12. தணிக்கை செய்வதில் தணியா வேகம் -2: 12: "சுக்குமி, ளகுதி, ப்பிலி’!
நிர்வாகத்தின் முதல் பாடம், எனக்கு, செர்வீஸில் இணைவதற்கு முன்பே கிடைத்தது. புதுக்கோட்டையிலிருந்து சென்னை புலன் பெயர்ந்ததால் சென்னை விலாசத்திற்கு கடிதப்போக்குவரத்து வைத்துக்கொள்ளவும் என்று மத்திய அரசுக்கு தாழ்மையாக விண்ணப்பித்தேன். வந்த ''தாட்பூட்' பதில் என்னை அசரவைத்தது. அது சொன்ன தகவல்," உமது கடிதம் கிடைத்தது. உம்மை ஐ.ஏ.ஏ.எஸ் துறைக்கு போட்டிருக்கிறது.' விலாசமோ, புதுக்கோட்டை விலாசம்! இந்த விஷயம் கடைசி வரை சொல்லமாட்டார்கள். 'ஒன்று கிடக்க, ஒன்று சொல்லப்போய், இப்படி ஒரு பதில்! ‘ஓஹோ! அப்படியா! ரொம்ப சந்தோஷம்!’ என்று சொல்லி விட்டு கல்யாணம் செய்து கொண்டேன்.
நேற்று தான் விளக்கம் கிடைத்தது. அங்கும் ஒரு மெய்கண்டார்! அரசு மடலாடும் முறை விந்தையானது. வரும் கடிதங்கள் 'பர்பர்ட் ரிஜிஸ்டரிலும், போகும் கடிதங்கள் 'டெஸ்பேட்ச்' ரிஜிஸ்டரிலும், பதிவாகவேண்டும் என்று ஆணை. பொருத்தமான பதில் போடவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆணையை மீறினால் வம்பு. எதிர்பார்த்தை மாற்றி செய்தால், தட்டிக்கேட்பார் இல்லை, இந்த கையொப்ப பிரதேசத்திலே. கடிதப்போக்குவரத்தில் மேலதிகாரிகள் ஒரு கண் வைத்த வண்ணம் இருக்கத்தான் வேண்டும்.
த|ணிக்கைத்துறை அரசாங்கக்குறைகளை ஆடிட் ரிப்போர்ட்டில் பதிவு செய்யும் முன், அந்த அந்த துறையின் விளக்கம் கேட்டு, அதையும் பதிவு செய்யவேண்டும். இந்த மஹானுபாவர்கள் பதில் போட்டால் தானே? இந்த தாமதத்தால், ஆடிட் ரிப்போர்ட் அடிபட்டு போகும். அதை தவிர்க்க நான், இடம், பொருள், ஏவல் நோட்டம் விட்ட பிறகு, சில கடிதங்களில, கெடு என்ன என்று கூறி, 'கண்டிப்பாக, இந்த கடிதத்திற்கு நினைவூட்டல் கடிதம் வராது'என்றும் குறிப்பது வழக்கம். இந்த எச்சரிக்கையை மதிக்காமல் மாட்டிக்கொண்டவர், பலர்.
சில அதிகாரிகள் எந்த கடிதம் வைத்தாலும் 'டொபக்' என்று கையொப்பமிடுவார்கள். சிலர் கோப்புகளை ஆலிங்கனம் செய்து கொள்வார்களோ என் று சம்சயிக்கும் அளவு, அவற்றை மேஜையிலே மாதக்கணக்காக வைத்துக்கொள்வார்கள். இதற்கெல்லாம் ஆங்கில அரசே நிவாரணம் வைத்திருந்தார்கள். 1947க்கு பிறகு,அதிலிருந்தும், நாம் விடுதலை பெற்றுவிட்டோம். ஒரு சான்று: 1970களில், ஒரிஸாவில், கொரபட்டு ஜில்லாவின் ஒரு கிராமத்தில் தணிக்கை செய்த போது, ஆவணங்கள், நடைமுறை, நிர்வாகம், எல்லாமே சிறப்பாகவும், திறன் படைத்ததாகவும் இருப்பது கண்டு வியந்தேன்; விளக்கம் தேடினேன். வயதான குமாஸ்தா ஒருவர் முடிச்சவிழ்த்தார். "நாங்கள் பழைய ஆங்கிலேய வழிமுறையை கடைப்பிடிக்கிறோம்.” (Sir, we are from the old Greater Madras Presidency. We follow British traditions.”)
