அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I
ஒரு மனோவாக்கு அதிசயமாக பயணித்து, நிரந்தமான கொடையாக குடை விரித்து, உலகை ஒரே இனமாக பாவித்து, 1901லிருந்து கிட்டத்தட்ட 800 சாதனையாளர்களை பாராட்டி, சுடராழி போல் திகழ்கிறது என்றால், அது தான் நோபெல் பரிசு. அதற்கான திட்டம் ஒன்றை வகுத்து, தன் செல்வத்தில் 94 % பங்கை அதற்காக ஒதுக்கி வைத்து எழுதிய உயிலில் திரு. ஆல்ஃப்ரெட் நோபெல்் கையொப்பமிட்ட தினம், நவம்பர் 27, 1895. திரு. ஆல்ஃபெரட் நோபல் ஒரு விஞ்ஞானி. டைனமைட் என்ற வெடிமருந்தை கண்டு பிடித்தவர். அதன் விளைவாக, அபரிமிதமான செல்வம் ஈட்டியவர். (பிற்காலத்து ‘அபகீர்த்தி போஃபோர்ஸ்’ இவருடைய சொத்து தான்.) இறவா வரம் பெற்ற இந்த பரிசில் வந்த விதம் விந்தை. ‘மரணத்தின் வியாபாரி இறப்பு’ என்று அவருடைய சகோதரனின் மரணத்தை பற்றி வந்த செய்தி, இவரது மனோதர்மத்தை அலக்கழித்தது. திடுக்கிட்ட ஆல்ஃப்ரெட், இந்த முடிவுக்கு வந்தார். ஐந்து துறைகளுக்கு நோபெல் பரிசில். 1968லிருந்து பொருளியலுக்கும்; அது ஸ்வீடன் மத்திய வங்கியின் உபயம். நோபெல் பரிசு பற்றி சர்ச்சைகள் பல உண்டு. கணக்கு சாத்திரத்துக்கு பரிசில் இல்லை! ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டும், அமைதி பரிசில் மஹாத்மா காந்திக்கு மறுக்கப்பட்டது. பெர்னார்ட் ஷா நோபெல் பரிசை, கேலி செய்து, நிராகரித்தார். சில வருடங்கள் பரிசில்கள் அறிவிக்கப்படவில்லை. இத்யாதி.
பல வருடங்களுக்கு முன் உலக அளவிலான பொது அறிவை வளர்ப்பதை பற்றி பேச்சு வந்த போது, நோபல் பரிசின் வரலாறு பெரிதும் உதவும் என்றேன். அவ்வப்பொழுது அதை படிப்பதும் என் வழக்கம். இடம், பொருள், ஏவல், ஆர்வம், அவற்றின் எல்லைகள், வாசக ருசி ஆகியவை கருதி, ஒரு சிறிய அறிமுகத்துடன் முடித்து விடுகிறேன். அதற்காக, 111 வருடங்களாக பாராட்டப்பெற்ற சாதனையாளர்களில் சிலரை பற்றி மட்டும், சில வரிகள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்றாலும், எனக்கே இப்படி தந்தி பாஷையில் கோஷமிடுவதில் சந்தோஷம் இல்லை. என்றோரு நாளில், உரிய முறையில் விளக்கமாக, நோபெலர்கள் பற்றி ஒரு மின்னூல் வரவுக்கு இது தூண்டிலாக இருக்கட்டும். நான் எழுதினால் என்ன? மற்றவர்கள் எழுதினால் என்ன?
- இலக்கியம்:
1999ல் இலக்கிய நோபெலர், கந்தர் க்ராஸ் (Günter Grass). இலக்கியம் படைத்த தத்துவஞானி. தத்துவம் பேசும் படைப்பாளி. நோபெல் பரிசு பெறும் போது அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள்.
