அன்றொரு நாள்: ஏப்ரல் 18:1
டமால்! டுமீல்!
*
மிஸ்டர்! இந்த ஆனானப்பட்ட பீ.பீ.ஸி. ஏப்ரல் 18, 1930 அன்று ஒரு அதிசய செய்தி கூறியது.~ ‘இன்று சொல்லிக்கொள்ளும்படியான தகவல் ஒன்றுமில்லை!’ அவர்கள் என்னத்தைக் கண்டார்கள்? நான் அன்று நடந்ததை சொல்கிறேன். கேளும்.
*
கடமை தவறாத மனைவி கணவனுக்கு சோறு போட்டுக்கொண்டிருக்கும் போது, ஒருவன் வந்து, அவனை வெட்டிச்சாய்க்கிறான். போலீஸிடம் அவளது வாக்குமூலம்:‘... என் கண் முன் நடந்தது இந்த கொலை. நான் கொலையாளியை காட்டிக்கொடுக்க மாட்டேன். என் கணவன் தேசத்துரோகி. அவர் எமது தலைமாந்தனை, நமது ஆதவனை காட்டிக்கொடுத்து விட்டார். என்னை கொன்றாலும் சரி. நான் சொல்ல மாட்டேன்...”.
*
பட்டியா குக்கிராமம். சாபித்திரி தேவி ஒரு ஏழை கைம்பெண். அவளுடைய இருட்டுக்குடிலில், பிரகாசம். ஆதவன் புகுந்து விட்டான், ஜூன் 13, 1932 அன்று. துரத்தி வருகிறான், கேப்டன் கேமரான். வாசற்படி ஏறும்போதே, டமால்! டுமீல்! ஆள் காலி. ஆதவனும், அன்புக்கொடியும், கற்பனையும் தப்பி விட்டார்கள். எத்தனை வேஷமடா! சாமி!
அடிமை/விவசாயி/பால்க்காரன்/பூசாரி/இஸ்லாமியர். ஆதவனாவது, பிடிபடுவதாவது? துட்டுக்கு ஆசையோ? பத்தாயிரம் ரூபாய் வாங்கினானாமே, இந்த கண்ணாயிரம்? இல்லை?அச்சமோ? அழுக்காறோ? இந்த படுபாவி ஆதவனை காட்டிக்கொடுத்து விட்டானே. செத்து ஒழியட்டும். நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன் என்றாள், அவனுடைய தர்மபத்தினி.
*
சுவர்க்கோழியை விரட்டி விட்டு, காது கொடுத்துக்கேளும். வரலாற்றில் எத்தனை இருண்ட/இருட்டடிக்கப்பட்ட நிகழ்வுகள்! வங்காளம் நுங்கும் நுறையுமாக உணர்ச்சி பெருகிய/பெருக்கிய பிராந்தியம். ஆனந்த மடம் நினைவில் இருக்கிறதோ? 1900 களிலேயே (ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு இருபதாண்டுகள் முன்பே) அங்கு ‘கல்கத்தா யுகந்தர்’ ‘டாக்கா அனுஷீலன் சமிதி’ என்ற இரண்டு புரட்சி மையங்கள். அவற்றின் உறுப்பினர்களுக்கு நித்ய கண்டம். அல்பாயுசு. பிரிட்டீஷ் போலீஸ் உபத்திரவம்,லாடம் கட்டுதல், அடிதடி, கடுங்காவல், அந்தமானுக்கு நாடு கடத்தல், தூக்குக்கயிறு எல்லாம் பழகிப்போயிற்று. இரு குழுக்களும் இணைந்தன. முப்பது வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார்கள். ஒரு வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்: ‘காந்தியின் அஹிம்ஸை மட்டும் தான் பிரிட்டீஷாரை விரட்டியடித்தது என்பது அதற்கு முந்திய நமது வீர, தீர, தியாகி புரட்சியாளர்களின் பாரம்பரியத்தை மூடி மெழுகுவது ஆகும்.’ இனி கற்பனை பெயர்கள் வேண்டா. ஆதவன்: மாஸ்டர் ‘தா’ (அண்ணா) சூர்ஜோ ஸென்: அன்புக்கொடி: ப்ரீதிலதா வாடேத்தார் (அந்த பொற்கொடி தன்னை மாய்த்துக்கொண்டதே, ஐயா!): கற்பனை: கல்பனா தத்தா: கண்ணாயிரம்: நேத்ரோ ஸென். அத்துடன் நின்றதா? நிரஞ்சன் ஸென்குப்தா, சதீஷ் சந்திரா பக்ராஷி,ஜதீன் தாஸ்,கணேஷ் கோஷ்...
1929லிருந்து 1933 வரை திட்டமிட்டு கலோனிய அரசு மீது மின்னல் தாக்குதல்கள். அவற்றில் ஒன்றை பற்றி மட்டும் இன்று சொல்கிறேன். அதை ‘சிட்டகாங்க் ஆயுதக்கிடங்குக் கொள்ளை’ என்று சரித்திரம் படைத்த கலோனிய ஆட்சி வரலாற்று நூல்கள் வர்ணித்தன.
