அன்றொரு நாள்: ஏப்ரல் 15:
அம்ருத்.
மத ஸ்தாபகர்களைப்போல அதிருப்தியால் பாதிக்கப்பட்டவர்களை காண்பது அரிது. மஹாவீரர் ஹிம்சையின் கொடூரத்தைக் கண்டு வருந்தினார்.சாக்யமுனியோ பிணியையும், இன்னல் நிறைந்த வாழ்வையும், மரணத்தையும் கண்டு மனம் கலங்கினார். ஏசு பிரான் கோயிலில் துட்டு எண்ணுபவர்களை ஏசினார். நபிகள் நாயகம்,‘ரஹம்’ ரஹம்’ என்று உச்சரித்தபடியே, கருணாமூர்த்தியாக விளங்கினார். தெய்வீகமும், ஆன்மிகமும் முதன்மை வகிக்கும் சமய நெறிகளை உற்று நோக்கினால், அவற்றில் அந்தந்த காலகட்டத்து சமுதாய சம்பிரதாயங்களின் தாக்கம் பிடிபடும்.
இன்றைய தினம் பிரகாஷ் திவஸ். சீக்கியர்களின் குருநாதர் குரு நானக் தேவ்ஜி அவர்களின் ஜன்மதினம் ஏப்ரல் 15,1469. அவருடைய ஜன்மதினம், அக்டோபர் 20, 1469 ~ கார்த்திகை மாதத்து பெளர்ணமி ~ என்றும் சொல்லப்படுகிறது. அன்றும் விழா எடுக்கப்படுகிறது. குரு நானக் தேவ்ஜி அவர்களின் குருமாதா, அவருடைய தமக்கை பீபீ நானகிஜி. அவருடைய குடும்பத்துடன் ஒண்டிக்கொண்டு, நவாப் தெளலத்கான் லோடியிடம் பணி செய்த நானக் பாலபருவத்திலிருந்து, தெய்வீகத்தில் ஆழ்ந்தவர். தனது 38 வது வயதில் நதியில் ஸ்னானம் செய்யப்போனவர் திரும்பவில்லை. மிகவும் கவலைப்பட்ட நவாப் தெளலத்கான் லோடி, தேடித்தேடி களைத்து விட்டார். மூன்று நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்த நானக் மெளன விரதத்தில் இருந்தார். மறுநாள் அவர் கூறியதை கேட்போம்.
“ நான் இறைவனின் சன்னிதானத்துக்கு அழைத்து செல்லப்பட்டேன். இறைவன் எனக்கு பருக அம்ருதத்தை தந்து, ஆணையிட்டார், ‘இது நாம் தரும் அமர பானகம். பருகு. நாம் என்றும் உன்னுடன் இருப்போம். எமது நல்லாசிகள் உனக்கு. எமது நாமத்தை உனக்கு சூட்டினோம். எமது தேவ வாக்கை பரப்புவதே உனக்கிட்ட பணி.’ “.
நாத்திகர்கள் இதை எல்லாம் கொச்சைப்படுத்தலாம். சமயங்களை ஒப்பியல் செய்பவர்கள், குரு நானக் தேவ்ஜி அவர்களின் பொன்வாக்கு எல்லாம் உபநிஷத், மேரு புராணம், பெளத்த சாத்திரங்கள். விவிலயம், குர்ரானில் இருப்பதை நிரூபிக்கலாம். ஆனால், குரு நானக் தேவ்ஜியின் “ஹிந்து, முஸ்லீம் என்ற தாரதம்யம் கிடையாது. எனவே, யான் எந்த பாட்டையில் செல்லவேண்டும் என்ற வினா எழுகிறது. விடை காண்பது எளிது. நாம் இறைவனின் பாதையில் செல்லவேண்டும். இறைவனுக்கு இந்த ஹிந்து-முஸ்லீம் பாகுபாடு கிடையாது.” என்ற பொன்வாக்கை மனனம் செய்யும்போது, அவர் ஸ்தாபித்த மதம்/ இயக்கம், அந்த காலகட்டத்து சமுதாய பின்னணியை, முதுகெலும்பாகக் கொண்டது என்பது புரியும். அது யாதெனில், 1520ம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்த மொகலாயர் பாபரின் படைகள் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றன. அதை கண்டித்த குரு நானக் தேவ்ஜி சிறைப்படுத்தப்பட்டார். தன் தவறை உணர்ந்த பாபர் எல்லாரையும் விடுதலை செய்ததாக சொல்லப்படுகிறது. குரு நானக் தேவ்ஜி ஒரு சமாதானப்புறா. அமைதியின் மறு உரு.
குரு நானக் தேவ்ஜியின் இரட்சண்ய யாத்திரீகம் மிகவும் நீண்டது, நான்கு தவணைகளில் உலகை வலம் வந்தார்: குருக்ஷேத்ரா, ஹரித்வார், ஜோஷிமத், அயோத்யா, பிரயாக், வாரணாசி, கயா, பாட்னா, கெளஹத்தி, டாக்கா, பூரி, கட்டாக், ராமேஸ்வரம், இலங்கை, சோம்நாத், துவாரகா,உஜ்ஜயின், ஆஜ்மீர், மதுரா,லாஹூர், ஸ்பிடி பள்ளத்தாக்கு, திபெத்,லடாக், கார்கில், அமர்நாத்,ஶ்ரீநகர், மெக்கா, மெடினா,பாக்தாத், பெஷாவர்,சிரியா, துருக்கி, டெஹ்ரான்,காபூல், கந்த்ஹார், ஜலாலாபாத். மத போதகர்கள் இவ்வாறு யாத்திரை செல்வது உண்டு. ஆனால், இவரது நீண்ட யாத்திரைகள் வியப்புக்குரியவை.
குரு நானக் தேவ்ஜி பெண்ணியத்தை போற்றியவர். ஏழைகளின், நசுக்கப்பட்டவர்களின் நண்பர். ஹிந்து மதத்தின் சாதிமத பேதத்தையும், இஸ்லாமிய சமய ஆளுமையையும் எதிர்த்தார். அவர் ஒரு இசைக்கலைஞரும், கவிஞரும் கூட.1522ல் கர்த்தார்ப்பூர் என்ற நகரத்தை சிருஷ்டித்து, தன் வாழ்நாள் முழுதையும் (ஸெப்டம்பர் 22,1539 வரை) அங்கு வாழ்ந்தார். இன்று அவர் அங்கு வாழ்ந்திருந்தால், அவர் ஒரு பாகிஸ்தானிய பிரஜை!
பிற்காலம், என்னவென்னமோ நடந்து விட்டது. அதை பற்றி எழுதும் தருணம் இதுவல்ல. மதம் ‘மதம்’ பிடித்து அலைகிறது. ‘அம்ருத்’ ஆலகாலம் ஆயிற்று ஒரு நாள். என் செய்வது?
இன்னம்பூரான்
15 04 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment