அன்றொரு நாள்: டிசம்பர் 1
ப்ளாக்கும், ப்ளேக்கும்
அரை நூற்றாண்டுக்கு முன் அமெரிக்காவின் நிறபேதம் தலை விரித்தாடிக்கொண்டிருந்தது என்பதும், ஒரு தனி மனுஷி தான் அதை முறியடிப்பதில் முந்நிலை வகித்தார் என்பதும், கடந்த ஐம்பது வருடங்களுக்குள் இந்த நிற பேதம் கணிசமாக குறைந்து விட்டது என்பது மட்டும் அல்லாமல், அந்த நாட்டின் ஜனாதிபதி நிறபேதத்தால் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்பதும் வரலாறு. இது அமெரிக்காவுக்கு பெருமை சேர்க்கிறது. இது எளிதில் கிடைத்த சாதனை அன்று. பொது மக்களின் ஏகோபித்த மனமாற்றம் கண்கூடு. கன்னங்கரேர் அடிமைகள், 1865க்கு முன்னால் ~‘நிக்கர்’ என்ற இழிச்சொல் ~’நீக்ரோ’ ~‘ப்ளாக்’ (கருப்பன்) ~ ‘அஃப்ரோ-அமெரிக்கன்’. இது எல்லாம் சமத்துவம் நோக்கிய மாற்றங்கள். அநேகமாக, எல்லா துறைகளிலும், இந்த இனம் முன்னேறி வருகிறது. ஆங்காங்கே குறைகள் இல்லை என்று சொல்ல இயலாது. அலபாமாவில் சுலபமா? இருந்தும், முன்னேற்றம் போற்றத்தக்கது. நம் நாட்டிலோ இரட்டை டம்ளர் மனப்பான்மைக்கு, உரமிட்டு, நீர் ஊற்றி, நாற்று நட்டு, வளம் சேர்க்கிறார்கள், அரசியல் கட்சிகள். இது நிற்க.
ஒரு ப்ளாக்குக்கும்’, ஒரு ‘ப்ளேக்குக்கும்’ தர்மயுத்தமொன்று நடந்த தினம், டிசம்பர் 1, 1955. திருமதி. ரோஸா பார்க்ஸ் என்ற அந்த கறுப்பி மழலை பருவத்தில் குக்ளுஸ்கான் என்ற பயங்கரவாதிகளின் கொடுமை, கறுப்பர்களுக்கு சவுக்கடி, வீடு கொளுத்தல் போன்ற சம்பவங்களுக்கு நடுங்கி வாழ்ந்தவர். பிற்காலம், கணவரோடு சேர்ந்து உரிமை போராட்டங்களில் கலந்து கொண்டவர். அலபாமா மாநிலத்தின் மாண்ட்கோமரி என்ற ஊரில்‘ தேசீய நிறபேதத்தால் பாதிக்கப்பட்டோர் முன்னேற்ற’ கழகத்தின் பொறுப்பாளர்களாக பணி ஆற்றியவர்கள் இருவரும். 1943லியே கறுப்பருக்கான பஸ்ஸின் பின்பக்கத்து வழியில் ஏற மறுத்ததற்காக, ஜேம்ஸ் ப்ளேக் என்ற பஸ் ஓட்டுனர், இவரை வெளியேற்றினார். அதே ஓட்டுனருடன் டிசம்பர் 1, 1955 அன்று லடாய். ரோஸா வால்-மார்ட் போன்ற ஒரு அங்காடியில் தையல்காரி. (மற்றொரு இழையில் அங்காடி சங்கடங்கள் பேசப்படுகின்றன. ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஏழை பாழைகளை, அடி மாட்டுக்கூலி கொடுத்து வருத்துவதில், இந்த அங்காடிகளும், பெரிய ஹோட்டல்களும் லீடர்கள். ந்யூ யார்க்கில் உலகப்புகழ் மரியட் ஹோட்டலில் ஓரிரவு தங்கினேன். பெரும்பான்மை சமூகம் பணி பெற்றுக்கொள்வதில் பேதம் யாதும் காட்டுவதில்லை. முதலாளித்துவ கோட்பாடு: ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயிலாண்டி.’ விழுந்து விழுந்து என்னை உபசரித்த அஃப்ரோ-அமெரிக்கன் பெண்மணியிடம் மென்மையாக பேச்சுக்கொடுத்த போது தான் ஆணுடுப்பு தையல்காரி ரோஸாவின் களைப்பு புரிந்தது.) நாள் பூரா தையல் வேலை. கை கால் குடைச்சல். பஸ்ஸில் ஏறி அமர்ந்தால், ஓட்டுனர் ஜேம்ஸ் ப்ளேக்! ரோஸா அமர்ந்தது பெரும்பான்மை சமூகத்திற்கு ரிசர்வ்ட். ஓட்டுனர் முறைத்தார்.பெரும்பான்மை சமூகத்தின் பயணிகள் ஏற, இவரை இடத்தை காலி செய்ய வற்புறுத்தினார். இவர் மறுக்க, அவர் முறைக்க, போலீஸ் வந்தது. நிற வேற்றுமை சட்டத்தை மீறிய குற்றம் சாற்றப்பட்டது. கைது. டிசம்பர் 5, 1955 அன்று கோர்ட்டில் வழக்கு. பத்து டாலர் அபராதம். நான்கு டாலர் வழக்குச்செலவு. போட்றான்னான்! அன்று மாலை சிறுபான்மை இனத்து ஹர்த்தால் தொடங்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் வந்துள்ள கூட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங் பேசினார். ஹர்த்தால் ஒரு வருடத்துக்கு மேல், 381 நாட்கள் தொடர்ந்தது, வரலாறு காணாத வகையில். வாசகர்களே! சற்றே சிந்தியுங்கள். வேலை போச்சு; கூலியில்லை; பட்டினி; தர்மயுத்தம் தொய்வில்லாமல் நடக்கிறது. டிசம்பர் 20, 1956 அன்று உச்ச நீதி மன்றம், இந்த அநீதி சட்டத்தை தள்ளுபடி செய்கிறது. கையோடு கையாக, அங்காடி ரோஸாவை வேலை நீக்கம் செய்து விடுகிறது. அவரும் டெட்ராய்ட் நகருக்கு புலன் பெயர்ந்து 20 வருடங்கள், ஜான் கான்வெயர்ஸ் என்ற சட்டசபை அங்கத்தினருக்கு உதவியாளராக பணி செய்கிறார். அக்டோபர் 2005ல் கல்யாணச்சாவு, 92 வயதில்.
நண்பர்களே, இந்த தனி மனுஷி செய்த புரட்சி அமெரிக்க வரலாற்றில் அருமையான பதிவு. அநீதியை எதிர்க்கத்தான் வேண்டும். அசட்டையை துரத்தியடிக்கத்தான் வேண்டும். உரிமைக்கு போராடத்தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் நான் புரட்சி ஓங்குக என்கிறேன். ஈற்றடி நோக்குக:
1948ல் காந்தி மஹானுடன் ஒரு உரையாடல். அக்காலத்தில் நீக்ரோ என்ற சொல் வழக்கில் இருந்தது. வந்திருந்த நீக்ரோ பெண் சொல்கிறார்:
‘உங்கள் அஹிம்சை எனக்குப் புரியவில்லை. என் தம்பி கசை அடிப்பட்டுத் துடிக்கிறான். அவனை அடிப்பவர்களை தாக்காமல், நான் பார்த்துக்கொண்டு இருக்கலாமா? என்ன பேச்சு உங்களது?’
பதில்:
‘அம்மா! உனக்கு பதில் சொல்ல எனக்கு திராணி இல்லை. இந்த ஜன்மத்தில் என்னால், உனக்கு பதில் அளிக்கும் தெளிவு எனக்கில்லை. அது அடுத்த ஜென்மத்தில் பிராப்தம் ஆகலாமோ என்னமோ?’
இன்னம்பூரான்
01 12 2011
உசாத்துணை:
|
No comments:
Post a Comment