அன்றொரு நாள்: ஏப்ரல் 16:
நிர்மாத்தா
இதிஹாசங்களில் மயன் ஒரு நிர்மாத்தா. நிர்மாத்தா என்றால் சிருஷ்டி கர்த்தா; படைப்பாளி, உருவம் கொடுப்பவர், ஸ்தாபகர். நிறுவனர். தீர்க்கதரிசனத்துடன், தன்னலமற்று, சமுதாய முன்னேற்றத்தை, விரைவாக, விலாவாரியாக, முழுமையாக, நிலைத்து, அளிப்பவர். இன்று, அத்தகைய சிரோன்மணி ஒருவருக்கு வந்தனமு. வடமொழியிலும் பாண்டித்தியம் உடைய, இவர் தான் முதல் தெலுங்கு புதினம் (ராஜசேகர சரித்திரமு) படைத்த இலக்கியவாதி. சுந்தரத்தெலுங்கில், நாடகங்கள், விஞ்ஞான அறிமுக நூல்கள், வரலாறு, பெண்ணிய கட்டுரைகள் எழுதியவர். ஆந்திராவின் மறுமலர்ச்சி, இவருடைய அடர்ந்த மீசைக்கு நடுநாயகமாக புன்முறுவலித்தது.
ஏழை பார்ப்பன குடும்பம். நான்கு வயதில் தந்தையை இழந்தவர். அம்மகாருவுக்கு படிப்பு தான் முக்கியம். தன்னால் இயன்றவரை,சுபுத்திரனை படிக்க வைத்தார். 21 வயதில், இவர் பள்ளி ஆசிரியர். அடேயப்பா! எத்தனை வகையில் எழுத்தாக்கம்! பிரபந்தங்களும், சடகங்களும், ரஸிக ரஞ்சன ரஞ்சனமு, நிர்வாசநைஷதமு,சுத்தராந்தர பாரத ஸங்க்ரஹமு போன்ற மென்மையாக பாலுணர்வை தூண்டும் இலக்கியங்களும், அன்றைய ஆந்திர சமுதாயத்தை கேலி செய்யும் அபாக்யோபாக்யநாமு என்ற நகைச்சுவை நூலையும், பிரம்ம விவாஹம் என்ற சிறுபெண்கள் விவாகத்தைக் கேலி செய்யும் நாடகமு, கன்யாஶுல்கம் என்ற வரதக்ஷிணை கண்டன நூலை படைத்த மஹானுபாவலு, அவரு. அது மட்டுமா?
ஆந்திர இதழிலக்கியத்தின் நிர்மாத்தாவும் இவரே~ விவேகவர்த்தினி, சிந்தாmaணி,ஸதீஹிதபோதா, சத்யவர்த்தினி, சத்யவாதி. அவருடைய மறுமலர்ச்சி பாணங்கள், அவை. அருமையான உள்ளுணர்வும், துணிவும்,கடின உழைப்பும் அவரது முத்திரைகள். ஹிதகாரணி என்ற ஒரு சமுதாய நலன் கூடத்தை அமைத்து, தன் சொத்து முழுதையும் அதற்கு தானம் செய்த கர்ணன், அவர். பெண்களுக்கு கல்வி என தொடங்கிய அவர் நடத்திய முதல் விதவா விவாகம், டிஸெம்பர் 11, 1881 அன்று. பிற்காலம் விதவை இல்லம் ஒன்று நிறுவினார். நடைமுறை மன்னன். மதராஸ் பிரமுகர்கள் (ஜி.எஸ்.அவர்கள்), பிரிட்டீஷ் அதிகாரிகள் ஆகியோரை வளைத்து, மாநாடுகள் நடத்தினார். அவற்றில், சாஸ்திரோக்தமாக, விதவா விவாகம் செல்லுபடி ஆகும் என்று வாதித்தார். அவரை எதிர்த்தவர்களும், அதே சாத்திரங்களை உமிழ்ந்தனர். செல்லுபடியாகவில்லை. இவரை அடித்து அடக்க முயன்றனர். அவர்களால், இவரது மீசையை கூட தொடமுடியவில்லை! தேவதாசி புழுக்கத்தை குலைத்த புண்ணியம் இவரை சாரும். இதை எல்லாம் கவனித்த சர்க்கார், இவருக்கு ‘ராவ் பஹதூர்’ விருது அளித்தது. இலக்கிய உலகமோ இவரை ‘கத்ய திக்கண்ணா’ என்று தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடியது. ஏன் கொண்டாடாது? பேசு மொழியை போற்றி, ‘வ்யவஹாரிக பாஷா’ ஞானத்திற்கு வித்து இட்டவர் அல்லவா. ஆந்திர காவலு சரித்திரமு எழுதியவர் அல்லவா. நூறு நூல்களை எழுதிய ஜாம்பவான், இவர். இந்த மஹானுபாவலு தான் ராவ் பஹதூர் கந்துக்கூரி வீரேசலிங்கம் பந்துலுகாரு. பாரத மாதாவின் தவப்புத்ல்வன். மஹாகவி பாரதி இவரை தன்னுடைய கதைக்கொத்தில், அமரத்துவம், அளித்திருக்கிறார்.
இன்று ராவ் பஹதூர் கந்துக்கூரி வீரேசலிங்கம் பந்துலுகாரு அவர்களின் ஜன்மதினம்: ஏப்ரல் 16,1848. அதன் பொருட்டு அஞ்சலி செலுத்த நான் என்றோ எழுதிய கட்டுரையை, உங்கள் அனுமதியுடன், மீள் பதிவு செய்கிறேன், இங்கு.
********
6/14/2009 10:55 PM IST
நூறு வருஷங்களுக்கு முன்னால்
ஒரு நூறு வருஷங்களுக்கு முன்னாலே போக முடியுமோ? அப்படின்னா இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் போக முடியுமே! ஏன்? யுகராம்பத்துக்கே போகலாம். அப்படி மனசு சஞ்சாரம் பண்ணும்போது, செந்தமிழ், பேசும் தமிழ் என்றெல்லாம் பார்க்கமுடியுமா? உணர்ச்ச்சி ஆறா பெருக்கெடுத்துட்டா, கையா எழுதறது? மனசுன்னா இந்த ‘ப்ளான்ச்செட்’ ன்னு சொல்றாளே, ஆவி சொல்ல சொல்ல எழுதறமாதிரி, கையை ‘மூவ்’ பண்றது. இந்த மனோவேகம் இருக்கே, அது கொஞ்சம் கூட தயா தாக்ஷ்ண்யம் பாக்காது. மடை வெள்ளம் திறந்த மாதிரி, விரட்டும். மத்த வேலயையெல்லாம் திரஸ்காரம் பண்ணிட்டு, உடனே எழுதறான்னு, அழுச்சாட்யம் பண்ணும். நான் இந்த மாதிரி எழுதறது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதனாலே, ‘விட்டுப்பிடிறா’ன்னு பட்டறிவு குரல் கொடுத்திண்டே இருக்கு. காதுல்லே விழுந்தாத் தானே?
பத்து நிமிஷம் முன்னாலே பொதிகையிலே ஒரு சின்ன நாடகம். பத்து பதினெஞ்சு நிமிஷம் தான். குலைந்து போய்விட்டேன். இன்னும் கையும் காலும் பதறறது. நடந்த்ததா? கற்பனையா? தெரியல்லை. வரவள்ளாம், அந்த காலத்திலே இருந்தவா. பெரிய மனுஷான்ன்னா அவா தான் பெரிய மனுஷா. வீரேசலிங்கம் பந்துலு, மடிசஞ்சிக்கெல்லாம் அவர் சிம்ம சொப்னம். ஜி.சுப்ரமண்ய ஐயர், சுதேசமித்திரன்னு. மஹாத்மா காந்தி ஜி.சுப்ரமண்ய ஐயரோட அந்திமக்காலத்திலே, தலையை கோதிக்கொடுத்து ஆஸ்வாசபடுத்தினார். ஆனா, கதையின் தலைவி சந்திரிகாங்கற குட்டிப்போண்ணு, அவ அத்தை விசாலாட்சியெல்லாம் கற்பனையாத்தான் படறது. கதை எழுதினது ஒரு ஆவேசக்காரன். ஒரே படப்படப்புத்தான். ஆசுகவி. மனசிலே பட்டதை ‘தீம் தரிகெடெத்தோம்’னு இடியும் மின்னலுமா கொட்டொ கொட்டுன்னு எல்லாரையும் ஆட்டிபடைத்து ஆகாத்தியம் பண்ணும் பேர்வழி. பேர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார். இந்த் கதையை சின்ன வயசில்லே படிச்சது நன்னா ஞாபகம் இருக்கு.
