எப்படி ஓடினரோ...!~1
இது நிஜம். ‘சென்னையோ சென்னை!’ இதழில் நினைவலைகள் பெருக்கெடுப்பது கண்டு, அவரவர் வாழ்க்கையில் கண்ட சுவையான சம்பவங்கள் (எல்லாமல்ல!) பகிர்ந்து கொள்ள இந்த இழையை தொடங்குகிறேன்.
நண்பர் குப்புசாமியை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தபோது, ‘வனஜாவிடமிருந்து செய்தி உண்டா?’ என்று நான் கேட்க அவர், ‘ இரண்டாவது பிள்ளைப்பேறு; பிறந்த வீடு வந்திருக்கிறாள். தலைச்சன், பிள்ளை. அதை கொஞ்சவே தாத்தா,பாட்டிக்கு நேரம் போதவில்லை’ என்றார். இது கேட்டு மனமகிழ்ந்த நான், மேலும் விவரம் அறிய ஆவல் உந்த, பொறுமை காத்தேன். அவர் ஸ்வபாவம் அப்படி. அவரா சொன்னால் தான் உண்டு. அரசு உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். விதிமுறைகளையும், எழுதாத கோட்பாடுகளையும் கண்டிப்பாக அனுசரிக்கும் ‘கர்நாடகம்’! ஒரு தடவை அவர் அவ்வகையில் எழுதிய ஆவணம் ஒன்றில், ‘விதிகள், இடம், பொருள், ஏவல் கருதி, பொறுப்புணர்ச்சியுடன் தளர்த்தப்படவே, படைக்கப்பட்டன. இல்லாவிடில், கல்லாக மாறும் மரங்கள் போல, அவை செயலற்று போகும்.’ என்று கூறி, அவரின் கூற்றை நான் நிராகரித்ததை கண்டு நொந்து போனார். அந்த அளவு ஸென்ஸிடிவ். ஆனால், நாங்கள் நண்பர்கள். என்னமோ எழுத வந்து என்னமோ எழுதுகிறேன்! அப்படிப்பட்ட மனிதர், ஒரு நாள் விடிகாலையில் வந்து கதவை தட்டினார். நான் வியந்து போனேன். ஏனென்றால், அலுவலகம் விஷயமாக வீட்டில் வந்து பேசுவதை அனுமதிக்காதவன் நான், என்று அறிந்தவர் தான், அவர். சுதாரித்துக்கொண்டு, முகமன் கூறி, வயதில் மூத்தவரான அவருக்கு அமர ஆசனம் கொடுத்து, காஃபி உபசாரம் எல்லாம் முடிந்த பிறகு தான், வந்த விஷயத்தை, தயங்கி, தயங்கி சொன்னார்.
இந்த சம்பவத்தின் தலைமாந்தர்கள் இப்போது தாத்தா, பாட்டிகளாக இருப்பார்கள்? அவர்களின் திருவிளையாடலை, ஈராயிரம் கண்கள் உடைய மின் தமிழில் போடலாமோ? என்று கவலை பட்டேன். ஆனால், பாருங்கள்! அவர்களே வரவேற்பார்கள், ஊரும், பெயரும் மாற்றப்பட்டால், என்றும் தோன்றியது. ருக்மணியை அபகரித்த கிருஷ்ணனின் அடாவடிச்செயலை லீலை என்கிறோம். சம்யுக்தையை, குண்டுக்கட்டாகத் தூக்கி, புரவியில் அமர்த்தி, தழுவிக்கொண்டே, பறந்து சென்ற ப்ருத்வீராஜ் செளஹானை, மெய்கீர்த்திப் பாடி புகழ்கிறோம். கு. அழகிரிச்சாமி, ‘அம்பிகாபதி’ கற்பனையில் உதித்தவன் என்று ஆய்வின் அடிப்படையில் சொன்னாலும், அவன், ராஜகுமாரியிடம் கொண்ட தெய்வீகக் காதலை போற்றுகிறோம். இருந்தாலும், நம்ம வீட்டில் காதல் புகுந்தால், பெரும்பாலோர் திணருகிறார்கள்; மிரண்டு போகிறார்கள்; மிரட்டுகிறார்கள்; காலாகாலத்தில், ‘ இது இரண்டாவது பிள்ளைப்பேறு; பிறந்த வீடு வந்திருக்கிறாள். தலைச்சன், பிள்ளை. அதை கொஞ்சவே தாத்தா,எங்களுக்கு நேரம் போதவில்லை’ என்கிறார்களே! அதை பாருங்கள்.
(தொடரும்)
இன்னம்பூரான்
No comments:
Post a Comment