“உன்னால் முடியும் தம்பி”
“பாரத தேசம் என்று பெயர் சொல்கிறோமே’. அந்த விசாலமான, புனித பூமியின் வடகிழக்குப் பிராந்தியத்தின் மணிப்பூர் மாநிலத்து Tamenglong மாவட்டத்தின் Tousem சப்-டிவிஷன் இருக்கும் ஊர், ஒரு மூலை முடுக்கு ஊர். தீவு எனலாம். பிரவாஹிக்கும் நதியை கடந்து, குண்டும், குழியான ராஸ்தாவில், உயிரை பணயம் வைத்து பயணம் செய்தால் தான் 50 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் Tamenglong என்ற ஊருக்கும், அதைத் தலைவாயிலாக வைத்து வெளி உலகத்திற்கும் போக முடியும். செழிப்பான நிலம். ஆனால், பழங்கள் அழுகி போகின்றன. வியாதிஸ்தர்களுக்கு அவதி. மக்கள் கேட்பதன்னெமோ ஒரு ரோடு. துட்டுக்குப் பற்றாக்குறை என்று அரசு கையை விரித்து விட்டது. சப்கலெக்டர் திரு. ஆர்ம்ஸ்றாங் பாமே ஐ.ஏ.எஸ். (28) உள்ளூர் பையன். பாலப்பருவத்திலிருந்து மக்களின் இன்னல்களை பார்த்தவர். கால்நடையாகவே 31 குக்கிராமங்களில் பயணித்து ஒரு ‘விதிமீறல்’ முடிவுக்கு வந்தார். ஃபேஸ்புக் மூலமாக ரோடு போட திரவியம் தேடினார். கைக்காசு ரூபாய். ஐந்து லக்ஷம் போட்டார். அம்மாவிடமிருந்தும், சகோதரனிடமிருந்தும் நன்கொடை வாங்கினார். செய்தி பரவ, பரவ, கல்லாப்பெட்டி நிரம்பியது ( ரூபாய் 40 லக்ஷம்) அமெரிக்காவிலிருந்து ஒரு சீக்கியர் தாராளமாக உதவினார். காண்டிராக்டர்கள் இயந்தரங்களை இலவசமாக கொடுக்க சம்மதித்தனர்.. மக்கள் கூலி மறுத்து, இனாமாக சிரமதானம் செய்தார்கள். 100 கிலோ மீட்டர் சில மாதங்களிலே ரெடி. மக்களின் மகிழ்ச்சி தான், இவருடைய ‘விதிமீறலுக்கு’ பரிசு. அரசும், ஊடகங்களும், சமுதாயம் இவரை போற்றுவதைக்கண்டு, இந்த ‘விதிமீறலை’ கண்டு கொள்ளமாட்டார்கள் என்று தோன்றுகிறது.
என்ன ‘விதிமீறல்’, இது? ரோடு போட்டது அரசுக்கு சொந்தமான இடம். அரசு நிர்வாக விவிலயம் (GFR& CTR) படி, அதில் கை வைத்தது ‘விதிமீறல்’. அரசு அதிகாரி நன்கொடை நாடியது ‘விதிமீறல்’. காண்டராக்டர்களிடம் தாக்ஷிண்யப்பட்டது ‘விதிமீறல்’. ஆடிட்காரன் என்ன சொல்வான்? முதற்கண்ணாக இந்த அரசு நிர்வாக விவிலயத்தின் பற்றுக்கோடு ஆகிய விதியை அவர் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வான்.
“...என்றைக்கோ விதிக்கப்பட்ட வரையறைகளுடன் மோதும் துணிச்சலான, கண்ணியமான, தொலைநோக்கு உடைய, மக்கள் நலம் நாடும் சாதனைகள் நம் வரப்புயர்த்தக்கூடியவை... தணிக்கையாளர், ரூல் புத்தகங்களுக்குள் அடைந்து கிடைக்காமல், நாற்திசையும் பார்க்கவேண்டும்...”.
ஆசிய நாடுகளின் தணிக்கை மஹாஜன சபையின் அதிகாரபூர்வமான இதழின் ஆசிரியப்பணி இந்தியாவிடம். 1989ல் , அதில் மேற்படி கருத்துப் பதிக்கப்பட்டது, என்னால். ஆகவே, இந்திய தணிக்கைத்துறையும், ஆசிய மன்றமும் அதை ஏற்றுக்கொண்டது எனலாம். அடுத்த வருடமே என்னை அந்த இதழுக்கு ஆசிரியராக நியமித்தார்கள். அதுவும், என் கூற்றை ஆதரித்ததை குறிப்பால் உணர்த்துகிறது. மேலதிக விவரங்களுக்கு, இரண்டாவது உசாத்துணையை நோக்குக. மேற்படி கருத்தின் நடைமுறையை வேறு ஒரு இடத்தில் விளக்கியிருக்கிறேன். யாராவது கேட்டால், தேடிப்பார்த்து சொல்கிறேன்.
இப்போதைக்கு, காலம் சென்ற டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் சொன்ன மாதிரி, ‘உன்னால் முடியும் தம்பி.’ என்று சொல்லி, ‘“பாரத தேசம் என்று பெயர் சொல்லுவோம்’ என்ற திருமந்திரத்தை நமக்கு ஓதிய மஹாகவி சுப்ரமண்யபாரதியாரின் தாள் பணிந்த,
உங்கள் இன்னம்பூரான்
18 04 2013
*
*
No comments:
Post a Comment