தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -28
Wednesday, April 17, 2013, 4:46
இன்னம்பூரான்
இந்தத் தொடரை விட்ட குறை எட்டு மாதங்களுக்கு முன், ஒரு வாசகரின் பதிலுக்குக் காத்திருந்ததால். ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருப்பதில்லையே! தற்காலத்திய ஆடிட்டர் ஜெனெரல் திரு. விநோத் ராய் அவர்கள் மே மாதம் வேலையிலிருந்து ஓய்வு பெறுவார். புதிய ஆடிட்டர் ஜெனெரல் நியமனம், பிரதமர் கையில். இது தான் முப்பது-நாற்பது வருடங்களாக நடந்து வருகிறது. தணிக்கைத் துறையிலிருந்து தலைமையை தேர்வு செய்வதில்லை. எல்லாம் ஐ.ஏ.எஸ். தலைகள். திரு. விநோத் ராயும் அங்கிருந்து வந்தவர் தான். ஆனால் பாருங்கள். தணிக்கைத்துறை, தன்னுடைய சீரிய மரபுகள், உகந்த நடைமுறைகள், வைக்கோல் போரில் ஒளித்து வைத்த ஊசியை தேடிப் பிடித்து விடும் திறன், விருப்பு/வெறுப்புக்கு அப்பாற்பட்ட தன்மை, அச்சம் தவிர்த்த மனப்பான்மை ஆகியவை மூலம் அவரைப் போன்ற, காலம் சென்ற திரு. சி.ஜி.சோமையா அவர்களைப் போன்ற உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தன்வசம் இழுத்துக்கொண்டது. தற்காலம் ஊடகமெங்கும், உலகளாவிய வகையில் இந்திய தணிக்கைத் துறையின் சாதனைகள் புகழப்படுகின்றன. ஐ.நா. அமைப்புகள் எல்லாவற்றிலும், இத்துறையினர் பேரும், புகழுமாக, பணி செய்கிறார்கள். மத்திய அரசின் அசரீரி வாக்கு ஆகிய அமைச்சரொருவர், ‘ஒருவர் தலைமை’ வேண்டாம். ஒரு ஆடிட் குழு அமைக்கலாமே என்று பட்டம் விட்டுப் பார்த்தார். துரிதமாக, அதை வாபஸ் பெற்றார். மற்றொரு அழகிய பெருமாள் அமைச்சர், ‘அதிகாரிகள் என்ன? நானே ஆடிட்டுக்கு அஞ்சுகிறேன்!’ என்று பூச்சாண்டி காண்பித்து விட்டு, எள்ளல் செய்கிறார்.
எதற்கும், இங்கு நினைவூட்ட வேண்டியது, மே 30, 1949 அன்று, அரசியல் சாஸனம் வகுக்கும் அவையில் டாக்டர் அம்பேத்கார் அவர்கள், ‘…இந்திய அரசியல் சாசனத்தின் முதல் முக்கிய பதவியாக ஆடிட்டர் ஜெனெரல் பதவியைக் கருதுகிறேன்…நீதிபதிகளின் ஸ்தானத்தை விட இது மேலும் பொறுப்பு மிகுந்த பதவி.. நீதித்துறையை விட இதை முக்கியமாகக் கருதுகிறேன்..‘என்றார், என்பதே. பல சான்றோர்கள் அதை வழி மொழிந்தார்கள். தணிக்கை மட்டுமல்ல; அரசின் வரவு/செலவு விஷயங்களை, ஆதியோடந்தமாக அலச வேண்டியதால், Comptroller and Auditor General என்ற நாமகரணம் தேவை என்றார், திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அதையெல்லாம் முற்றும் புறக்கணித்து விட்டார்கள். அரசு-தணிக்கை மோதலை கண்டு மனம் வருந்தி, ஓய்வு பெற்ற சில தணிக்கை அதிகாரிகள் ஜனாதிபதியிடம், ஒரு மேன்மை குழு மூலம்தான் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்கள். அதில் என்னுடைய கருத்து, அமெரிக்கா/இங்கிலாந்து போல, ஓய்வு பெறும் ஆடிட்டர் ஜெனரலும் அந்தக் குழுவில் இருக்க வேண்டும் என்பதே. என்ன செய்யப்போகிறார்களோ! தெரியவில்லை, பாரதமாதாவே! நல்லதே நடக்கட்டும்.
அடுத்த செய்தி விசித்திரமானது. சில அரசுத் துறைகள், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோடு போடப்போறோம். ஒப்பந்தம் வரையுமுன், எங்கள் திட்டவட்டத்தைப் பாருங்கள் என்கிறார்கள், ஒரு துறையினர். நாங்கள் டெண்டர் திறகும்போது, வந்து சாட்சி இருங்கள் என்கிறது, மற்றொரு துறை. திரு.கேம்கா என்ற யோக்கியமான ஐ,ஏ.எஸ். அதிகாரியை வறுத்தெடுக்கும் ஹரியானா அரசு, நிலபுலன்கள் மதிப்பை தணிக்கைத்துறையே போடட்டும் என்று சொல்கிறது. இது ஒரு பகடியாகத்தான் தோன்றுகிறது. என்னுடைய அனுபவத்தில் தணிக்கைத்துறை முன்கூட்டியே அரிதான சில சமயங்களில் அரசை அன்புக் கட்டளையாக எச்சரித்தது உண்டு. ஆனால், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று கோஷமிடுவது ஒரு தகிடுதத்தமே அல்லது பகடியே. வாசகர்களின் விருப்பத்தைப் பொறுத்து, அது பற்றி, விவரமாக அலசி, அடுத்த கட்டுரை அமையலாம். சமைக்கும் முன் ருசி பார்ப்பது எப்படி?
(Reproduction right applied for)
பிரசுரத்துக்கு நன்றி: http://www.vallamai.com/?p=34553
No comments:
Post a Comment