என்று பெருமிதத்துடன் கூறினார். அது ஒரு படிப்பினை.
எது எப்படியிருந்தாலும், கவனக்குறைவு வந்துபோன வண்ணமாக இருக்கிறது. 1990ம் வருடம். மத்திய அரசின் துறை ஒன்றின் மீது புகார், ஆடிட் ரிப்போர்ட்டில் போட, “"திட்டமிட்டதை (Target) நிறைவேற்றிவிட்டதாக(Performance) இத்துறை பெருமிதம் கொள்வது தவறு. அவர்கள் சொன்னதில் ஒன்பது விழுக்காடுகளே செய்துள்ளனர்" (ஆடிட் நோட்டில் குறிப்பு, ஆதாரத்துடன்).
வந்த விளக்கம், “உமது ஆடிட் நோட் தவறு. திட்டமிட்டதை நிறைவேறியதாகக் காட்டிய சிறு தவறு இது!" எப்டி?பதிலை அப்படியே பதிவு செய்துவிட்டோம், ஆடிட் ரிப்போர்ட்டில். தொலைந்தது; பார்லிமென்ட் கமிட்டி மீட்டிங்கில் (Public Accounts Committee Meeting). அசடு வழிந்தார்கள், "சுக்குமி, ளகுதி, ப்பிலி” என்ற வகையில் மடலாடிய கவனக்குறைவால்.
இன்னம்பூரான்
பின் குறிப்பு:
ஓம் ஐயா கூட்டுறவு கூடாநட்பாக மாறியதையும், அக்காலமே மக்கள் விழிப்புணர்ச்சியுடன் (பெப்பெர் ஸ்ப்ரே இப்போ தானே வந்தது!) இருந்ததையும், நன்கு குறிப்பிட்டார். அதே உசிலம்பட்டி அருகே, அதே கூட்டுறவு துறை எழுபது, எண்பது வருடங்களுக்கு முன் செய்ததை காண்போம். பிரமலைக்கள்ளர்களை கிரிமினல் ட்ரைப் என்ற ஆங்கிலேய போலீஸ், அவர்களின் புனருத்தாரணத்திற்காக, கள்ளர் ரெக்ளெமேஷன் என்ற துறையை ஏற்படுத்தி,அதன் மூலம் கூட்டுறவை வளர்த்தார்கள்; பணியில் அத்துறையினர்; போலீஸார் அல்ல. விற்பனை சொஸைட்டி,விவசாய பண்ணை சொஸைட்டி, ரோடு போடும் சொஸைட்டி என்றெல்லாம் கொடி கட்டி பறந்தார்கள். என் தந்தை செய்த ஊழியம் அது. அந்த அளவுக்கு எனக்கு தெரியும். என்று ஒரு அரசு மையம் பணி மையம் இல்லாமல்,அதிகார மையம் ஆகிறதோ, அன்றே சர்வநாசம் தொடங்குகிறது. என்ன தான் யதேச்சதிகாரம் என்று சொல்லப்பட்டாலும், சுதந்தரத்திற்கு முன்னும், பின் சில வருடங்களுக்கும், அரசு அதிகாரிகள், " உங்களுக்கு கீழ்படிந்த ஊழியன்" (I remain, Sir, Your Most Obedient Servant) என்று தான் கையொப்பமிடுவார்கள். அதுவே ஒரு எச்சரிக்கையாக இருந்தது.
கீதா சாம்பசிவம் சொல்வது சரியே. ஒவ்வொரு அனுபவமும் படிப்பினையே. பகிர்ந்து கொள்வதில் பயன் மிக்க உண்டு, பரந்த சமூகத்திற்கு. .
இன்னம்பூரான்
No comments:
Post a Comment