சித்திரம் பேசுதடி! சித்திரம் பாடுதடி! சித்திரம் ஆடுதடி!
தொடக்கத்திலிருந்தே இந்தியாவில் பேசாத படங்கள் பேசின. பேசும் படங்கள் பாடின. பாடும் படங்கள் ஆடிக்கொண்டே பாடின. நூற்றாண்டுக்கொண்டாட்டம் மே 19 அன்று உலகபுகழ் பெற்ற கேன்ஸ் (Cannes) விழாவில் ‘ஓஹோஹோ!’ என்று நடைபெறும். அது பாரிஸ் நகரிலே. சினிமா பிதாமகர் தாதாசாஹேப் பால்கே அவர்களின் படைப்புகள் பல உலா வருமாம். ஏன் இந்த ‘மாம்’? இந்த விழா எடுக்கும் பிரமுகர்கள் லேசில் விஷயத்தைச் சொல்லமாட்டார்கள். கசிந்த செய்தி தான் கிடைக்கும். மற்ற பெரிய விஷயங்களை பிறகு பார்ப்போம்.
ஃபிரான்ஸில் சினிமாவுக்குத் தனி மவுசு. இவ்வருடத்தில் மட்டும் 13 இந்திய சினிமா விழாக்கள் அங்கே. இந்திய சினிமாவை ( பாலிவுட், கோலிவுட் வகையறா) பற்றிய தப்பபிரப்ராயங்களை களைந்து, புதிய பறவை/புதிய பார்வை/புதிய பாதை இந்திய சினிமாக்களை அறிமுகம் செய்யப்போகிறார்களாம். அவற்றில் சில:
Delhi Belly , B.A.Pass , My brother Nikhil , Ezham Arivu, Alms for a blind horse , Pizza and Vazhakku Enn 18/9 . ( ஆதாரம்: இன்றைய ஹிந்து இதழ்).
இம்மாதிரியான விழாக்களில் நந்திதா தாஸ், கெளதம் கோஷ், ஆனந்த் பட்டவர்த்தன், ஷியாம் பெனெகல் போன்ற இந்திய சினிமா பிரமுகர்களின் பங்களிப்பு உளது. இந்திய அரசும் பல வழிகளில் இந்த விழாக்களுக்கு ஊக்கமளிக்கும்.
நாம் ஏன் இங்கு, சென்னை நினைவுகள் போல், நினவலைகளை பகிர்ந்து கொள்ளக்கூடாது?
என்னுடைய அச்சாரம்:
உசிலம்பட்டி டூரிங் டாக்கீஸ் எமது குடியிருப்புக்குப் பின்னால் உள்ள மைதானத்தில். எங்களை சினிமா பார்க்க அழைத்துப் போவது, பெரியாண்டி, அப்பாவோட ப்யூன். அவர் தான் அப்பாவுக்கு ஜீவ்ஸ்,மந்திரி, எடுபிடி; அம்மாவுக்கு சித்தாள்; எங்களுக்கு செவிலித்தகப்பன்/தாயார்/நண்பர்/ வாத்தியார். கோபம் வந்தா அடிப்பார். தரை டிக்கெட்; வீட்டிலிருந்து மடக்கு நாற்காலிகள் போகும். தூங்கி வழிவோம். அப்பா கொடுத்த காசில், பெரியாண்டி பொரி கடலை, கடலை மிட்டாy, கமர்க்கண்டு வாங்கித்தருவார். தூங்கவிடாமல் அடித்து எழுப்புவார். சினிமாக்காரிகள் மினிக்கிக்கிட்டு வந்தால், எங்களை விட்டு விடுவார். அவர் பார்க்கணுமே! ‘நந்தகுமார்’ சினிமா வந்த போது ஒருவர் நந்தகுமார் வேடத்தில், இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து நோட்டீஸ் வினியோகம் செய்தார். அசடு மாதிரி வண்டி பின்னால் ஓடியது மங்காத நினைவு. காரைக்குடியில் சினிமா பார்த்தது மேலும் சுவையான கதை. அடுத்த ரவுண்டில். நான் சினிமா பார்த்த கோல்டன் ஜூபிலி காலகட்டத்தில், வானளாவ தென்னிந்திய சத்யஜித் ரே எனப்படும் ஆடூர் கோபாலகிருஷ்ணன் அவருடைய ‘எலிப்பத்தயம்’ என்ற சினிமாவுக்கு எங்களை அழைத்துச்சென்றார். ஹைலைட்: மறைபொருள்களையும், தற்குறிப்பேற்றிய அணி, ஒட்டணி, பரியாய அணி எல்லாவற்றையும் எடுத்துக்கூறினார்.
(தொடருக)
இன்னம்பூரான்
20 04 2013
No comments:
Post a Comment