அன்றொரு நாள்: டிசம்பர் 9
வாலு போச்சு! கத்தி வந்தது!
- வாலு:
இன்றைய தினம் என்றென்றும் போற்றப்படவேண்டிய தினம். பத்தாயிரம் ஆண்டுகளாக மனித குலத்தை சுக்குநூறாகக் கிழித்தெறிந்த வைசூரி என்ற கொடுமையான தொற்று நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகளின் குழு ஒன்று அறிவித்த தினமிது: 1979. அடுத்த வருடமே உலக சுகாதாரமையமும் அதை மே 8, 1980 அன்று அங்கீகரித்தது. 1970 களில் கூட,ஆசியா, ஆஃப்ரிக்கா, தென்னமரிக்கா ஆகிய கண்டங்களில் வைசூரியின் தாக்கம் கடுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நற்பயனை உலகுக்கு ஈன்றதற்கு நன்றிக்கடனாக, வைசூரிக்கவசமான அம்மைக்குத்தும் முறையை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் துரைக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தாலும், முதல் தாம்பூலமும், பரிவட்டமும் தன்வந்திரி முனிவருக்குத்தான். வைசூரியின் வரலாற்றை விலாவாரியாக படைத்த பேராசிரியர்.டி.ஃப்ரேஸர் ஹாரிஸ் எம்.டி. டி.எஸ்ஸி. ‘ ...கி.மு,1000 காலகட்டத்தில் இந்தியாவில் அம்மை ஆற்றுவதற்கு களிம்பு இருந்ததாக சில மரபுகள் கூறுகின்றன...’ என்று கூறுகிறார். தன்வந்திரி முனிவர் தடுப்பு மருந்தை மூக்கினால் உறிஞ்சும் வகையில் படைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அக்காலத்து இந்தியர்கள் நுண்கிருமிகள் தான் காரணம் என்பதை அறிந்தவர்கள் என்று டாக்டர். ஜே. இசட். ஹோல்வெல் பதிண்ணெட்டாவது நூற்றாண்டிலேயே எழுதியிருக்கிறார்.
தற்காப்புக்கலை யாதாயினும், உகந்த முறையில் சொல்லிக்கொடுத்தால், எளிதில் ஏற்கப்படும். எனக்கு முந்திய தலைமுறைகளிலேயே அம்மை குத்தும் வழக்கம் தொடங்கி விட்டது என்றாலும்...அம்மா டைரியில் எழுதினது, இப்போ படிக்கக்கூட கஷ்டமாக இருக்கிறது.
‘...இந்த சமயத்தில் என் தம்பிக்கு பெரிய அம்மை போட்டியிருந்தது. அப்போது நானும் என் தம்பியும் சிவன் கோவில் தெருவில் இருந்த ஹேட்ஸ்கூலில் நாங்கள் படித்தேன். என் தம்பியும் அங்கு தான் படித்தான். அந்த நாளில் ஐந்து க்ளாஸுக்கு மேல் தான் இங்கிலீஷ். நான் ஏதொ 8 வரையில் படித்தேன். தம்பிக்கு அம்மை போட்டினதால், நான் வீட்டிற்கு போகமாட்டேன். எனக்கு அம்மை போட்டவில்லை. அதனால் என் அத்தை அதே தெருவில் இருந்தாள். அங்கு போய் சாப்பிடுவேன். இப்படியிருக்கும் (போது) திடீரென்று எனக்கு அம்மை போட்டுவிட்டது. என் அப்பாவும் இல்லை. அம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாளாம். என்ன செய்வது. நானும் தம்பியும் அம்மையில் பிழைக்கமாட்டோம் என்று இருந்தாளாம், என் அம்மா. ஏதோ மகமாயி அருளால் இருவரும் உயிர் பிழைத்து எழுந்தோம். அம்மை போட்டின (து) நினைவு இருக்கிறது. நான் அம்மை வேகத்தில் பட்டுப்பாவாடை வேணும் என்று கேட்டேனாம்...’