அன்றைய தினம் மாஸ்டர் ‘தா’, கணேஷ் கோஷ், லோகிநாத் பால், நிர்மலா ஸென், அம்பிகா சக்ரபொர்த்தி,நரேஷ் ராய், சசாங்க தத்தா, அர்தேந்து தஸ்திதார், ஹரிகோபாக் பால் (’டேேக்ரா’) தாரேகஸ்வர் தஸ்திதார், அனந்த சிங்,ஜிபான் கோஷால், ஆனந்த குப்தா, ப்ரீதிலதா வாடேத்தார்,கல்பனா தத்தா, ஸுபோத் ராய் (14 வயது), மற்றும் பலர்...( இந்த மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவிய வண்ணம்: போர்ட்ஸ்மத் நகர் மையத்தில் ஒரு ஸ்தூபி. பக்கத்து விக்டோரியா கார்டனில் பல பழங்கால ஸ்தூபிகள். பற்பல போர்களில் வீரமரணமடைந்தோர் பட்டியல், கல்வெட்டில். மலர் வளையங்கள் இன்றளவும் வைத்து அஞ்சலி: தரும மிகு சென்னை யுத்த நினைவாஞ்சலி மண்டபம் சோம்பேறி மடமாக இருக்கிறது. ஏப்ரல் 18, 1930 விடுதலை பாய்ச்சலின் பட்டியலில், ‘மற்றும் பலர்’ என்று எழுதும்போது, இதயத்தில் ஈயத்தை காய்ச்சி வேலால் இட்டது போல் வலி. வெட்கி தலை குனியவேண்டியிருக்கிறது. பாரத மாதாவே! என்ன பாவம் செய்தாய் நீ? உன் தவப்புதல்வர்களின் பெயர் கூட தொலைந்து போய் விட்டதே!
ஏப்ரல் 18, 1930 அன்று இந்த வேங்கைப்புலிகளின் பாய்ச்சல். சிட்டகாங்க் ( தற்காலம் பங்களா தேஷில்) ராணுவ ஆயுத, தளவாடக்கிட்டங்கிகள் இரண்டு உள்ள இடம். இரண்டையும், தாயே! உன் புதல்வர்கள் கைப்பற்றினர்; உந்தன் மணிக்கொடியை நாட்டினர். தங்கள் அமைப்பின் கீழே, ஒரு தற்காலிக இந்திய சுதந்திர அரசு பதவியேற்றதை பிரகடனம் செய்தனர். தோல்வியில் சுருண்டு கிடந்தது, நல்ல கண்டிஷனில் இருந்த கலோனிய ராணுவம். சொல்லப்போனால், மின்னல் தாக்குதலுக்கு, இது சரியான முன்னோடி. வேவு பார்ப்பதில் சாமர்த்தியம் இல்லை என்றால், வீழ்ச்சி நிச்சயம். ஆயுதங்களை கைப்பற்றி என்ன ஆதாயம்? குண்டுக்களும், தோட்டாக்குவியல்களும் வேறிடத்தில். அது தெரியாது, நம் குழுவுக்கு. ஏமாந்து போன குழு இரண்டாக பிரிந்தது. ஆனால், இளைய தலைமுறைக்கு இது புரியவில்லை. நகர்கானா மலையில் பதுங்கினர். ஜலாலாபாத் என்ற இடத்தில் கடும்போர். 55 பேர் கொண்ட இந்த சிரிய குழு ஒரு பட்டாலியனுடன் மோதி, 80 சிப்பாய்களை சிறைப்படுத்தினர். விட்டதா இந்த வெள்ளை கறுப்பு? தால்காட், பஹார் தலி என்ற இடங்களில் மோதல். எத்தனை இன்னல் தருவாய்? இறைவா?
(தொடரும்)
இன்னம்பூரான்
18 04 2012
உசாத்துணை:
Manini Chatterjee (2000): Do and Die: The Chittagong Uprising: 1930-34: New Delhi: Penguin India: ISBN-10: 0140290672/ ISBN-13: 978-0140290677.
ஒரு மின் தமிழ் கொசுறு: பாமர கீர்த்தியை பாராட்டும் எமக்கு ஏப்ரல் 18, 1935 தேதியிட்ட ஒரு நாட்காட்டி குறிப்பு கிடைதது. அன்பன் காளைராஜனின் பாட்டையா கலியத்தேவர் அவர்களின் ' ஆற்றில் அழகர் வந்ததையும்,ஒரு பெண் குழந்தைக்கு, ஒரு ரூபாய் செலவில் (கொஞ்சம் ஜாஸ்தி இல்லை?) அழகருக்கான முடி இறக்கியதையும், பதிவு செய்தது இன்று கவனத்துக்கு வந்தது. இழைக்கு சம்பந்தம் இல்லையெனினும், இது ஆவணங்களின் அருமையை பறை சாற்றுகிறது.
No comments:
Post a Comment