அன்றொரு நாள்: நவம்பர் 17
இந்தியாவுக்கு நுழைவாயில்
பாமர கீர்த்தியில் அஃறிணைக்கும் இடம் உண்டு. ஏன்? உயிர்மையுமுண்டு. வாழ்வாதார உரிமையும் உண்டு. சொந்தம் கொண்டாடும் பந்து ஜனங்களுமுண்டு. நவம்பர் 17,1869 தான் சூயஸ் கால்வாய் என்ற ‘இந்தியாவுக்கு நுழைவாயில்’ திறக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதனுடைய உயிர்மையை விவிலியத்திலேயே ‘எக்ஸோடஸ்’ பகுதியில் காண்கிறோம். கி.மு.1470லியே கடற்படைகள் இம்மாதிரியான குறுக்கு வழியில் வந்ததாக, சரித்திர ஆதாரங்கள் கூறுகின்றன. பின்னர்,ராமுஸெஸ், நேச்சோ 2 ஆகிய மன்னர்களும், கி.மு. 522லிருந்து 486 வரை அரசாண்ட பாரசீக மன்னர் டேரியஸ்ஸும், நைல் மஹாநதியையும் சிவந்த கடலையையும் இணைக்கும் இந்த அமைப்பை புனருத்தாரணம் செய்ததாக, வரலாறு கூறுகிறது. கடல் வணிகம் பெருக, அது அக்காலமே உதவியது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இப்படியொரு கால்வாய் இருந்ததற்கு ஆதாரங்கள் உளன. நெப்போலியன் காலத்து அகழாய்வு ஆராய்ச்சிகளும் பழங்கால சூயஸ் கால்வாய் ஒன்றை இனம் காண்பித்தன. ேநச்சோ 2 மன்னர் காலத்தில் எல்லாம் ஆரூடம் கேட்பது வாடிக்கை. ஒரு ஆரூடம் சொல்லியதாம்: ’ விட்டு விடு. உனக்கு ஆதாயமில்லை. மற்றவர்களுக்குத்தான் இது உதவும்’, என்று. பொருத்தமானது தான், சில ஆயிர வருடங்களுக்கு பிறகு. சூயஸ் கால்வாய் கலோனிய ஆங்கில அரசுக்கு உதவியது. எகிப்து இரண்டாம் பக்ஷம். அந்த கால்வாயை 26 ஜூலை 1956 அன்று, எகிப்து தேசீயமயமாக்கிய பிறகும், பற்பல சர்வதேச இழுபறிகள் ஆனபிறகும் ‘ சூயஸ் கால்வாயை, யுத்தம் நடந்தாலும், சாந்தி நிலவினாலும், எந்த நாட்டுக்கப்பலும் பயன்படுத்தலாம் என்ற விதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த கால்வாயை கட்டி முடிப்பதற்குள் ஆயிரம் தாவாக்கள். தற்காலம், பெட் ரோலியத்துக்காக, மேற்கத்திய நாடுகள், மனசாட்சியிலிருந்து ஜனநாயகம் வரை பணயம் வைப்பது போல, சூயஸ் கால்வாயும், அவர்களின், குறிப்பாக, ஆங்கிலேய கலோனிய பேராசைக்கு இலக்காக இருந்தது. இது வரை, ஐந்து தடவை இது அடைக்கப்பட்டது. ஒரு தடவை எட்டு வருடங்களுக்கு.
தற்கால சூயஸ் கால்வாயின் தலபுராணம்: 1854ல் ஃபெரென்ச் ராஜதந்திரியும் பொறியாளரும் ஆன விகோம்டெ ஃபெர்டினாண்ட் மேரி டெ லெஸ்ஸப்ஸ் என்பவரின் தூண்டுகோலால் எகிப்து உடன்பட, 1858ல் ஒரு கம்பெனி துவக்கப்பட்டது. 200 மிலியன் ஃப்ரென்ச் காசுகள் மதிப்பு. 99 வருடங்களுக்குப் பிறகு எகிப்துக்கு சொந்தம் என்று உடன்பாடு. முதல் போட்டது எகிப்தும், ஃபிரான்ஸும். சில தெனாலி ராமன் கதை சம்பவங்களுக்குப் பிறகு, நவம்பர் 17, 1869 அன்று, இந்த கால்வாய் சர்வ தேச கடல் பிரயாணத்துக்குத் திறக்கப்பட்டது. பலத்த கொண்டாட்டம், சில வாரங்களுக்கு. உலகின் பல பெருந்தலைகள் கலந்து கொண்டன. 1875ல் லாகவமாக, பிரிட்டீஷ் அரசு எகிப்தின் பங்கை, 400 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கிக்கொண்டது. பிரிட்டீஷ் கலோனியத்துவமா, சும்மாவா! சர்வதேச கால்வாயான சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ராணுவம் வைக்க முடிவு செய்தது. 1936ல் அதற்கான ஒப்பந்தம் ஒன்றை எகிப்துடன் போட்டுக்கொண்டது. அந்த ஒருதலைப்பக்ஷ ஒப்பந்தத்தின் வலுவை படிப்படியாகக் குறைப்பதாக, ஒரு அரைகுறை மனது ஒப்பந்தம், 1954ல். 1956ல் தேசீயமயமாக்கும்வரை அந்த ‘இரண்டு பெண்டாட்டிக்காரன்’ நிலை நீடித்தது. அதன் பிறகு பிரிட்டீஷ்-ஃப்ரென்ச்-இஸ்ரேல் படையெடுப்பு. கால்வாய் அடைக்கப்பட்டது, அக்டோபர் 1956லிருந்து மார்ச் 1957 வரை. எகிப்து-இஸ்ரேல் போரின் காரணமாக ஜூன் 1967லிருந்து 1975 வரை அடைப்பு. இது எல்லாமே நினைவில் உளன.
சொத்து எகிப்தின் நீர், நீச்சு, நிலம். பத்து வரவு ஆங்கிலேய கலோனிய மோகம். போருக்குப் பிரமேயம், இஸ்ரேலின் இனப்பற்று. விளைவு: கடல் வாணிகம் பாதிப்பு. இப்போது ஒரு உபகதை கேளும். (யாராவது கேக்கறவா இருந்தால்!) உப விளைவு: நோபல் பரிசு, கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பியர்சன் அவர்களுக்கு. பிரிட்டன் நாசத்தை நாட செல்வதாகக் கருதிய பியர்சன் முதல் தடவையாக ஐ.நா.வின் அமைதிப்படையை அங்கு நிறுத்தி, எகிப்தும், இஸ்ரேலும் அடங்கி நடக்க வழி வகுத்தார். அமெரிக்காவுக்கும் தன் பங்குக்கு, தன்னிடம் இருந்த பவுண்டு செல்வத்தை விற்று, அதன் மதிப்பை குறைக்கப்போவதாக பயமுறுத்தியது. இங்கிலாந்தில் ஏகப்பட்ட எதிர்ப்பு.
எது எப்படியோ, சில நல்வரவுகள். ஐ.நா. அமைதி காக்க உருப்படியாக செயல்பட்டது. இது முதல் தடவை; கலோனிய ஆர்பாட்டங்களுக்கு மவுசு குறைய தொடங்கியது; அகில உலக அளவில், தேசாபிமானம் தலையெடுத்தது. ‘வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி’, பிற்காலம் எகிப்தில் யதேச்சாதிகாரம் கொடி கட்டி பறக்க, வல்லரசுகளும் அதற்கு துணை போக, இந்தியாவும் ஒத்தூத, 2011 ல் மறுபடியும் ஒரு புரட்சி!
இன்னம்பூரான்
17 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment