அன்றொரு நாள்: ஏப்ரல் 17:
ரத்தமின்றி...!
போர் மூண்டது. அது நீண்டது. ஆண்டாண்டு நீண்டுகொண்டே போனது. பல்லாண்டு, பல்லாண்டு நீண்டும் கண்டு கொள்ளவில்லை, யாரும்? (தேவ் மன்னிப்பாராக.) ‘நந்தன’ வருடம் ஐந்து சுற்று வந்து முப்பத்தைந்து வருடங்கள் ஓடிய பின் (முன்னூத்து முப்பத்தைந்து) தான் அந்த யுத்தத்தின் அருமையை அறிந்தோம். ரத்தம் சிந்தவேயில்லை! ஏன் தெரியுமா? ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை. யுத்தம் தொடங்கிய தினம்: ஏப்ரல் 17, 1651. சமாதான உடன்படிக்கை கையொப்பமான தினம்: ஏப்ரல் 17, 1985. அது கூட வரலாற்றுத்துறையின் உபயம். இங்கிலாந்துடன் ஒட்டிய தீவுக்குழு: சிலி தீவுக்குழு. தம்மாத்தூண்டு. அதனுடைய ஒரே முனிஸிபாலிட்டியின் சேர்மரும் (மருவாதங்க!) சரித்திர வல்லுனரும் ஆகிய ஶ்ரீமான் டங்கன் ஸ்மித், லண்டனில் இருக்கும் டச்சு தூதரலுவலகத்துக்கு, ‘உமக்கும் எமக்கும் தாவா, அடிதடிச்சண்டை என்ற ஒரு மாயாவாதம் உளது. சட் புட்னு வாங்க. ஒரு சமாதான உடன்படிக்கை போடலாம், ஏப்ரல் 17 அன்று.” என்று கடிதம் எழுதினார். தேதி முக்யம் என்று சொன்னதாக, ஊகிக்கிறேன். சிலபேர் கடைசிப்பக்கத்தைத் திருப்புவார்கள். நான் முதல் பக்கத்துக்கு போகிறேன்: பத்தாம் பசலி.
மக்களாட்சி என்ற சொல் இங்கிலாந்தில் உச்சரிக்கப்பட தொடங்கியகாலம்: 1642 - 1652. ஆலிவர் கிராம்வெல் தலைமையில், பார்லிமெண்டேரியன் கட்சி ராஜவிசுவாசிகளை துரத்தியடித்த காலம். அவர்கள் சிலித்தீவுகளில் அடைக்கலம் நாடினர். நெதர்லாண்ட் (டச்சு) கிராம்வெல் பக்கம். (ஞாயிறு அன்று, இங்கு பில் மார் என்ற ‘கேலிப்பேச்சு பேசி, எல்லாரையும் ‘கல கல’வெனெ சிரிக்க வைத்து, கல கல என்று கல்லாப்பெட்டியை குலுக்கும் வாயாடியின் நிகழ்வுக்குப் போயிருந்தோம். அத்தருணம் நெதெர்லாந்தின் கடலணைகள் பற்றி பேச்சு வந்த போது, நான் ‘அது நெதர்லாந்து- அதாவது -பாதாள லோகம் என்று கேலி செய்தேன். ‘என்னது இது! பில் மாருக்கு அண்ணனாக இருக்கிறீர்களே, என்று அதீத கேலி செய்தார், எதிர்வீட்டுக்காரி. இது நிற்க. இது உட்காராது அல்லவா. அதான்.).
இது தான் சாக்கு என்று ராஜ விசுவாசிகள் கட்சி டச்சுக்கப்பல்களை உடைக்க, அங்கிருந்து வந்து சேர்ந்த சண்டைக்காரன் அட்மிரல் ட்ரோம் நஷ்ட ஈடு கேட்டார். சரியான பதில் கிடைக்காததால், (தேதியை நோட் செய்து கொள்ளவும்.) ஏப்ரல் 17, 1651 அன்று ‘டம் டமார் டுமீல்’ என்றெல்லாம் ஜயபேரிகை கொட்டாமல் (உடுக்குக் கூட அடிக்க முடியாத இக்கட்டான நிலை: இங்கிலாந்து முழுதும், க்ராம்வெல்லுக்கு ஆதரவு. அடி விழும்.), சிலி மேல் மட்டும் வீரமாக, யுத்த பிரகடனம் செய்தார்.) போதாத காலம்! இங்கிலாந்திலிருந்து வந்த அட்மிரல் ராபெட் ப்ளேக், சிலியில் ஒளிந்திருந்த ராஜவிசுவாசிகளை ஒரு கை பார்க்க, இந்த டச்சு பிரகடனம் லொட லொடவாயிற்று. தேஞ்சும் போயிடுத்தா, யாரும் கவனியாமல், 335 வருடங்கள் இது ஒரு அமைதி யுத்தமாயிற்று. ஆக்ச்சுவல்லி, அட்மிரல் ட்ரோம் செய்தது சொந்த சாஹித்யம். டச்சு அரசு ஆணையொன்றுமில்லை. எனவே, மற்றொரு சாதனை. இந்த போருக்கு துவக்கமில்லை; முடிபு மட்டும் தான். கேட்கவே நன்றாக இருக்கிறது. உங்களுக்கெல்லாம் ஒரு ஹோம் ஒர்க். பி.கு. பார்க்கவும்.
இன்னம்பூரான்
17 04 2012
பி.கு: முதல்/இரண்டாம் உலக யுத்தங்கள், இண்டோ-பாகிஸ்தான் யுத்தங்கள், இந்த மாதிரி நடந்திருந்தால், பின் விளைவுகள் என்னவாக இருந்திருக்கும்? 100 சொற்களுக்குள், கேலி பின்னூட்டம் வரைக. கெடு: 21 04 2012.
உசாத்துணை:
|
No comments:
Post a Comment