தண்டோரா!
சாமியோவ்! தாய்க்குலமே! சின்னப்பசங்களா!
டும்! டும்! டும்! அஞ்சு நிமிஷம் முன்னாலெ வந்த சேதி. விடிவு காலம் வந்துருச்சு. எல்லாரும் காது குடுத்துக் கேளுங்கோ. 62 வருஷங்களுக்கு முன்னாலெ, ஊர்லெ இருக்கற பெரியமனுஷா எல்லாரும் டில்லிலெ டேரா போட்டு, இந்திய மக்கள் ஆளும் குடியரசு அப்டீன்னு முதுகிலெ ஷொட்டுக்கொடுத்துண்டு இந்திய அரசியல் சாஸனத்தை விமரிசையாக பிரகடனம் பண்ணச்ச, இந்தியாவில் பிறந்த பசங்களுக்கு எல்லாம் ஆரம்ப கல்வி கட்டாயமா இலவசமா இருக்கணும்னு பேசிகிட்டாஹ. ஆனா, சாக்கிரதையா, அதை அடிப்படை சட்டமா போடாமா, மேலெழுந்தவாரியா, அப்டி ஆசைப்பட்றோம்னு சொல்லிப்போட்டாஹ. யாரும் கண்டுக்கலெ. காசும், பணமும், புரள, கல்விதந்தைகள் கல்வித்தாத்தாக்கள் ஆனாஹ. ஏழு தலமுறைக்கு சொத்து வச்சுட்டு, செத்தும் போனாஹ. ஏழை பாழை வீட்டு சின்னப்பசங்க பீடி சுத்தினாஹ, தீக்குச்சி அடுக்கினாஹ, முறுக்கு சுத்தினாஹ, கண்ணாடி வளையல் பண்ணாஹ, ஜமக்காளம் நெஞ்சாஹ, செங்கல் சூளைலெ செத்து மடிஞ்சாஹ, கொத்தடிமைகளா. படிக்க மட்டுமில்லை. இப்டி நாலு தலமுறைக்கு, படிப்புக்கு தலை முழுகினாங்க. நம்ம தாத்தன், பாட்டி, மாமன், அத்தைக்காரி எல்லாரும் இந்திய மக்களின் உரிமையை இழந்து, படிக்காமலெ செத்துப்போய்ட்டாஙக. அவங்களுக்கு, அரசு, சமுதாயம், அப்பன், ஆத்தா, நீங்க, நான் எல்லாரும் தலை முழுகினோம், வெட்கம் கெட்டு.
இரண்டு வருஷம் முன்னாலெ தான், Right of Children to Free and Compulsory Education Act, 2009 அப்டீன்னு, இலவச, கட்டாயக்கல்வி சின்னப்பசங்களுக்கு உரிமை அப்டீனு இந்த கும்பகர்ணங்க சட்டம் போட்டாஹ. அதனாலே தம்பிடி ஆதாயமில்லை அப்பனே, அதற்கான விலாவாரியான விதிகளை பிரகடனம் செய்யும் வரை. ஆந்திரபிரதேஷ், மஹராஷ்ட்டிரா, ஒரிஸா, ராஜஸ்தான், டில்லி அப்டீனு 20 மாநிலங்களில் அந்த காரியம் நடந்தது. தமிழ் நாட்டில், தி.மு.க. அரசும், அதக்கப்றம் அ.தி.மு.க. அரசும் இன்று மாலை வரை (15 11 2011) ஏன் தூங்கி வழிஞ்சாங்கன்னு புரியல்லைங்க. 12ம்தேதி கெஜட்லெ போட்டாஹ. இன்னிக்கி பொது மன்றத்தில் வச்சாஹ. ஆன ஒரு பிரச்னைங்க. அந்த சட்டத்திலெ சொன்னமாதிரி அண்டை அயல் பசங்களுக்கு எப்டி இடம் பதிவு செய்யோணுங்கிறதை பத்தி ஒன்னும் சொல்லலைங்க. சண்டை போட்டு வாங்கணுங்க. புரியுதா/
சாமியோவ்! தாய்க்குலமே! சின்னப்பசங்கள கொத்தடிமையா அனுப்பாதீங்க. பள்ளிக்கூடம் அனுப்புங்க. இல்லென்னு துரைத்தனத்தார் உங்களை தண்டிப்பாஹ. சொல்லிபோட்டேன். டும்! டும்! டும்!
இன்னம்பூரான்
14 11 2011
No comments:
Post a Comment