அன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்.
...
இது மிகவும் பிரத்யேகமான இழை. தலைமாந்தர்களுக்கு பெயர் கிடையாது. ‘அவன்’ ஆணழகன். திடகாத்திரமான உடல். சிரித்தமுகம். வசீகரபுருஷன். விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளை போல் எத்தனையோ பெண்கள், பறந்து வந்து இவன் வலையில் விழுந்திருக்கிறார்கள்! எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள்.இனியும் இருப்பார்கள். ஆனால், இவனை போல ஸ்த்ரீலோலன், ஏழுலகும் தேடினாலும், கிடைக்கமாட்டார்கள். திரைப்படம் என்றால், இவன் தான் ராஜா. இல்லை என்று சொல்லவில்லை. எல்லாம் பாய்ஸ் கம்பேனி நாடகமேடை தான், அஸ்திவாரம். ‘அகல் விளக்கு, ஏடு, ரூபி’ ட்ராமா ஞாபகம் இருக்கோ? ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மியோட எத்தனை கூத்து அடிச்சான்! அவளோட அம்மா தெருவிலே மண்ணை வாரி இறைச்சா. கம்பெனி முதலாளில்லெ, அம்பட்டச்சிக்கு காசு கொடுத்து, அழிச்சிப்போட்டாஹ. இவன் மாதிரியே, மூக்கும் முழியுமா ஆம்பிளை பிள்ளை. பொழச்சிருந்தா, நாலு குட்டிகளை நாசம் பண்ணிருக்கும். போறது விடு. ட்ராமாக்காரங்க எல்லாரும் சினிமாவுலெ உருப்படமுடியுதா? எத்தனை கொடுக்கல் வாங்கல்! கொடுக்காம வாங்கல்! கொடுத்தும் வாங்கமுடியாமை! இவன் கூட நடிக்க வந்தவன் தான் மோஹன். அவனும் வசீகரா தான். ஆனால், நாக்கு அழகிப்போயிடும்டா, குத்தம் சொன்னா! ஶ்ரீராமன் மாதிரி ஏகபத்தினி விரதன். இந்த மேனாமினிக்கி சினிமாக்காரியெல்லாம் என்னமா கொக்கி போட்டாஹ! இவன் மசியவே இல்லை. பர்த்தியா, சினிமாவும் இவனுக்கு மசியலை. ஒரே ஒரு சினிமா. அதுவும் ஃப்ளாப்பு. நம்ம ‘நர்த்தன கோபாலா’ நாடக கம்பேனிலெ ஆர்மோனியம் வாசிச்சுல்லெ, அரைப்பட்டினியா செத்தாரு.
நான் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘செந்தமிழ் கலைஞன்’,‘கல்லானாலும் கணவன்’ அது, இதுன்னு ஃபேன்சி சினிமாக்களில், ‘அவன்’ பாக்ஸ் ஆஃபீஸ் ஹீரோ ஆனதும், கன்னா பின்னான்னு எல்லாரும் அவனுக்கு அவார்டு கொடுத்ததும், பனியன் மாத்திக்கற மாதிரி, இவன் பொஞ்சாதிகளை மாத்திக்கறதும் பத்தி பேச வர்ல்லெ. எனக்கு வேறே வேலை இல்லை? உனக்குத்தான் தெரியுமே. நான் அன்பு, கனிவு, பாசம், சினேகிதம், அபிமானம் இதெல்லாம் பற்றி மட்டும் தான் பேசுவேன். சேதி தெரியுமா? ஒரு குறளி வந்து சொல்லுது: 'இதெல்லாம் வாணாம். நீ உள்ளொலி சொல்றதை மட்டும் சொல்லு' என்று! ஒரு கமலஹாசன் சினிமா. பேரப்பிள்ளை பல்லுல்லெ நாக்கைப்போட்டு, வாராது வந்த தாத்தாவிடம், ‘நீங்கள் நல்லவரா? இல்லெ கெட்டவரா’ என்று கேட்பான். அந்த மாதிரி தான் நம்ம ஹீரோ.‘அவன்’ கெட்டவன் தான். ஆனால் நல்லவன்.
‘அவள்’ பேரழகி என்று சொல்ல முடியாது. ஆனாலும் குட்டி சூடிகை. சுண்டி இழுத்துடுவ. விடலை பசங்கெல்லாம் திரும்பித் திரும்பில்லெ பாக்கிறாஹ. குடும்பமே, அப்பன், ஆத்தாள், அக்கா, தங்கை, தம்பி எல்லாம் ஸ்த்ரீ பார்ட் க்ராஜுவேட் தான். சில்லரை நடிகையாகத்தான் நுழைஞ்சா. முதல் சினிமா ‘இரட்டை நாயனமும், ஒத்தும்’. அப்படி, இப்படி 27 சினிமால்லெ நடிச்சுட்டா. முதல்லெ ஒரு சினிமாக்காரனை வளைச்சுப்போட்டாள், ‘அவள்’ என்றாலும், ‘அவனும்’ ‘அவளும்’ கண்ணாலம் பண்ணிக்கணும்னு எளுதி வச்சுருக்கடா. அது ஆண்டவன் கட்டளை. ஆமாம். மூச்சு, கீச்சு விடப்டாது. ‘கம்’நு சொல்றதைக் கேளு.
நிஜக்கதைடா! உன் தலெ மேலெ சத்யம்.‘ராஜா ஹரிச்சந்திரா’ சினிமா வரெச்செ, நீ பொறக்கக்கூட இல்லை. 1955ம் வருடம். ‘அவன்’ தான் ராஜா, ‘அவள்’ தான் சந்திரமதி. என்ன கேட்டே? பி.யூ.சின்னப்பாவும், பி.ஜி.கண்ணாம்பாவுமா என்றா கேட்கிறாய்? அந்த சினிமா 1944ல் வந்தது. அவர்களுக்கும், என் நிஜக்கதைக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது. ஆமாம். நான் மேல்பூச்சுக்காக இந்த புருடா விட்டேன். தொணத்தாம கேளு.
1955லெ ‘அவனுக்கு’ ஒரு ஒய்ஃப் இருந்தாள். நாலாவதோ, அஞ்சாவதோ! அல்லின்னு பேர் வச்சுக்கோங்கோ. சினிமாலெ சந்திரமதி,‘அவள்’. அல்லி இல்லை. பத்திக்கிச்சு, பஞ்சும் பொறியும்! ஒரு நாள், ‘அவள்’ மயங்கி விழுந்தாள். ஐயா ஹீரோல்லெ. டாக்டர் கிட்ட ‘அவளை’ கூட்டிக்கிணுப்போறான். டாக்டர் ‘அவனை’ கூப்பிட்டு சொல்றார்,”உன் ‘மனைவிக்கு’ கான்சர் முத்திப்போச்சு. ஆசையா வச்சுக்கோ. கேட்டதை வாங்கிக்கொடு. கொஞ்சநாள் தான் இருக்கு. என் அனுதாபங்கள்.” அவரு காசை வாங்கிட்டு போய்ட்டார். ‘அவன்’ ஒரு சுருட்டை பத்தவச்சுக்கிணு, தண்ணி போட்டபடி ரோசனை பண்ணான். நேரே போய் அல்லி கிட்டே சொல்றான். ‘நான் தான் ‘அவளை’ பாத்துக்கணும். ‘அவளுக்கு’ வேறெ நாதியில்லை. அவளை கண்ணாலம் பண்ணிக்கணும். அப்பொத்தான் கவனிக்கமுடியும். இல்லையா? நாம விவாகரத்து செஞ்சிடுவோம். அவள் காலத்திற்கு அப்றம், உன்னை கட்டிக்கிறேன். என்னா சொல்றே?’ அல்லிக்கு சம்மதம். ‘அவள்’ ஒருத்தியை மட்டும் தான் ‘அவன்’ அன்புடன் நடத்தினான். மற்ற பெண்களை காமத்துடன் நடத்தினான் என்பது தான் உண்மை வரலாறு.
‘அவன்’ ‘அவள்’ மேலெ ஆசை வச்சு,கண்ணாலம் கட்டிக்கிட்டான், 1957ல். கடைசி வரை, ‘அவளுக்கு’ தனக்கு புற்று நோய் என்று தெரியாது. அனீமியா என்று கற்பனை அவளுக்கு. ஒரு நாள் நடு ராத்திரி ‘அவள்‘ ‘அவனை‘ எழுப்பி சொல்றா. ‘எனக்கு என்னமோ பண்றது. ரத்த சோகை என்னை கொன்னுடும் போல இருக்கு. நீயாக்கொண்டு என்னை இம்மாம் ஆசையா வச்சுருந்தே. இந்த ரண்டு வருஷம் எனக்கு நூறு வருஷம் மாதிரி.’ என்ன தான் காமப்பித்து பிடிச்சு அலஞ்சவன் என்றாலும், ‘அவளிடம்’ நேசம் கொண்டதில், ‘அவன்’ வாழும் தெய்வம் ஆகிவிட்டான். ஒத்துக்கிறயா? ஹூம்! புத்து நோய் முத்திப்போயி, ‘அவள்’ இரண்டு வருஷத்துக்குள்ளே போய் சேர்ந்தாள். ‘அவன்’ அல்லியை மறுகண்ணாலம் பண்ணிக்கல்லெ. அவ தான், இது தான் சாக்கு என்று கள்ளக்காதலனை கட்டிண்டுட்டாளே. கதையும் முடிந்தது.
இன்று அவனுடைய பிறந்த நாள். அதான் பாமரகீர்த்தி.
(தொடரும்)
இன்னம்பூரான்
05 03 2012
|
No comments:
Post a Comment