‘கதை சொல்லிகள் இல்லாத காலமே கிடையாது...படிக்காத மேதைகளின் கதைகள் சுவை மிகுந்தவை...வாசகர்களின் ஆரவம் குன்றினாலும் கவலையில்லை. அவர்களே கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்...சைனா, இந்தியா, பெர்சியா, பெரு நாடு அங்கெல்லாம் கதை சொல்லிகள் தாம் இலக்கியம் படைத்தார்கள்...மறக்கவேண்டாம்.கதையின் உற்பத்தி உதட்டில். பேச்சு மொழி இலக்கியம் தான் முதல் வரவு...நான் எழுத்தாளனாக ஆனதின் பின்னணி: பகற்கனவு, சொல் விளையாட்டு, பொருத்தமான பொய் சொல்வதில் உள்ள சுகம் & அரசியலின் தலையீடு...ஐ.நா.வில் வில்லி ப்ரேண்ட் அவர்கள் ‘பசியும் ஒரு போர்க்களமே’ என்று அதிரவைக்கும் முழக்கம் செய்த போது நான் அங்கிருந்தேன். அப்போது நான் எழுதிவந்த ‘குப்புறவிழுந்தான்’ என்ற புதினம், மிதமிஞ்சிய விருந்தும், பட்டினிச்சாவும், சாப்பாட்டு ராமன்களும், அன்றாடம் காய்ச்சி நோஞ்சான்களும், எருமை நாக்கின் ருசியும், எச்சில் பொறுக்கியும் போன்ற வாழ்வியல் அடித்தளங்களை பற்றி இருந்ததும் ஒருமிக்க கருத்துக்கள்...”.
2. அமைதி:
1999ம் வருட நோபெல் பரிசில் ஒரு தன்னார்வ அமைப்புக்கு தரப்பட்டது. ப்ரஸ்ஸல் நகரில் 1971 ம் வருடம் பத்து ஃபெரன்ச் டாக்டர்களால் துவக்கப்பட்டு, 20 நாடுகளில் அலுவலகங்கள் அமைத்து 70 நாடுகளில், தேவைக்கேற்ப, அந்தந்த நாட்டு அரசுகளின் அழைப்புக்கு காத்திராமல், மருத்துவப்பணி செய்யும் அந்த அமைப்பின் பெயர்: ‘எல்லை கடந்த மருத்துவர்கள்’. செஞ்சிலுவை சங்கத்தின் போக்கின் மீது இருந்த அதிருப்தியால், இந்த அமைப்பு உருவாயிற்று.1972ல் நிக்கராகுவே பூகம்ப நிவாரணப்பணியில் எடுத்த நற்பெயர், தொடர்ந்த நற்பணியினால், 1999ல் நோபெல் கிடைக்க ஹேதுவாயிற்று. அநியாயத்தை எதிர்க்கும் தன்மை இருப்பதால், சில நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட அனுபவமும் இதற்கு உண்டு.
3. மருத்துவம்:1912, வருடத்து நோபெல் பரிசு டாக்டர் அலெக்ஸிஸ் கெரல் என்ற ஃபெரன்ச் டாக்டருக்கு, ரத்தக்குழாய்களுக்கு தையல் போடும் விதம் கண்டு பிடித்ததற்கு. சொல்லப்போனால், இவருடைய சாதனை போர்முனை ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகளுக்கும், பிற்கால உறுப்பு அறுவடை/மாற்றல் சிகிச்சைக்கும் அபூரவ்மான வழி வகுத்தது. அவருடைய ‘மனிதன்: நாம் அறியா மர்மங்கள்’ என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது.
4. பொருளியல்:
1998ம் வருட நோபெல் பரிசு அமார்த்தியா சென். பொருளியலின் மனசாக்ஷி என்று அழைக்கப்படும் அமார்த்தியா சென் ஒரு நேர் காணலில் சொன்னது: ‘பொருளியல் ஆளுமையில் அரசுக்கும் பங்கு உண்டு; சுதந்திர சந்தைக்கும் பங்குண்டு;திட்டமிடுவதும் வேண்டும். சலுகைக்களுக்கும் இடமுண்டு; ஜனநாயகமும், மனித உரிமையும் முக்கியம் என்பது மட்டுமல்ல; சமுதாய முன்னேற்றத்திலும், பொருளியல் வளர்ச்சிக்கும் அவை இன்றியமையாதவை...’.
பரிசில் கிடைத்த சமயத்தில், அவர் கேம்பிரிட்ஜ் ட் ரினிட்டி காலேஜின் மாஸ்டர் (தலைவர்) ஆக இருந்தார். கேம்ப்ரிட்ஜின் 31வது நோபெல் சாதனையாளர். ட் ரினிட்டியின் சமீப கால ஐந்து மாஸ்டர்களில் மூவர் நொபெல் சாதனையாளர்கள்.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்
27 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment