தணிக்கை செய்வதில் தணியா வேகம் (சுற்று 2): 11. "குடிவரியுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!" |
இரண்டாம் பத்து தொடங்க தலைப்பு அருளியது வள்ளலார், திருமதி கீதா சாம்பசிவம் மூலமாக. அறிமுகம் அளிக்க, நல்லதொரு வாய்ப்பு.
ராமாயணம், அர்த்தசாஸ்திரம், திருக்குறள் ஆகியவை அரசனுக்கு அளித்த அறிவுரைகளில், "குடிவரியுயர்த்திக் கொள்ளையடிக்காதே!" என்பதும் ஒன்று. அது ஆங்கிலேய ஆட்சிக்கு பொருந்தியது; அந்த ஆட்சி ஜமீந்தார்களை வளர்த்தது; பிற்காலம் அதை 'ஒழித்த' மக்களாட்சியும் தவறுகள் பல செய்வதை கண்டிப்பதே,தணிக்கைத்துறையின் கடன். இந்தியாவில் அத்துறை தொன்மை வாய்ந்தது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில், அதன் மரபுகள் போற்றப்பட்டன. பல நல்ல/நல்லதற்ற மாற்றங்களைக்கண்ட அந்த துறை, இன்று உலகளவில் போற்றப்படுகிறது. அத்துறை உத்யோகஸ்தர்கள் ஐ.நாவில், சிறப்பாக பணி ஆற்றுகிறார்கள். ஐ.நா. ஆடிட் தலைவர் இந்தியாவின் ஓய்வு பெற்ற ஆடிட்டர் ஜெனெரல். இது நிற்க.
இந்த தொடரை மின் தமிழில் அளிப்பதற்கு நான்கு காரணங்கள் உண்டு.
1. தணிக்கைத்துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது; நமது அரசியல் சாஸனப்படி, சுதந்திரப்பறவை. மத்திய/மானில அரசுகளின் தளை அதற்கு கிடையாது.
2. அத்துறை அரசின் நடவடிக்கையை, எல்லாத்துறைகளிலும் - அணுசக்தியிலிருந்து-அங்கன்வாடி வரை கண்காணிப்பதால், அத்துறையில் பணி புரிபவர்களுக்கு,ஆழ்ந்த/பரந்த அனுபவங்கள் கிடைக்கின்றன. சரிவர தணிக்கை செய்வது ஒரு ஆற்றல் எனலாம்.
3. திவாஜி ஒருமுறை கேட்டமாதிரி, ஆடிட் செய்து அடைந்த பயன் யாது? என்ற வினாவுக்கு விடை: 'அது மக்களின் விழிப்புணர்ச்சியை பொறுத்து தான் அமையும். அரசு ஆள்பவர்களுக்கு அது ஒரு முள். காலம் போகிற போக்கில், அரசு இயந்திரம், தணிக்கைத்துறையை அலக்ஷ்யம் செய்வதை அதிகப்படுத்தும். மின் தமிழ் ஆர்வலர்கள், பல துறைகளிலிருந்து வருபவர்கள். அவர்கள் மூலமாக, மக்களுக்கு நற்செய்தி சேரலாம். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வழிகளில்,இதுவும் ஒன்று.
4. எனக்கு தெரிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன். அது சொற்பம். மற்றவர்களின் அனுபவம், கேள்வி, கருத்து, மாற்றுக்கருத்து, தனிக்கைத்துரையின் போக்கை கண்டிக்கும் தகவல்கள் எல்லாம் இந்த இழையின் பயனை அதிகரிக்கும். கருத்துக்கூறுங்கள் என்று நான் விளிப்பதின் பின்னணி, இது தான். இது ஒரு interactive forum.
“குடிவரியுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!" என்ற சொற்றொடர் அரசின் வரவு/செலவு. போக்குவரத்து, நடவடிக்கை, நிலவரம், நிர்வாகம் எல்லாவற்றையும் ஜீரணம் செய்துள்ள சொற்றொடர். அந்த பார்வையில், ஒரு உதாரணம்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற தெளிவினால் தான், ஸர் ஹென்றி லாரென்ஸ் பஞ்சாப்பில் கோவப்பரேட்டிவ் முறை அறிமுகப்படுத்தினார். அந்த முறைப்படி சைனாவிலும், இஸ்ரேலிலும் விவசாயம் பலப்படுத்தப்பட்டது என்பர். ஆந்திராவில் அத்தகைய அமைப்புகளைக்காண சென்றபோது, கலெக்டர் சிறப்பாக நடப்பவை என்று பரிந்துரை சொல்லப்பட்ட இரண்டு பண்ணைகளை விஸிட் அடித்தேன். ஒன்றில், குடியானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறு சிறு வயல்கள்! தாசில்தார் மழுப்பினார். ஒரு குடியானவர் வெள்ளந்தியாக சொன்னார்,'ஒரு வயற்காடு மேடு. தண்ணீர் வராது. புள்ளி விவரம் என்று சொல்லி குறைந்தவிலையில் எடுத்துக்கொள்ளச்சொல்லி, கட்டாயபடுத்தினார்கள்.வேஸ்ட். என்றார்.
அடுத்த பண்ணை கொழித்தது. மகிழ்ந்த நான் கேட்டது, 'அது சரி. நீங்கள் ஏன் அரசுக்கு கொடுக்கவேண்டிய தவணைகளை கொடுக்கவில்லை? பதில், 'ஐயா! வந்த ஆதாயம், இவர்களுக்கு (அரசு ஊழியர்கள்) பிரியாணி கொடுத்ததில் போய்விட்டது' என்று சொல்லி பளீர் என்று சிரித்தார்.
இது எல்லாம் எந்த தெய்வத்துக்கு ப்ரீதி?
இன்னம்பூரான்
பி.கு.
தமிழ்த்தேனீ சொன்னமாதிரி சில இடங்களில் பென்ஷன் போன்ற ஆவணங்கள் தேக்கத்திலிருந்தால், காரணம் தேடவேண்டும். 'மெய்கண்டார்கள்' அங்கு அதிகம் இருக்கலாம். நிர்வாகம் அவர்களை களைய இயலும்.
|
No comments:
Post a Comment