிந்தால் கைது செய்’ என்கிறார்! இருதலை கொள்ளியாக தவிக்கிறது போலீஸ். மனித வாழ்க்கையில் சில வாய்ப்புகளும், கொடுப்பினைகளும் மலரிதழ்களை கசக்கி, முட்புதரில் வீசி எறிந்து விடுகின்றன. ஏழு தலைமுறைக்கு அப்பன் விட்டு வைத்த சொத்தை ஒரே நாளில் சூது விளையாடி, மகன் இழந்து விடுகிறான். தந்தை கல்விக்கடல்; தனயனோ தற்குறி. ரோஷக்காரியின் மகள் வேசி! நீதியரசனின் மகன் சிறையில். இதையெல்லாம் பார்க்காமலா இருக்கிறோம்?
இந்திரா காந்தியின் கொடுப்பினை: பாலப்பருவத்திலேயே அரசிலயர்களின் அவலக்ஷணத்தை கண்கூடாகப் பார்க்கும் தருணங்கள்; பலரின் தனிமொழிகளையும், உரையாடல்களையும், தள்ளி நின்று கேட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்; அவர்கள் சொல்வதை செய்யாததையும், செய்ததை சொல்லாததையும் வைத்து அவர்களை எடை போடும் வாய்ப்பு. தாயை சிறுவயதில் இழந்த அபலையான இந்திராவின் தந்தையோ அரசியலில் மும்முரம்; பெண்ணுக்கு தனிமை தான் துணை. சிந்தனையும், சூழ்ச்சி செய்யும் திறனும் இந்திராவுக்கு வலுத்தன. கண்ணசைகளையும், சங்கேதங்களையும், நுட்பங்களையும் இனம் காணுவதில் பெண்ணினம் இணையற்றது. அந்த குணாதிசயம் இந்திராவுக்குக் கை கொடுத்தது. கூடப்பிறந்த பிடிவாதமும், துணிச்சலும், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கை வந்த கலைகளும், ஆணினத்தை அடி பணிய வைத்தன. தேவ்காந்த் பரூவா என்ற அசடு ‘இந்திரா தான் இந்தியா’ என்று எக்காளமிட்டது. பாபு ஜகஜீவன் ராமே அச்சத்தில், என்கிறார், குல்தீப் நய்யார். ஓடோடி வந்து உடுக்கு அடித்தனர், சித்தார்த் ஷங்கர் ராயும், வித்யா சரண் சுக்லாவும். பூம் பூம் மாடு, ஓம் மேஹ்தா. ஜக் மோஹன் போன்ற அதிகாரவர்க்கம் தலை வணங்கிற்று. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அகமது அடித்துப் பிடித்துக்கொண்டு கையொப்பமிட்டார். (அந்த கெஜட் பிரதி ஒன்று என்னிடம் உளது.) தடாலடிக்கு பிள்ளாண்டான் சஞ்சய்யும் அவனது கூஜாக்களும். இந்த ஆணடக்கம் பெரிய சாதனை. இந்திராவின் வாழ்க்கைப்பாடங்களும், குணாதிசயங்களும் ஒருசேர, வரலாற்றில் வேறெங்கும் புலப்படவில்லை. இந்த 1975 ~1977  இந்திய எமெர்ஜென்சிக்கு வித்து, உரம், பாசனம், வேளாண்மை எல்லாம் இந்திரா காந்தி அவர்களின் பின்னணி என்பது என் கருத்து.
ஒரு அனுபவம். இந்திய அரசின் அதிகாரமையம் டில்லியில் இருக்கும் தெற்கு அலங்கம் (சவுத் ப்ளாக்). நேருஜி காலத்திலேயே என் பணியின் காரணமாக, அதனுடைய சுரங்கப்பாதைகள்/ரேழிகள்/தாழ்வாரங்கள்/முற்றங்கள் எனக்கு தெரியும். அவரை அடிக்கடி பார்க்கமுடியும். ஒரு நாள், தப்புத்தவறி, இந்திரா காந்தியின் அறைக்கு அருகில் போய்விட்டேன். எங்கு பார்த்தாலும் துப்பாக்கி, ஈட்டி, வேல், கத்தி! என்னுடைய அனுமதிச்சீட்டு உயர் ரகம்; எனினும் அடித்துப்போட்டால், கேள்வி முறை இருந்திருக்காது. அதான் மின் வேலி. தலைப்பும் அதுவே!
