அன்றொருநாள்: மார்ச் 6
வழக்கின் இழுக்கு!
‘அன்றொருநாள்: மார்ச் 4: உரையின் உரைகல்’ என்ற லிங்கனை பற்றிய இழையில் ‘நாடு பலத்த கலவரத்திலும், குழப்பத்திலும், உள்நாட்டு காழ்ப்புணர்ச்சியிலும் உழன்று கொண்டிருந்த காலகட்டம், அது.’ என்று குறிப்பிட்டதின் பின்னணி, மார்ச் 6,1857 அன்று வழங்கப்பட்ட ‘ட்றெட் ஸ்காட்/சான்ஃபோர்ட் வழக்கில் அளிக்கப்பட்ட தடாலடி தீர்வே. 1861ல் அப்ரஹாம் லிங்கனுக்கு பதவி பிரமாணம் செய்த தலைமை நீதிபதி ரோஜர் டேனி, ரகசியமாக 1857ல் பதவியிலிருந்த ஜனாதிபதி புக்கனுக்கு,முறைகேடாக, வாக்கு அளித்த படி, கறுப்பர்கள் -அடிமைகளும் சரி, விடுதலை பெற்றவர்களும் சரி - அமெரிக்க பிரஜை அல்ல. என்றுமே, அவர்கள் அமெரிக்க பிரஜை ஆகமுடியாது என்று மெஜாரிட்டி தீர்ப்பு அளித்து, தன் மேல் கரும்புள்ளி குத்திக்கொண்டார்.
’ வெள்ளையர்கள் மதிக்க வேண்டிய மனித உரிமைகள் யாதும் கறுப்பர்களுக்கு இல்லை; அவர்களின் நலம் காப்பதற்கே அவர்கள் அடிமையாக்கப்படுகிறார்கள்; கண்டாமுண்டான் சாமான் மாதிரி ஆதாயத்துக்கு வாங்கி விற்கும் அஃறிணை தான் அவர்கள்... அமெரிக்க விடுதலை பிரகடனம் ‘மனிதர்கள் யாவரும் சமமே’ என்று முரசொலித்தாலும், அதில் அடிமை ஆஃப்பிரிக்கர்கள் அடக்கம் இல்லை’ என்றும் வாய்ச்சொல் அருளினார். இதற்கெல்லாம் அடிமை ஒழிப்பாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. ஃப்ரெடெரிக் டக்ளஸ் என்றவர் கூறியமாதிரி, இந்த ‘உளரல்’ அடிமை ஒழிப்பாளர்களின் கூற்றுக்கு வலிமை சேர்த்தது. ‘என் நம்பிக்கை வலுக்கிறது. அடிமைப்படுத்துவதின் அநீதியை, இது தேசத்தின் முன் எடுத்து வைக்கும். அடிமை ஒழிப்பதின் முதல் படி இந்த முரண்’ என்றார், அவர். அப்படியே நடந்தது. 1857லியே இந்த தீர்ப்பை கடுமையாக விமரிசித்த லிங்கன் அடிமைத்தளையை, ஒரு உள்நாட்டுப் போருக்கு பின், அகற்றினார். நாளாவட்டத்தில், இனபேதம் கணிசமாக குறைந்தது. 150 வருடங்களுக்கு பிறகு, அந்த மாஜி அடிமை இனத்தை சார்ந்தவரான ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியானது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றை, திருப்பித்திருப்பி படிப்பதால், மூன்று பயன்கள் புலப்படுகின்றன.
1. நடந்ததை நடந்தபடியே, தொடர்புகளை இணைத்துப் பார்க்காமல், படிப்பிக்க வைத்தால், அவ்வப்பொழுது இணைந்தும்/விலகியும்/மாற்றியும் நிகழ்வுகள் அவற்றை பாதிக்கின்றன. ஃப்ரெடெரிக் டக்ளஸ் சுட்டிய முரண், அதற்கு ஒரு உதாரணம்;
2. வரலாறு படைப்பது மனிதனின் நடவடிக்கைகள்; அதை எழுதுவது மனித சார்பு. உண்மைகள் மறைக்கப்படுகின்றன; உதாரணம்:நீதிபதி ரோஜர் டேனியின் முறைகேடான செயல்கள்;
3. நீங்கள் சொல்லுங்களேன்.
இன்னம்பூரான்
06 03 2012
உசாத்துணை
No comments:
Post a Comment