தணிக்கை செய்வதில் தணியா வேகம்: தரகர் ராச்சியம்: 10.
அரசு ஆணைகளுக்கு கெவெர்ன்மெண்ட ஆர்டர் (ஜீ.ஓ) என்று பெயர். நூற்றுக்கணக்கில், நாள் தோறும் வந்த வண்ணம் இருக்கும். சின்ன விஷயத்திற்கும் ஜீ.ஓ., பெரிய விஷய்த்திற்கும் ஜீ.ஓ. எல்லாவற்றையும், கண்ணில் விளக்கெண்னைப்போட்டுக்கொண்டு அலசணும். நேரு கேரளச்செலவு அப்படித்தான் அகப்பட்டது.
அவற்றில் ஒரு வகை, பென்ஸிலின் வகையறா, மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஆன்டிபயாட்டிக் கம்பெனியிலிருந்து,தரகர்கள் மூலமாக, லக்ஷக்கணக்கில் கமிஷன் கொடுத்து, தினந்தோறும் வாங்குவது. ஓம். ஐயா சொன்னமாதிரி,ஆனால், வாரியங்கள் அமைக்காமலே வாரி வழங்கும் பாரி வள்ளலாகிய அரசு, பாத்திரமறியாமல் பிச்சையிடும்,அனாவசிய செலவு இது. ஜீ.ஓ. இருக்கே என்று, ஏ.ஜீ ஆஃபீசிலும் 'நோ அப்க்ஷன் ஃபைல்'. (no action; file).
கத்தை கத்தையாக அவற்றைப்பார்த்து அலுத்துப்போன நான், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாட்டிக் தலைவருக்கே, 'ஏன் இந்த கூத்து? நீங்கள் நேரிடையாக சப்ளை செய்யலாகாதா?' என்று (முன்னர் ஒரு இழையில் சொன்னமாதிரி) ஒரு லெட்டர் தட்டி விட்டேன். என்னுடைய பதவி சின்னது. அவரது மிக்க பெரியது. ஆஃபீஸில், டோஸ் கொடுத்தார்கள். அவர் ஆடிட்டர் ஜெனரலிடம் புகார் செய்யக்கூடும் என்றும் பயமுறுத்தினார்கள்.
நடந்தது வேறு. அவர் பணிவன்புடன், " எங்கள் முறை அதுவே. உங்கள் மாகாண அரசு தான் திருந்தவேண்டும். நாங்கள் தள்ளுபடி கூட தருகிறோம்." என்று எழுதி, விலை ஜாபிதாவும் அனுப்பி விட்டார். பார்த்தால், வீண் செலவு அபரிமிதம். நாங்கள் அரசுக்கு எழுத, மறுப்பு தெரிவிக்க, முடியாது என்று சால்ஜாப்பு சொல்ல, அனுப்பபட்ட மருத்துவத்துறை அதிகாரி, நண்பராகிவிட்டார். பென்ஸிலின் வகையறா வாங்கும் முறை, மாற்றியமைக்கப்பட்டது. ஆடிட்டர் ஜெனரலும், இதை பாராட்டி, மற்ற மாகாண அரசுகளையும் உஷார் படுத்தினார். மற்றபடி, பிற்காலம், அந்த மருத்துவ அதிகாரி, எனக்கு தனிப்பட்ட முறையில் செய்த உதவிகளூக்கு என்றென்றும் கடமைப்பட்டவன் நான்.
பிற்காலம், தகாத முறைகள் புகுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. ஆஃபீசர்கள் அடிக்கடி மாற்றப்படுவதால்,தொடர்ச்சி இல்லாமல் போக வாய்ப்பு உண்டு.
(முதல் பத்து முற்று பெற்றது)
No comments:
Post a Comment