அது சரி. படம் பிடிச்சவா, அவரோட மனசுக்குள்ளே புகுந்து தான் இந்த படத்தைப் பிடிச்சிருக்கா. பெரிய கதை ஒன்னும் இல்லை. ஒரு பொண்ணு பால்ய விதவை. ஊர் தூத்தறது. பட்டிக்காடு. அப்பா தர்மிஷ்டன். அவ மட்ராஸுக்கு, அப்பாட்ட சொல்லிட்டு வந்துறாரா, அநாதைப்பொண்ணு சந்திரிகாவோட. அதோட அம்மா அல்பாயுசுலே போய்ட்டா. ஜி.சுப்ரமண்ய ஐயர் கிட்ட அடைக்கலம். அவர் தன் விதவைப்பெண்ணுக்கு அந்தக்காலத்திலேயே மறுவிவாகம் பண்ணி, ஹிந்து பத்ரிகைல்லேருந்து விலகறமாதிரின்னா ஆயிடுத்து. அவர் இவளை நிராகரிப்பாரா? ஒரு லெட்டர் கொடுத்து, பந்துலுகாரு கிட்ட அனுப்பறார்.
இந்த சினிமாக்காரா, அவ கிராமம், அப்பாவோட ஆசாரம், இவளோட தடபுடல் கல்யாணம், வண்டிக்காரனோட ஆதுரமான பேச்சு, ஆசிகள், பந்துலுவோட சம்சாரத்தின் கரிசனம் எல்லாத்தையும் தத்ரூபமா காட்றதானலத்தான், தெரிஞ்ச கதையும், சிசு அம்மா வயத்துக்குள்ளே உதைச்சுக்கரமாதிரி, என்னை ஆட்டிவச்சுடுத்து. கடைசில்லெ ஆம்பிள்ளை தான் ஜெயிக்கிறான். கோபால ஐயங்கார்ன்னு ஒரு கவர்ன்மெண்ட் ஆஃபீஸர். ஐ.சீ.ஸ் மாதிரி வைச்சுக்க்கோங்கோ. ஒரு விதவைப்பொண்ணைத்தான் பண்ணிப்பேன்னு தலைகீழா நிக்கறான். பந்துலுகாரு அந்த சம்பந்த்தத்தை முடிக்கப்பாக்கறார். போறாத காலமோ, இல்லை இன்னோத்தரோட போறர காலமோ, சந்துனுவுக்கு மச்சகந்தி மேல கண்ணு விழுந்தமாதிரி, ஐயங்காருக்கு அகஸ்மாத்தா பாத்த வேலைக்காரப்பொண்ணு மேல மோஹமாயிடுத்து. இதான் கதை.
உன்னை ஏன் இந்த கதை இப்படி பாதிச்சுறத்துன்ண்ணு கேப்பேள். என்ன பண்றது? பாரதி பைத்தியம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொரு அத்தையின் கதையைப் படித்து, ஒரு நாள் பூரா மூட் அவுட். அதை சொன்னா அதிசயிச்சுப்போயிடுவேள். சொல்றதா, வேண்டாமான்னு தான் தெரியல்லே.
இன்னம்பூரான்
**************
சரி. உங்களுக்கு பரவாஸ்து சின்னசூரி அவர்களை பற்றி தெரியுமோ?
இன்னம்பூரான்
16 04 2012
உசாத்துணை:
Nagayya G:Telugu Sahitya Sameeksha Raghunadharao P: History of Modern Andhra,
|
No comments:
Post a Comment