என்ன நடந்தது:
  1. அவசர நிலை பிரகடனம், மட்டுறுத்தல், கைதுகள் ~ ஜூன் 25, 1975;
  1. அபகீர்த்தி மீஸா சட்டம் (The Maintenance of Internal Securitiy Act)~ ஆகஸ்ட் 5, 1975;
  1. பிரதமர் நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற அரசியல் சாஸனத்திற்கு 39வது திருத்தச்சட்டம் ~ செப்டம்பர் 26, 1975;
  2. போச்சு! எல்லாம் போச்சு!அரசியல் சாஸனம் அருளிய ஏழு அடிப்படை உரிமைகளும் பறி போயின ~ ஜனவரி 9, 1976;
  3. பொதுத்தேர்தல் ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது ~ ஃபெப்ரவரி 4, 1976;
  4. குடிமக்களின் அடிப்படை கடமை பட்டியல்:அரசியல் சாஸனத்திற்கு 42வது திருத்தச்சட்டம் ~ நவம்பர் 2, 1976;
  5. நாடாளும் மன்றம் கலைக்க்ப்பட்டது: ஜனவரி 18, 1977;
  6. எமெர்ஜென்சி வாபஸ்: மார்ச் 21, 1977;
  1. ஜனதா கட்சி வெற்றி: மார்ச் 22, 1977
ஜூன் 1977ல் நான் ஒரிசாவில் தணிக்கைத்துறையில் பணியிலிருந்தேன். அங்கு குறுநில ராணி (முதல்வர்) நந்தினி சத்பதி மினி-இந்திரா! கேட்கவேண்டாம், அடக்குமுறை! ஐ.ஏ.எஸ் நண்பர்கள் எங்களுடன் பேச பயந்தார்கள். அக்காலம், காலை ஏழு மணி ஆஃபீஸ். எனவே, உடனுக்கடி தெரிந்ததும் அல்ல; அதிகாரிகள், ஊழியர்கள், வணிகர், மக்கள், பிச்சைக்காரர்கள் எல்லாரும் சுதாரித்துக் கொண்டோம். உயிர் வெல்லமில்லையா? ஜார்ஜ் ஆர்வெல் சொன்னமாதிரி, அக்கா தான் செங்கோல், சிம்மாசனம்,சடாரி! தணிக்கைத்துறையாயினும், அரசு கட்டளைகளுக்கு கட்டுப்பட்டோம், சிறகொடிந்த அரசியல் சாஸனத்தின் ஷரத்துக்கள் படி. சத்தியமாகச்சொன்னால், வேலை நடந்தது;  தணிக்கைத்துறைக்கு மூல ஆவணங்கள் கொடுக்க வேண்டாம் என்று ஆணையிட்டதாக சொல்லிக்கொள்வார்கள், ஆடிட் செய்யப்போனால். அவர்கள் பாய்க்கு அடியில் புகுந்தால், நாங்கள் கோலத்துக்கு அடியில் புகுவோம். அதனால் எங்கள் வேலை தடைபட வில்லை. ஆனாலும், அரசியல் சாஸனம் அருளிய ஏழு அடிப்படை உரிமைகளும் ஜூன் 25, 1975 அன்றே பறி போயின என்பது வெள்ளிடை மலை.
நீதித்துறையும் தப்பவில்லை. அதிகாரம் அதீத காரம் தான்! ‘ஒரு நிரபராதியை போலீஸ் தீய எண்ணத்துடன் சுட்டுக்கொன்றாலும், கனம் கோர்ட்டாரால் ஒன்றும் செய்ய இயலாது என்ற பித்துப்பிடித்த அசுரவாதம் (அரசு வாதம்) வென்றது; ஹெ.ஆர்.கன்னா என்பவரை தவிர, நான்கு நீதிபதிகள் இந்த ‘பிணம் தின்னும் சாத்திரத்தை ஆதரித்தனர். அதர்மமான கட்டுப்பாடுகளை உதறிய உயர் நீதி மன்ற நீதிபதிகள், அங்குமிங்கும் தூக்கி யடிக்கப்பட்டனர். பழிக்குப் பழி! இதற்கு ஆசியளித்தது, உச்ச நீதிமன்றத்தின் தலைவர். சொல்வது திரு வீ.ஆர். கிருஷ்ணையர்.
சில வருடங்களுக்கு பிறகு ஓம் மேஹ்தாவை சந்திக்க நேர்ந்தது. எமெர்ஜென்சி பல் பிடுங்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றக்குழுத்தலைவர். அவரிடம் சில சந்தேக நிவாரணங்கள் செய்து கொள்ள நினைத்தேன். அக்காலம் சாலார்ஜங்க் ம்யூசியத்தின் அறக்கட்டளையின் உறுப்பினர் என்பதால், அதைக்காண விரும்பிய அவருடைய ஆசையை நிறைவு செய்ததால், கொஞ்சம் மனம் விட்டுப் பேச முடிந்தது. கொஞ்சம் இழுத்துப் பறித்த பின் ‘அச்சம்! அச்சம்! அச்சம்! என்பதே பேச்சு!’ என்ற பொருள்பட பேசினார். 
இந்த எமெர்ஜென்சி சமாச்சாரம் பெரிய விஷயம். ஒரே முச்சில் பல பக்கங்கள் எழுதி விடலாம். எனவே, இது ஒரு அறிமுகம் என்க. இன்று நடக்கும் விழிப்புணர்ச்சி போராட்டம் வேறு வகை. பின்னணியும் வேறு, முன்னணியும் வேறு. நல்லதே நடக்கவேண்டும் என்று என் மனக்கிடக்கை.

17 08 2011