இந்த நன்னாளிலே, 2011 வருட நற்செய்தி யாதெனில், டிப்தீரியா, கக்குவான், டெடெனஸ், காமாலை, கடுஞ்சுரம் ஆகிய தொற்று நோய்களை எதிர்க்கும் மருந்துகள், ஒரே முறையில் லக்ஷக்கணக்கான குழந்தைகளுக்கு அளிக்கும் திட்டம் , டிசம்பர் 17, 2011 அன்று தொடங்கும் என்பது. இதை படிக்கும்போது நினைவில் வருவது 1957 வது வருட மடல், இங்கிலாந்து லிஸ்டர் இன்ஸ்டிட்யூடிமிருந்து சென்னை மாகாண அரசுக்கு: ‘ வருடாவருடம் நீங்கள் அம்மை தடுப்பு மருந்து வாங்குவீர்கள். இவ்வருடம் செய்யவில்லை. உங்கள் ஊர்களில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கான புள்ளி விவரங்கள் இங்கே. எங்களிடம் டிமாண்ட் ஜாஸ்தி. இருப்புக்குறைவு. எதற்கும், உங்கள் நலன் கருதி நாங்கள் ரிசர்வ் செய்துள்ளோம்.’ இதற்கு பொறுப்பான பதில் அனுப்பாததால் வந்த வினை, அந்த வருடம் மக்களை பீடித்த வைசூரி என்று ஆடிட் அப்ஜெக்ஷன். அது சரியா? எல்லை மீறியதா?
- கத்தி:
இந்த தரணி தனில் வாழும் ஜீவராசிகள் எல்லாவற்றுக்கும் காவல் தெய்வமாக சொல்லப்படும் ஐ.நா. பொது மன்றம் ‘லஞ்சம் தவிர்’ என்று ‘கர்ஜித்து’ அதற்கான விழிப்புணர்ச்சி தினமாக அறிவித்த தினம், டிசம்பர் 9. ஒரு லம்பா-செளடா (அனுமார் வால்) தீர்மானம்: எட்டு அத்தியாயம்: 71 பகுதிகள். ஆதியோடந்தமாக ஒழிக்கும் திட்ட வட்டங்கள். எல்லாம் ஏட்டுச்சுரைக்காய். என்னை கேட்டா, சோமாலியா, எரிட்ரியா, ஓமன், சாத், வடக்குக் கொரியா பரவாயில்லை. மற்ற 140 நாடுகளை போல கையொப்பமிட மறுத்து விட்டார்கள். எதற்கு பொய் சொல்லணும் என்ற அணுகுமுறை என்று தோன்றுகிறது. லஞ்சம் பற்றி பல்லாயிரம் பக்கங்கள் எழுத பட்டுள்ளன. ஆன்மிகமாவு அரைத்தரைத்த மாவு என்றால் லஞ்ச லாவண்ய மாவு அரைத்தரைத்தரைத்த மாவு. மாட்டிக்காம கழட்டிக்கிறேன், ஒரு வார்த்தையுடன். சாணக்யர் லஞ்ச ஒழிப்பு, தணிக்கை சாத்திரமெல்லாம் எழுதியிருக்கிறார். பி.கு. நோக்குக. அரசபரம்பரைகள் செய்வதெல்லாம், சரியோ, தப்போ, ஆணையும், கட்டளையுமாக இருந்ததால், அரண்மனை, அந்தப்புரம், இந்தப்புரம் எல்லாம், மக்களின் காசு என்பதுடன் நிறுத்திக்கொள்கிறேன். இங்கிலாந்தின் கலோனிய ஆட்சி, லஞ்ச மஹாப்பிரபுக்களின் குழு. தற்கால இந்தியா நவீன லஞ்சத்திற்கு இலக்கணம் வகுத்தத் தொல்காப்பியன். ஒரு வார்த்தைக்குமேல் ஆகிவிட்டது. கொயட்டாய்ட்டேன்.
இன்னம்பூரான்
09 12 2011
பி.கு. அது பற்றி Asian Journal of Government Audit 1990/1991 என்ற இதழில் நான் கொடுத்த குறிப்புக்களை படித்து விட்டு ஆர்வத்துடன் பல விளக்கங்கள் கேட்டார், ஜப்பான் ஆடிட்டர் ஜெனெரல். அதையெல்லாம், பிரமாண பிரமேயங்களுடன் விலாவரித்து ‘கெளடில்ய இன்னா நாற்பது’ என்ற நாற்பது தொடரிழைகளை இழை இழையென்று இழைக்கலாம். அதை ‘யார் படிப்பார்கள்? ‘ என்று கேட்கிறீர்களா? பாயிண்ட் மேட்.
Spirit of Jenner
Corruption has spread like a deadly virus in India.
உசாத்துணை:
No comments:
Post a Comment