இன்னம்பூரான் பக்கம் -12
சில சமயங்களில் எங்கிருந்தோ எப்பவோ வந்த சிந்தனைகளை மனம் அசை போடுகிறது, நம்மிடம் சம்மதம் கேட்காமலே! மற்றும் சில சமயங்களில் இன்று வந்து கண் முன் நிற்கும் ஒரு கருத்து, நம்மை ஐம்பது வருடங்களுக்கு முந்திய நினைவு ஒன்றுக்குக் கட்டியம் கூறுகிறது. வித்யா சாகர் என்ற குவைட் நண்பரொருவர் எழுதிய கவிதை ஒன்றில் பல சிந்தனைகளை முன்வைத்தாலும், அதிலிலுள்ள, ‘… நான்; நானாகயிருக்கவே முயன்றுக்கொண்டுள்ளேன்!!..’ என்ற ஒரு வரி என்னை அந்தக்காலத்தில் புகழும், இகழும் அளவு கடந்து சம்பாதித்துக்கொண்ட ஆஸ்கார் ஓயில்ட் என்ற ஆங்கில படைப்பாளரிடம் இழுத்துச்சென்றது. அவர் ஒரு வினோத மனிதர். படைப்பாற்றலுக்குப் பஞ்சமில்லை; வம்பு தும்புக்கும் பஞ்சமில்லை. ஜகத்தைப்புரட்டும் உண்மை வாதங்களை அனாயசமாக உதிர்க்கும் அவருடைய ஆற்றலே அலாதி! எனக்கு நினைவில் வந்த அவருடைய மேற்கோள்: “Be yourself; everyone else is already taken.”~ Oscar Wilde.”
‘நீ நீயாகவே இரு. வேறு இடம் காலியில்லை.’ என்று ஏழு சொற்களில் ஒரு வாழ்வியல் தத்துவ விசாரணையையே ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலேயே அவர் துவக்கியதால், ‘ நானாகயிருக்கவே முயன்றால் தான் முடியுமா? / முயன்றால் வெற்றி கிட்டுமா?‘என்ற கேள்விகளுக்கு அவர் ஏற்கனவே விடை அளித்துவிட்டதாகத் தோன்றுகிறது. இனி ‘நான்’ பேசுகிறேன். நானாக இருப்பது இயல்பு, எளிது, தான்தோன்றி. மீன்குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா? என்பது பொருத்தமான உவமை. ஆனால், பிரச்னை வேறு. இந்த ‘நான்’ யார்? தெளிவு காண இரு அணுகுமுறைகள்.
- யதார்த்தம். உள்ளது உள்ளபடி. கண்டதே காட்சி; கொண்டதே கோலம். முன் கோபம், பெண்ணாசை, கருமித்தனம் போன்றவையும் (அவற்றை ‘நான்’ பலவீனம் என்று நாமகரணம் செய்யாததை நோக்குக.) மனித நேயம், கடமை, நேர்மை போன்றவையும், ஒவ்வொன்றாகப் பார்க்கும் பொழுது, சிலரிடம் அதிகமாகவும், சிலரிடம் குறைவாகவும், பற்பல வகைகளில் காணக்கிடைக்கின்றன. அவரவர் விருப்பம் போல் இயங்க சமுதாயம் அனுமதிப்பதில்லை. சிறுவயதிலிருந்தே மூளைச்சலவை நடந்து வருவதால், நேற்றைய ‘நான்’ இன்றைய ‘நான்’ அல்ல; இன்றைய ‘நான்’ நாளை காணாமல் போகலாம்.
இரண்டாவது சிக்கலான அணுகுமுறைக்குப் போகும் முன், சுயமுன்னேற்றம் பற்றி பல நூல்களை எழுதியை மைக் ராபின்ஸ் என்பவர் ‘Be yourself; everyone else is already taken.’ என்ற தலைப்பில் எழுதிய ஜனரஞ்சக புத்தகத்தின் சாராம்சத்தைப் பார்ப்போம்.
- சுயநம்பிக்கையுடன் தன் கருத்தை வெளியிடுக.
- அச்சம் தவிர். நழுவாமல் அதை எதிர்கொள்ளவேண்டும்.
- பிரச்னைகள் வந்தால் அவற்றை நேரடியாக சமாளிக்க வேண்டும். தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
- தனக்கு வேண்டியதை தேடுவதிலும், அடைவதிலும் எதிர்நீச்சல் போட தயங்காதே.
- வாழ்வியல் உறவுகள், நட்பு, ஊழியம் எல்லாவற்றுடன் இணைந்து செயல் படும் போது, தன்னுடைய சுதந்திரத்தை இழக்காதே.
இந்த ஐந்து சூத்திரங்களுக்கும் நடைமுறை பாடங்கள், உவமான உவமேயங்கள், பயிற்சிகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. எனினும், அவரது பட்டியலை கவனமுடன் படித்த பின், நிறைவு காண முடியவில்லை. சிக்கல் தீரவில்லை. விடை தென்படவில்லை. முதலில், அவருடைய பட்டியலை காண்போம்.
- தடம் மாறாதே;
- ஆணையிடாதே;
- தன்னை புரிந்து கொள்;
- பயம் வரும். அதை மாற்றிக்கொள்;
- தன்னிலை கூறுக;
- துணிவுடன் செப்பு;
- சுயமதிப்பைப் போற்று.
சாராம்சம் மட்டும் அளித்து நூல் விமர்சனம் செய்வது என் விருப்பமல்ல. உசாத்துணையில் கொடுத்திருக்கும் அந்த நூல் கணக்கற்ற மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் உதவியிருக்கிறது. காரணமில்லாமல் அவருக்கு பல விசிறிகள் வலம் வரவில்லை. இருந்தாலும் அந்த நூல் “Be yourself; everyone else is already taken.”~ Oscar Wilde.” என்ற ஆஸ்கார் ஒயில்டின் நிகரற்ற பொன் வாக்குக்கு பொருத்தமான உரை விளக்கமாக அமையவில்லை.
நூலாசிரியர் கொடுத்தத் தலைப்பின் முழு உருவம்: ‘Be yourself; everyone else is already taken: Transform Your Life with the Power of Authenticity’ அதாவது: நிஜ வாழ்க்கை வாழ கற்றுக்கொள். அந்த சொல்லை அவர் பலமுறை உபயோகித்திருந்தாலும், நிஜத்தின் நிஜ முகம் கண்டு அறிந்து, புரிந்து கொண்டு தனது வாழ்வியலை நிர்ணயத்துக்கொள்ள நாம் வேறு இடம் செல்ல வேண்டும். ஒரு ஃப்ளேஷ்பேக்: கல்லூரியில் படிக்கும் போது காசுக்குப் பஞ்சமில்லாத நாள் கிடையாது. சில ‘அரிய பெரிய’ தியாகங்கள் (பட்டினி தான்; வேறு என்ன?) செய்து சாமுவேல் ஸ்மைல்ஸ் அவர்களின் ‘சுய உதவி’ என்ற நூலை வாங்கினேன். காலின்ஸ் பதிப்பு என்று ஞாபகம். அதன் முதல் பக்கத்தில் இந்த Authenticity பற்றி சில மேற்கோள்களை எழுதி வைத்துக்கொண்டேன். அது என்னை படுத்திய பாடு பற்றி, இன்னம்பூரான் பக்கம் -13ல் எழுதுகிறேன். இந்த கட்டுரை நீண்டு விட்டது.
இன்னம்பூரான்
உசாத்துணை:
Mike Robbins: Be Yourself, Everyone Else is Already Taken: Transform Your Life with the Power of Authenticity
பிரசுரம்:http://www.atheetham.com/?p=4169
No comments:
Post a Comment